ஒரகடம்: அரசியல் சாசனம் வழங்கிய சங்கம் வைக்கும் உரிமையை யாராலும் மறுக்க முடியாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் கூறினார்.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் யமஹா தொழிற்சாலையில் தொழிற் சங்கம் வைத்ததற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசித்தீர்க்க நிர்வாகம் முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த, 44 நாட்களாக சிஐடியு சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யமஹா தொழிலாளர் களை சனிக்கிழமை (நவ.3) சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்ததோடு, போராட்ட நிதியாக ரூ.10 ஆயிரத்தையும் வழங்கினர். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் துளசி நாராயணன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், மாவட்டச் செயலாளர் கே.நேரு, திருவள்ளுர் மாவட்டத் தலைவர் சம்பத், தென்சென்னை மாவட்டச் செயலாளர் சந்திரன், மலைவாழ் மக்கள் சங்க காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் அழகேசன் தென்சென்னை மாவட்டச் செயலாளர் முருகேசன், விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஜி.மாரி, இ.லாரன்ஸ், டி.லிங்கநாதன், வி.பொன்னுசாமி, வெள்ளிக்கண் ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தொழிலாளர்கள் மத்தியில் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிஐடியு தலைமையில் இந்தியா யமஹா தொழிலாளர்கள் கடந்த 44 வது நாளாக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சங்கம் அமைத்தது மாபெரும் குற்றம் என ஜப்பான் நிறுவனம் இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையிலும் தொழிலாளர்களை பட்டினி போடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக் கின்றது. தமிழக அரசாங்கம் வழங்கிய அறிவுரையை ஜப்பான் நிர்வாகம் ஏற்க மறுப்பது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் ஆதரவைத் தெரிவிக்கின்ற வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். தொழிற்சங்க கோரிக்கைகளையும், சங்கம் வைக்கும் அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். சங்கம் அமைக்கும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வழங்கியுள்ளது. இந்த அடிப்படை உரிமையை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அந்நிய நிறுவனம் இங்கு மறுத்து வருகின்றது. இது இந்திய அரசுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும். தமிழக முதல்வர் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் சண்முகம்.

Leave a Reply

You must be logged in to post a comment.