===க.சுவாமிநாதன்===
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ரோகித் ஆசாத் அன்டு கொல்கத்தா வளர்ச்சிக்கான ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் சுபானில் சௌத்ரி இணைந்து எழுதிய “மோடி கேர் : புரட்சிகர முன்னேற்றமா? பின்னோக்கிப் பாய்ச்சலா?” என்ற தலைப்பிலான கட்டுரை (இந்து 16.10.2010) மின்சாரம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

* “ஆயுஷ் மன் பாரத்” மிகப்பெரிய ஆரவாரத்தோடு அறிவிக்கப்பட்டுள்ளதே!
ஆம்! பிரதமரின் செல்லத் திட்டமாக செப்.23, 2018 லிருந்து இது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெகுஜன ஊடகங்கள் மிக ஆரவாரமாக, கிட்டத்ட்ட ஓர் புரட்சியே நிகழ்ந்துள்ளது என்று வர்ணித்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டம் என்றும் சில ஊடகங்கள் பெயரிட்டுள்ளன. அமெரிக்காவின் “ஓபாமா கேர்” வழியிலேயே “மோடி கேர்” அமலாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் எழுதுகின்றன. இது போன்ற இன்சூரன்ஸ் திட்டமே “எல்லோருக்குமான பொது மருத்துவத்திட்டத்தை” விட சிறந்தது என்றும் பேசுகின்றன. இந்த ஆரவாரங்கள், வர்ணிப்புகள், கருத்துக்கள் எல்லாம் சரியா? என்பதே கேள்வி.

* “மோடி கேர்” – “ஒபாமா கேர்” உடன் ஒப்பிடப்படுவது சரியா?
“ஒபாமா கேர்” இரண்டு கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடை தருகிறது. ஆனால் “மோடி கேர்” 25 மடங்கு பேருக்கு மருத்துவக் காப்பீடை அளிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இது மிகப்பெரிய திட்டமாகத் தோற்றமளிப்பது இயல்பானதே. ஆனால் திட்டத்தின் பயன்பாட்டில் தான் உண்மை வெளிப்படும். ‘ஒபாமா கேர்’ திட்டத்திற்கு 2015ல் எக்சைஸ் வரிகள் மூலமாக அமெரிக்க பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 9788 கோடிகள். அமெரிக்காவின் மருத்துவச் செலவினங்கள் இந்தியாவைக் காட்டிலும் 200 மடங்குகள் ஆகும். இதையும் கணக்கிற்கொண்டு பார்த்தாலும் 2 கோடி பயனாளிகளுக்கு இந்தியாவில் ரூ.489 கோடி ஒதுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் பயனாளிகள் 25 மடங்கு இருப்பதால் குறைந்தபட்சம் 12225 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டிருப்பதோ வெறும் ரூ.2000 கோடிகள்தான். இந்த மதிப்பீடும் கூட தாராளமான ஒன்றுதான். 200 மடங்கு மருத்துவக் கட்டணம் என்ற உச்சபட்ச வித்தியாசத்தை எடுத்துக் கொண்டுள்ளோம். இரண்டாவது ஏழை, எளிய மக்களுக்கான நோய்களுக்கான சாத்தியங்கள் சமமென்று கொண்டு கணக்கிட்டுள்ளோம். ஆகவே “மோடி கேர்” எந்த வகையிலும் “ஒபாமா கேடுக்கு” பக்கத்தில் கூடவரவில்லை.

* சர்வதேச ஒப்பீடு என்பது அனுமானம்தானே!
ஆம். உள்நாட்டின் அனுபவங்களைக் கொண்டே கணக்கிட்டுப் பார்த்தாலும் ஒதுக்கீட்டின் போதாமை தெளிவாகத் தெரியும். இராஷ்ட்ரிய ஸ்வஸ்த பீமா யோஜனா (சுளுக்ஷலு) என்று நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 2017 -18 ல் ஆன செலவினம் ரூ.470.52 கோடிகள். அத்திட்டம் 3.63 கோடி குடும்பங்களுக்கு ரூ.30,000 மருத்துவக் காப்பீடைத் தருகிற திட்டமாகும். புதிய மோடி கேர் திட்டம் 10.74 கோடி குடும்பங்களுக்கு ரூ,5 லட்சம் மருத்துவக் காப்பீடு தருகிறது எனக் கொண்டால் ரூ.26000 கோடி தேவைப்படும். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2000 கோடியைப் போல 13 மடங்குகள் தேவைப்படுகிறது. உள்நாட்டு அனுபவத்தைக் கொண்டு பார்த்தால் பள்ளம் மிகப் பெரியதாக உள்ளது.

