தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ‘வளர்ச்சி’ எனும் வாய்ச்சவடால் அதிகரித்து வருகிறது. ஆசியாவின் ‘டெட்ராய்ட்’ என்று சொல்லும் அளவிற்கு ஆட்டோமொபைல் உற்பத்தி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வளர்ச்சி பெற்றுள்ளது. இவை அனைத்தும் அமெரிக்க, கொரிய, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் மூலதனம் ஆகும். ‘ஆம்னெஸ்டி இண்டர்நேசனல்’ (சர்வ
தேச பொது மன்னிப்பு சபை) என்ற பெயரில் மனித உரிமைகள் குறித்து தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா, தொழிற்சங்க உரிமையை மதிப்பதில்லை. அங்கிருந்தே அராஜகங்கள் துவங்குகின்றன. அமெரிக்காவின் ஃபோர்டு இந்தியா நிறுவனம், இந்திய தொழிற்சங்க சட்டம் 1926 அடிப்படையில், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல அமெரிக்க நிறுவனங்கள், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. இதுதான் மேலைநாடுகள் போற்றுகிற ‘ஜனநாயகம்’. இந்த ஜனநாயக விரோத முதலாளிகளின் மூலதனத்தை வரவேற்பதில்தான் பாஜக அரசின் பிரதமர் மோடி அக்கறை செலுத்துகிறார். தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயர்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, மக்கள் பணம் வாரி இறைக்கப்பட்டது இந்த வளர்ச்சிக் காகத்தானா? மேற்படிநாடுகளின் மூலதனம் அல்லது தொழில் முதலீடு, இந்தியாவின் தொழிலாளர்களுக்கு, முதலாளித்துவ நாடுகள் பின்பற்றுகிற ஜனநாயகத்தை வழங்க மறுப்பது மட்டுமல்ல; இந்தியா நூறு ஆண்டுகளுக்கு முன் பின்பற்றிய ஜனநாயக விரோதத்தை இப்போது இந்த மூலதனம் பின்பற்றுகின்றது.

சென்னை பிஅண்டு சி மில்லில் பணியாற்றிய தொழிலாளி, கழிவறை செல்ல அனுமதி கேட்ட போது, அன்றைக்கு மேஸ்திரி மறுத்தார். பொறுத்துக் கொள்ள முடியாத தொழிலாளி பணித்தளத்திலேயே கழித்தார்; அதனால் தண்டிக்கப்பட்டார் என்பது வரலாறு. அது அடிமை இந்தியாவில் பிரிட்டிஷ் மூலதனத்தின் முதலாளி பின்பற்றிய நடைமுறை. அதை, இன்றைய விடுதலை பெற்ற மக்களாட்சியில் ஜப்பான் முதலாளிகள் பின் பற்றுகின்றனர். அதனால் தான் யமஹா நிறுவனத்தில் தொழிலாளர் போராட்டம். கழிவறை செல்ல தொழிலாளர் அனுமதி கேட்டால், உற்பத்திப் பிரிவு மேலாளர், மனிதவளத்துறை அதிகாரிகளை பார்க்கச் சொல்கிறார். அதுவரை அவசரத்தை அடக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது நவீன தொழில்நுட்பங்களை கையாளும் முதலாளித்துவம். சிலநேரங்களில் தரையை சுத்தம் செய்யவும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும், தொழில்நுட்பம் கற்ற தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொழிற்சங்க உரிமையை அங்கீகரிக்காது ஏன்?

