நிலச்சரிவில் சிறுமி பலி
ஜம்மு,
ஜம்மு -காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 வயது சிறுமி பலியானார். ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவால் நகரில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள சத்யார் கிராமம் அருகே ஒரு குடும்பத்தினர் அமைத்திருந்த தற்காலிக கூடாரம் நிலச் சரிவில் சிக்கியது. இந்த சம்பவத்தில் சபீனா கவுசர் (9) என்ற சிறுமி பலியானாள். அத்துடன் அவர்களது குடும்பத்தின் 3 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

துறைமுக விரிவாக்க அனுமதி ரத்து
எண்ணூர்,
எண்ணூர் மீனவர்களின் போராட்டத்தால் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், எண்ணூர் துறைமுக விரிவாக்கத்துக்கு அனுமதி மறுத்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கிழக்கு கரைகளில் புதிய துறைமுக வசதிகள் அமைப்பதற்கான காமராஜர் துறைமுகத்தின் திட்டத்தை நிராகரித்துள்ளது.

தெலுங்கானாவிலிருந்து அரிசி
சென்னை,
நியாயவிலைக்கடையில்அரிசி பற்றாக்குறை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2613 டன் அரிசி விழுப்புரம் வந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பொழிந்து வருவதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் நெல் நடவு செய்ய துவங்கி உள்ளனர்.இதனால் பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பனியில் உறையும் காஷ்மீர்
காஷ்மீர்,
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாநில முழுவதும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வளையும் டி.வி.
புதுதில்லி,
தொழில்நுட்பத்தின் அடுத்தக் கட்டமாக வளையும் திறன் கொண்ட டி.வி.யை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கவிருக்கும் CES எனப்படும் விழாவில் இந்த டி.வி அறிமுகப்படுத்தப்படக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வண்ணமுட்டையிட்ட டைனோசர்கள்
புதுதில்லி,
முட்டையிடும் உயிரினங்களிலேயே பறவைகள்தான் முதன்முதலில் வண்ண முட்டைகளை இட்டவை என்ற கருத்தை பொய்யாக்கியுள்ளது புதிய ஆய்வு. முதன்முதலில் வண்ண முட்டைகளை இட்டவை டைனோசர்கள். பறவைகளின் முன்னோடிகளான டைனோசர்கள் தான் வண்ண முட்டைகளை இட்டுள்ளதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அனகோண்டா மோடி
ஹைதராபாத்,
பிரதமர் நரேந்திர மோடி, அனகோண்டா பாம்பை போன்றவர் என்றும் அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் அவர் விழுங்கி வருகிறார் என்றும் ஆந்திர நிதித்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவரும் ஆந்திர நிதியமைச்சருமான யனமல ராமகிருஷ்ணுடு, பிரதமர் மோடியை விட பெரிய அனகோண்டா பாம்பு உள்ளதா? சிபிஐ, ஆர்.பி.ஐ போன்ற அமைப்புகளை அவர் விழுங்கி வருகிறார். அவர் எப்படி காப்பாற்றுபவராக இருப்பார் என்று கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதி
புதுதில்லி,
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 6 ஆம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இந்நிலையில் இந்தியா, சீனா, தென்கொரியா, துருக்கி, இத்தாலி, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய நாடுகள் ஈரானில் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்தாலும் அவற்றின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் நலன்களைப் புறக்கணித்துவிட முடியாது எனப் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், அதற்கு இணங்கி அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய தூதரை பாக். கண்டித்தது
இஸ்லாமாபாத்,
சர்வதேச எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானில் பிம்பர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டித்துள்ளது. முன்னதாக இந்திய தூதர் ஜே.பி.சிங்குக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.