* பொது மருத்துவத்தை விட மருத்துவக் காப்பீடு திட்டம் சிறந்ததா?
பொது மருத்துவத்தில் ஒதுக்கீடுகள் கசிகின்றன. திறமையாக நிர்வகிக்கப்படவில்லை என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆகவே மருத்துவக் காப்பீடு என்றால் இந்தக் கவலை அரசுக்கு இல்லை என்கிறார்கள்.

பொது மருத்துவத்திற்கான ஒதுக்கீடுகள் குறையக் குறைய மக்கள் தங்கள் பாக்கெட்டுகளிலிருந்து செலவழிக்க வேண்டிய தொகை அதிகமாகும் என்பது உண்மை. இந்தியாவில் தங்கள் பாக்கெட்டுகளிலிருந்து செலவழிப்பது மொத்த மருத்துவச் செலவினத்தில் 65 சதவீதமாக உள்ளது. இது இலங்கையில் 38 சதவீதம். பூடானில் 20 சதவீதம், தாய்லாந்தில் 12 சதவீதம்.

இச்செலவுகளை மருத்துவக் காப்பீடு திட்டம் ஈடுகட்டாது. பொது மருத்துவ ஒதுக்கீடுகள் குறையும் போது மேலும் மேலும் பாக்கெட்டுகறில் இருந்து பறிக்கப்படும என்பதே அனுபவம்.

* மருத்துவக் காப்பீடு திட்டம் மருத்துவமனை அனுமதிகளுக்கு உதவுமே!
இராஷ்டிரிய ஸ்வஸ்த பீன யோஜனா (RSBY) அனுபவத்தைப் பாருங்கள்! தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களை அது உயர்த்திவிட்டது. மருத்துவக் காப்பீட்டிற்குள் உள்ளடங்காத செலவினங்களும் உயர்ந்துவிட்டன. வெளி ரோமானிக் கட்டணங்கள் உயர் சிகிச்சைகளுக்கு மிக அதிகமாக உள்ளது. இவற்றையெல்லாம் பொது மருத்துவமே ஓரளவுக்க ஈடுகட்டுமேயொழிய மருத்துவக் காப்பீட்டால் எப்படி முடியும்?

* மருதுதுவக் காப்பீட்டின் மற்ற விளைவுகள் என்ன?
இது மருத்துவமனை அனுமதிகளை நோக்கி மக்களை உந்தித் தள்ளுவதால் பணவீக்கத்தை உருவாக்குகிறது. இது இன்சூரன்@ பிரிமியத்தையும் படிப்படியாக உயர்த்துகிறது. இத்தகைய போக்கிற்கு லகான் போடுவதற்கே பொது மருத்துவ ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு பொது சுகாதார நிலையத்திற்கு ரூ.80000 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மேலும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் தங்கள் இழப்புகளைக் கூட அரசுத் திட்டங்களுக்கான பிரிமியம் வாயிலாக ஈடுகட்டிக் கொள்கின்றன.

* மருத்துவக் காப்பீட்டால் தனியார்கள் இலாபம் அடைகிறார்கள்!
ஆம். தனியார் நிறுவனங்கள் இலாபத்திற்கு தானே இயங்குகிறார்கள். பொது மருத்துவத்திற்கான ஒதுக்கீட்டைக் குறைக்குமாறு அரசை அவர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள். அது குறையக் குறைய இவர்களின் இலாபம் கூடும். மருத்துவச் செலவினங்கள் மீதான அரசின் கடிவாளமும் பறிபோகும்.

* என்னதான் தீர்வு!
பொது மருத்துவ பாதுகாப்பு தவிர வேறு வழியில்லை. தாய்லாந்தும், மெக்சிகோ பொது மருத்துவம் பலப்படுத்தப்பட்டிருப்பதற்கு உதாரணங்கள். தாய்லாந்தில் அனைத்து மக்களையும் எட்டக்கூடிய அளவிற்கு பொது மருத்துவ நிலையங்கள் உள்ளன.

ஆகவே “மோடி கேர்” திட்டத்தில் புரட்சி ஏதுமில்லை. 50 கோடி மக்களுக்கு பயன் என்பது நடைபெறாது. உண்மையில் மருத்துவச் செலவினங்கள் அதிகரிக்கும். மருத்துவக் காப்பீடு ஈடு செய்யாது. தனிப்பட்ட ஓரிரு உதாரணங்கள் வெற்றியாகத் தோற்றமளிக்கலாம். உண்மையில் நிதி மறுக்கப்படுவதே நடக்கப்போகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.