4 ஆண்டுகளிலேயே தொழிற்சங்கம் உருவானதை யமஹா நிர்வாகம் விரும்பவில்லை என தமிழ்நாட்டின் தொழிலாளர்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்கள், மேலே குறிப்பிட்ட அடக்குமுறையும், அராஜகமும் தொழிற்சங்கம் உருவாக வழிவகுத்தது என்பதை புரிந்துதான் பேசுகிறார்களா தெரியவில்லை. ஜப்பானில் 1965லேயே சங்கம் வைக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தியா பின் தங்கி இருக்க வேண்டும் என ஜப்பான் விரும்புகிறதா? அதை இந்திய அதிகாரிகள் ஏற்றுக் கொள்கிறார்களா? கொரியாவிலும் தொழிற்சங்க அங்கீகார சட்டம் உள்ளது.ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கும் நிலையில் யமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ நிறுவனங்களில் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெறுவது, பாதகமாக அமைந்து விடும் என அதிகாரிகள் புலம்புகின்றனர். தொழிலாளர்களுக்கான உரிமைகளை ஏற்றுக் கொண்டு முதலீடு செய்யுங்கள் என்று ஏன் தமிழக அரசால், அதிகாரிகளால் சொல்ல முடியவில்லை?தமிழகம் இடம் தராவிட்டால் ஆந்திரா காத்திருக்கிறது; அல்லது வேறு மாநிலங்கள் தயாராக உள்ளன என, போராடுபவர்களை ஆட்சியாளர்கள் மிரட்டுகின்றனர். இதுவும் ஜனநாயக உரிமை பறிப்பிற்கு துணை செய்யும் சொத்தையான வாதங்களே ஆகும்.

தமிழகம் இயற்கை வளங்களையும், திறன் பெற்ற தொழிலாளர்களையும் கொண்டுள்ள நிலையில், எங்கள் தொழிலாளர்கள் உற்பத்தி தளத்தில் கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் பணி செய்வர்; அதே நேரம் அவர்களுக்கான உரிமைகளை விட்டுத் தரமாட்டோம் என்று சொல்லும் திராணி தமிழக அரசுக்கு இல்லை. மூலதனத்தைப் பார்த்துப் பதுங்குவதும் தொழிலாளர்களைப் பார்த்து உறுமுவதுமாக ஆட்சியாளர்கள் உள்ளனர். மாநில அரசின் பேரம் பேசும் திறன் முடங்கிப் போனதால், தொழிலாளர்களும் தங்கள் கூட்டுப் பேர உரிமையை கைவிட்டு அடிமைகளாய் அடங்கிப் போகவேண்டும் என வலியுறுத்தும் அரசாக அதிமுக அரசு உள்ளது.

மூலதனத்தால் அவமானப்படுத்தப்படும் அரசு

இந்தப் பின்னணியில்தான் எம்.எஸ்.ஐ என்ற கொரிய நிறுவனத்தின் தொழிலாளர்கள் 50 நாட்களைக் கடந்தும், யமஹா என்ற ஜப்பான் நிறுவனத்தின் தொழிலாளர்கள் மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனத் தொழிலாளர்கள் 40 நாட்களுக்கு மேலாகவும் போராடி வருகின்றனர். அரசு அளித்த அறிவுரையை தொழிற்சங்கம் ஏற்றுக் கொண்டன; ஆனால் நிர்வாகங்கள் ஏற்க மறுத்து 20 நாள்களாகி விட்டது. தனது அரசுத்துறை அளித்த அறிவுரை, கிழிந்து தொங்குவதை, 20 நாள்களாக தமிழக அதிமுக ஆட்சி கள்ள மவுனத்துடன் வேடிக்கை பார்க்கிறது. சிலநூறு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம், 7.25 கோடி மக்களை ஆட்சி செய்யும், அரசை மதிக்கவில்லை. இதற்காக, மாநில அரசு அதிர்ச்சியடையவோ, சுயமரியாதை போய்விட்டதே என்று கலங்கவில்லை.

