கண்ணூரில், பாஜக தலைவர் அமித்ஷா பேசியிருப்பதை, அரசமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் நேரடியாக விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து பாஜக மேற்கொண்டுள்ள கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர்  பேசியிருந்த போதிலும், அவருடைய பேச்சின் முக்கியத்துவம், நீதித்துறைக்கு மறைமுகமாக விடப்பட்டிருக்கிற அச்சுறுத்தலாகவும் மிரட்டலாகவும் இருப்பதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

அவர் பேசும்போது, “நான் இந்த மாநில அரசுக்கும், இந்தத் தீர்ப்பினை அளித்திட்ட நீதிமன்றத்திற்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அமல்படுத்தக்கூடிய விதத்திலான உத்தரவைத்தான் பிறப்பிக்க வேண்டுமேயொழிய, மக்களின் நம்பிக்கையை உடைத்தெறியும் விதத்தில் இருந்திடக்கூடாது,” என்று அறிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்துவோம் என்று கூறும் மாநில அரசாங்கத்தைப் பார்த்து அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தினால் அதனை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கிடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்.

இவரது உரையிலிருந்து தெள்ளத்தெளிவாகத் தெரிவது என்ன? “நீதிமன்றங்கள் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நடந்து கொள்ளக்கூடாது. மாறாக, மக்களின் “மத நம்பிக்கை”யின் அடிப்படையில்தான் செயல்பட வேண்டும். எந்தவொரு அரசாங்கமாவது, “மக்களின் மத நம்பிக்கையை உடைத்தெறியும் விதத்தில்” நீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்தினால், அந்த அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டியதாகும்,” என்பதே இவரது பேச்சின் சாராம்சமாகும்.

அரசமைப்புச் சட்டமும், அதன் கீழ் உள்ள நிறுவனங்களும்  இந்து ராஷ்ட்ரத்தின் லட்சியத்தை எய்திடக்கூடிய விதத்திலேயே செயல்பட வேண்டும் என்பதும்,  படுபிற்போக்குத்தனமான இந்துத்துவா கொள்கையையே பின்பற்றி ஒழுகிட வேண்டும் என்பதுமே ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் அங்கமாக செயல்படும் பாஜகவின் நோக்கமாகும். அதன் அடிப்படையிலேயே தற்போது கேரளாவிலும் இவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

அமித்ஷாவின் பேச்சைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில் இதே விஷயத்தை சற்றே நாசுக்காகக் கூறினார்.  “அரசமைப்புச்சட்டவாதத்திற்கும்” “பக்தர்களின்  மத உரிமைக்கும்” இடையே பிரச்சனை வருமானால், பக்தர்களின் மத உரிமைக்கே முன்னுரிமை கொடுத்திட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அயோத்தி தொடர்பான தீர்ப்பின் மீதான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்க முன்பு அமித்ஷா இவ்வாறு பேசியுள்ளார். இவ்வாறு இவர் பேசியதை, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகப் பார்க்கப்பட வேண்டியதாகும்.  அதாவது (ஆர்எஸ்எஸ்/பாஜகவின் கருத்தின்படி) அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்திடும் தீர்ப்பு, “மக்களின் நம்பிக்கையை உடைக்கக்கூடிய விதத்தில்” அமைந்துவிடக்கூடாது என்பதும், இவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திட வேண்டும் என்பதுமேயாகும்.  அயோத்தி விவகாரத்தில் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்திற்கு பல்வேறு வடிவங்களில் நிர்ப்பந்தம் அளித்து வருகிறார்கள். ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டடத்தை ஏற்படுத்தும் விதத்தில் மத்திய அரசு உரிய நாடாளுமன்ற நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று ஒரு பக்கத்தில் கோரிக்கை வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத், விஜயதசமி அன்று ஆற்றிய உரையின்போது, தாங்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்துக்கொண்டிருப்பதாகப் பேசியிருக்கிறார். இவை அனைத்துமே உச்சநீதிமன்றம் அயோத்தி பிரச்சனையின்மீது விரைந்து தீர்ப்பினை வழங்கிட வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிப்பதற்கான நடவடிக்கைகளேயாகும்.

