உதகை : கூடலூரில் இருந்து கோவையை நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்ததால் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தாளூரில் இருந்து ஞாயிறன்று கோவையை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை கூடலூரைச் சேர்ந்த ஜெகநாதன் (35) என்பவர் ஓட்டி வந்துள்ளார். நாடுகாணி பாண்டியாறு பகுதியில் வரும்போது, எதிரே கூடலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சந்திரமோகன் (50) என்பவர் வந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியுள்ளது. இதனையடுத்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் இடது புறம் திருப்பிய போது பத்தடி பள்ளத்தில் தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணித்த 40 பேர் காயமடைந்தனர். இவர்களை அருகிலுள்ள பொதுமக்கள் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில்படுகாயமடைந்த 8 பேர் உதகை அரசு மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் இரு சக்கர வாகனத்தில் வந்து படுகாயமடைந்த சந்திரமோகனும் மீட்கப்பட்டு பெருந்தல் மன்னார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: