டெங்கு, பன்றிக்காய்ச்சல் இறப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. மேலும்  இதிலிருந்து மக்களை பாதுகாக்க தமிக அரசு  துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அலைமோதுகின்றனர். டெங்கு காய்ச்சலும், பன்றிக்காய்ச்சலும் மிக வேகமாக பரவி வருகின்றன. இதுவரை தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்கிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும் மரணங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. ஆனால், முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட தமிழக அரசு நிர்வாகம் அவசர கதியில் நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

ஏராளமான குழந்தைகளும், பெரியவர்களும் நாள்தோறும் காய்ச்சலில் அவதிப்பட்டு உரிய நேரத்தில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறந்து போகிற அவல நிலை நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. முந்தைய ஆண்டான 2016ல் 2531 பேர் பாதிக்கப்பட்டனர். அதுவே 2017ல் அதிர்ச்சியடையும் வகையில் பல மடங்கு அதிகரித்து, டெங்கு காய்ச்சலால் 20,945 பேர் பாதிக்கப்பட்டு 158 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.   ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற விஷக்காய்ச்சல்களால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்படுவதும், பலர் உயிரிழப்பதும் அரசுகள் அந்த நேரத்தில் நாடகமாடுவதும் தொடர்கதையாக வந்து கொண்டுள்ளன.  ஒருவழியாக இம்மர்மக் காய்ச்சல்களை நிரந்தரமாக ஒழிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மக்களை மரணத்துக்கு தள்ளுவது அரசின் கையலாகாத்தனத்தையே காட்டுகிறது. பருவமழை துவங்கும் முன்பே, ஜூன்- ஜூலை மாதங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளில் உரிய மருந்துகள் மற்றும் பரிசோதனைக்கான வசதிகள், தூய்மையான குடிநீர் வசதி என அனைத்தும் மேம்பட்ட நிலையில் ஏற்பாடு செய்திருந்தால், காய்ச்சலை கட்டுப்படுத்தியிருக் முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம், போதிய சுகாதார அலுவலர்கள் மற்றும்  பணியாளர்கள் இல்லாத நிலையில், குப்பைகளும், மழைத்தண்ணீர், சாக்கடை நீரும் மலையாகத் தேங்கி, கொசுக்கிருமிகள் பண்ணைகளாக மாறியுள்ளன. கொசு ஒழிப்பு பணிகள் அறவே நடைபெறவில்லை. இதனால் பெரும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன. இதனை மறைக்க மர்மக் காய்ச்சலில் இறந்து போனதாக பேசுவதும், விளம்பரம் தேடிக் கொள்வதற்காக அவ்வப்போது விழிப்புணர்வு முகாம் எனும் பெயரில் நாடகமாடுவதும், ஆளுகிறவர்களின் வாடிக்கையாகி விட்டது. எனவே, தமிழக அரசு உடனடியாக டெங்கு, பன்றிக்காய்ச்சலைத் தடுக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் வந்த இடங்களில் அதை மறைக்கவோ, மறுக்கவோ முயற்சி செய்யாமல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைகள் இணைந்து தடுப்பு மற்றும் தீவிர சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

¨ டெங்கு, மலேரியா, ஃபுளு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கும் விதமாக நிரந்தரமான சிகிச்சைப்பிரிவை சுகாதாரத்துறை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். ¨ 24 மணி நேரமும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் உட்பட அனைத்துவகைக் காய்ச்சல்களுக்கும் ‘உள்நோயாளியாக’ அனுமதியும், இலவசமாகத் தேவையான அனைத்து இரத்தப் பரிசோதனைகளையும் செய்ய வேண்டும். உள்நோயாளிக்குத் தேவைப்படும் படுக்கை வசதிகள், இரத்தநாளம் வழி உள்செலுத்தப்படும் சலைன், தட்டணுக்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து மருந்துகளும், வசதிகளும் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.¨ அரசு மருத்துவமனைகளில், அவசர சிகிச்சைகளை தவிர பிற துறையினரையும், வார்டுகளையும் டெங்கு மற்றும் ஃபுளு சிகிச்சைக்காக பயன்படுத்தவேண்டும். ¨ தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் ஒதுக்கப்பட்ட நிதியை ஊழலற்ற முறையில் உரியவிதத்தில் பயன்படுத்தவேண்டும். ¨ டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்களில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.