எனினும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வாயம், அக்டோபர் 29 அன்று, அயோத்தி பிரச்சனை தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்த வேண்டிய அவசரம் எதுவும் இல்லை என்றும், இது தொடர்பாக அமைய இருக்கிற அமர்வாயம், விசாரணையை எப்போது தொடங்கலாம் என்பது குறித்து ஜனவரியில் தீர்மானித்திடும் என்றும் சொல்லி இருக்கிறது. மக்களவைத்  தேர்தலின்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெற்று அதன்மூலம் மதவெறித் தீயை விசிறிவிடலாம் என்று நினைத்திருந்த சங் பரிவாரங்களின் நோக்கத்திற்கு உதவமுடியாத வகையில் உச்சநீதிமன்றம் இந்த நடவடிக்கை மூலம் தீர்மானித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு சங் பரிவாரத்தின் மத்தியில் கடும் கோபத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. அவசரச் சட்டம் பிறப்பித்திட வேண்டும், அல்லது, நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடரில் சட்டம் இயற்றிட வேண்டும் என்று கூக்குரலிடத் தொடங்கியிருக்கின்றனர்.  ராமர் கோவில் கட்டப்படுவது தொடர்பாக முடிவெடுப்பதற்கு மேலும் காலதாமதமாகுமானால்  இந்துக்கள் பொறுமையிழந்துவிடலாம் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், எச்சரித்திருக்கிறார். உத்தரப்பிரதேச முதல்வரான ஆதித்யநாத், ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து வாய்ப்பு வசதிகள் குறித்தும் ஆராய்வது தேவை என்கிறார்.

மோடி அரசாங்கமானது, அயோத்தி விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் கீழ் விசாரணையில் இருப்பதால், அவசரச் சட்டம் இயற்றுவதற்கோ, அல்லது, இது தொடர்பாக சட்டம் கொண்டுவருவதற்கோ, இயலாத நிலையில் இருக்கிறது.  இந்த விவகாரத்தைத் தந்திரமாக வெல்வதற்கான வழி எதுவும் மோடி  அரசாங்கத்திற்கோ, அல்லது, ஆளும் பாஜகவிற்கோ இல்லை. ஆனாலும், ஆர்எஸ்எஸ்-உம் பாஜகவும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, ராமர் கோவில் பிரச்சனையை ஓர் எரிகிற பிரச்சனையாக மாற்ற வேண்டும் என்று துடியாய்த் துடிக்கின்றன. அதனால்தான், இவர்கள் ராமர் கோவில் பிரச்சனையைத் திரும்பத் திரும்ப முன்னுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தொடர்கிறார்கள்.

எனவேதான், சபரிமலை தொடர்பான தீர்ப்பின் அமலாக்கம் ஒரு பரிசோதனை வழக்காக (a test case) இப்போது இருக்கிறது. சபரிமலைக் கோவில் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தி, “பக்தர்களை” உசுப்பிவிட்டு, ஆதாயம் அடைந்திடலாம் என்று பாஜக நம்புகிறது. ஆனால், கேரளத்தில் உள்ள நிலைமை வேறு.  மதச்சார்பின்மை மாண்புகளை உறுதியாக உயர்த்திப்பிடித்திருக்கக்கூடிய மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஓர் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் அங்கே இருந்துவருகிறது. கேரள மக்களின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற உணர்வுகள் இவர்களின் இழிமுயற்சிகள்  அனைத்தையும் தகர்த்திடும். மதவெறி சக்திகளின் அரசியலையும், சூழ்ச்சிகளையும் எப்படி முறியடிப்பது என்பதற்கான வழியை,  கேரளம் காட்டிடும்.

(அக்டோபர் 31, 2018)

(தமிழில்: ச.வீரமணி)

Leave a Reply

You must be logged in to post a comment.