இதைத்தான், இந்திய இறையாண்மை மற்றும் சுயாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறோம். ஆனால் உலகமயமாக்கலுக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், இதைத்தான் தங்களின் ‘சாணக்கியம்’ என கருதுகிறார்கள். யமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ தொழிலாளர்களின் போராட்டம் தொழிற்சங்கம் வைக்கும் உரிமைக்கான போராட்டம் என்பது மட்டுமல்ல; பன்னாட்டு முதலாளிகளிடம் சிக்குண்டு கிடக்கும், இந்திய அரசாங்கத் தின் இறையாண்மை மற்றும் சுயாதிபத்தியத்தை மீட்கிற தேசப்பற்று மிக்க போராட்டம் என்பதையும் இணைத்துப் பார்ப்பது அவசியம். எனவே தான் இதர பகுதி உழைப்பாளர்களின் ஆதரவையும், சகோதரத்துவத்தையும் இந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் வேண்டி நிற்கின்றன.

பெருகும் ஜனநாயக சக்திகளின் ஆதரவு
இதுவரையிலும் காஞ்சிபுரம் மாவட்டத் தில் நடந்த தொழிலாளர் போராட்டங்களுக்குக் கிடைத்த சகோதரத்துவ ஆதரவை விடவும் யமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கான ஆதரவு நிதி அளிப்பதும், போராட்டக் களத்தில் கலந்து நிற்பதுவும் வலுவடைந்து வருகிறது. இது தொழிற்சங்க ஒற்றுமை என்ற உன்னத வரிகளில் விளிக்கப்பட்டாலும், தொழிற்சங்க உரிமை மற்றும் கூட்டுப் பேர உரிமை என்ற ஜனநாயக உரிமைகளை பெறுவதில் அனைத்துத் தொழிலாளர்களும் தங்களையும் இணைத்து கொண்டுள்ளனர் எனச் சொல்லலாம். இது மக்களின் வளர்ச்சிக்கான அடுத்த கட்ட ஜனநாயகப் போராட்டம். தமிழகம் சுயமரியாதைக்கான போராட் டத்தில் நெடும்பயணம் கடந்து வந்திருந்தாலும், முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் ஜனநாயகம் மற்றும் உரிமைகள் எள்ளி நகையாடுதலுக்கு உள்ளாகியிருப்பதை எதிர்த்துப் போராடுவது மிகப் பெரிய சுயமரியாதைப் போராட்டமாகும். எனவே தான் தொழிற் சங்கப் போராட்டத்தை, அரசியல் கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்ற அறைகூவலை, சிஐடியு விடுத்துள்ளது.

தேவைப்படும் தொடர் போராட்டங்கள்
தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைகளுடன் முடிந்து போவதில்லை. ஒட்டு மொத்த சமூகமும் அந்த ஜனநாயக உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை உருவாக்க தொடர் போராட்டங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் அரசியல் கட்சிகளின் ஆதரவை தொழிற்சங்கம் கோரியுள்ளது. அடுத்த கட்டமாக, மாநிலம் முழுவதும் யமஹா, என்பீல்டு விற்பனைக் கூடங்களுக்கு முன் போராட சிஐடியு அறைகூவல் விடுத்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் உயிர் அதன் பிராண்ட் என்ற இலச்சினையில் உள்ளது. தொழிலாளர்களை சட்ட விரோதமாக டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்துள்ள நிறுவனங்கள், அதன் வாடிக்கையாளர்களிடம் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் நோக்கமாகும். வாடிக்கையாளர்கள், பல்லாயிரம் பேர் யமஹா, என்பீல்டு போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, மின் அஞ்சல் மூலம் தங்களின் அதிருப்தியை தெரியப்படுத்துவ
தும் கூட ஜனநாயக உரிமைக்கான போராட்டமே ஆகும். சமூக சொத்துக்களையும், உழைப்பையும் கார்ப்பரேட் நிறுவனங் கள் சுரண்டுவதில் இருந்து, சமூகத்தைக் காப்பது அவசியம், அதற்காகவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஜனநாயக சக்திகள் முழுமையாகப் பங்கேற்றால் வெற்றி நிச்சயம்!

Leave a Reply

You must be logged in to post a comment.