மதுரை,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யாத சிபிஐ அதிகாரி பிரவீன் சின்ஹா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விளக்கம் அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தூத்துகுடியின் குமாரரெட்டியாபாளையம் பகுதியில் அமைவதற்கு ஆரம்ப காலகட்டம் கடும் எதிர்ப்புகள் இருந்து வந்தன. தாமிரத் தாது கொண்டு வந்த கப்பலை மீனவர்கள் படகுகளில் சென்று விரட்டி அடித்தனர். ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள நிலம் மற்றும் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாழாகியுள்ளன. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் புற்றுநோய், பெண்களுக்கு குழந்தைப்பேறின்மை, குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என ஆயிரக்கணக்கான அப்பகுதி பொதுமக்கள் அமைதியாக ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் 100வது நாளன்று தூத்துக்குடி ஆட்சியாளர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தியபோது போராட்டத்தை ஒடுக்குவதற்காக தமிழக அரசு அராஜகமான முறையில் பொதுமக்களின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவிகள் கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியதோடு, சிபிஐயை புதிய வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை 4 மாத காலத்திற்குள் முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உத்தரவு பிறப்பித்து இவ்வளவு நாட்கள் ஆன நிலையில் சிபிஐ இன்னும் வழக்கு கூட பதிவு செய்யாமல் உள்ளது எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில சமூகநல அமைப்புகள் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை நீதிமன்றத்தில் அளித்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வு சிபிஐ இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவை இதுகுறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.