இந்நூலின் முழுப்பெயர் `புனிதக் குடும்பம் அல்லது ஆபத்தான விமர்சனத்தைக் குறித்த விமர்சனம் என்பதாகும். காரல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கூட்டாக எழுதிய இந்நூலானது 1845ஆம் ஆண்டில் வெளியானது.

பிரபல ஜெர்மன் தத்துவ அறிஞரான ஹெகல் மறைவுக்குப்பின் அவரைப் பின்பற்றியவர்கள் தங்களை இளம் ஹெகலியவாதிகள் என்று அழைத்துக் கொண்டனர். அவர்கள் ‘டாக்டர்கள் கிளப்’ (முனைவர்கள் குழு) என்ற ஒரு அமைப்பையும் கொண்டிருந்தனர். காரல் மார்க்சும் துவக்கத்தில் சிறிது காலம் அதில் பங்கேற்றார். பின்னர் ஒதுங்கிக் கொண்டார்.

அந்த இளம் ஹெகலியவாதிகளில் இருந்த இரண்டு சகோதரர்களான எட்கார் பாயர் மற்றும் புருனோ பாயர் ஆகிய இருவரும் யதார்த்ததிற்குப் புறம்பாக, கட்சிகள் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு விமர்சனத்தை வைத்தார்கள். … கருத்து முதல்வாதிகளான அவர்கள் அனைத்து நடைமுறை வேலைகளையும் நிராகரித்தார்கள். சுற்றியுள்ள உலகத்தையும் அதோடு சேர்ந்த நிகழ்வுகளையும் விமர்சன ரீதியாக ஊகித்தார்கள். இந்த சகோதரர்கள் இருவரும் தங்கள் நூலில் பாட்டாளி வர்க்கத்தை விமர்சனமற்ற மக்கள் கூட்டம் என்று கூறினர். இந்தப் பைத்தியக்காரத்தனமான, தீங்கான போக்கை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் கடுமையாகச் சாடினர். அவர்கள் இந்த `புனிதக் குடும்பம்’ நூலில் ஹெகல் மற்றும் இளம் ஹெகலியர்களின் கருத்து முதல்வாதக் கண்ணேர்ட்த்தை விமர்சித்து இயக்கவியல் மற்றும் வரலாற்றியப் பொருள் முதல்வாதத்தை விரிவாக விளக்கினர்.

இந்நூலானது எதிர்மறைகளின் ஒற்றுமை மற்றும் போராட்டம் குறித்த இயக்க இயலின் தன்மையை விளக்கிக் கூறி ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்தது.

இந்த நூலில், மார்க்சும், ஏங்கெல்சும் வரலாறு குறித்த பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், உற்பத்தியின் சமூக உறவுகள் போன்றவை குறித்த அடிப்படையான அம்சங்களை விளக்கியுள்ளனர். இளம் ஹெகலியர்கள் உயர்த்திப் பிடித்த தனிநபர் துதிபாடலை அவர்கள் கண்டித்தனர். வரலாற்றின் பிரதானமான உள்ளடக்கமானது சுரண்டல்காரர்களுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம்தான் என்று அவர்கள் சுட்டிக்காண்பித்தனர். பாட்டாளி வர்க்கம் என்பதுதான் முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டுபவர்கள் என்ற கருத்தை முதன்முதலாக இந்நூலில் அவர்கள் இருவரும் முன்வைத்தனர்.

இந்த நூலானது தத்துவத்தின் வரலாறு குறித்து குறிப்பாக இங்கிலாந்திலும், பிரான்சிலும் பொருள் முதல்வாதத்தின் வரலாறு குறித்து விளக்கியது. இந்த நூலின் தலைப்பு முதலில் ஆபத்தான விமர்சனத்தைக் குறித்த விமர்சனம் என்றுதான் இருந்தது. ஆனால் பாயர் சகோதரர்கள் மற்றும் அவர்களில் ஆதரவாளர்களுடைய தவறான போக்குகளை கேலி செய்யும் விதத்தில் ஏங்கெல்ஸ் இந்நூலுக்கு `புனிதக் குடும்பம்’ என்ற பெயரைக் கொடுத்தார். அதுவே நிலைத்துவிட்டது.

(ஆதாரம் : தத்துவ அகராதி ஆங்கிலம்)

Leave A Reply

%d bloggers like this: