தாம்பரம்:
தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து யமஹா நிர்வாகத்திற்கு மீண்டும் அவகாசம் வழங்குவதில் எந்தவித அவசியமும், நியாயமும் இல்லை என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் யமஹா, எம்எஸ்ஐ, ராயல் என்பீல்டு உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தலைமையில் காஞ்சிபுரத்தில் செவ்வாயன்று (அக்.30) அனைத்துக் கட்சிகள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் விளைவாகப் புதனன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் தாம்பரம் நகராட்சி அரங்கில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், செயலாளர் இ.முத்துக்குமார், யமஹா நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சிஐடியு சார்பில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட அறிவுரையை ஏற்றுக் கடந்த 4ம் தேதியே பணிக்கு திரும்பிவிட்டோம்; ஆனால் நிர்வாகம் தான் பணி தரமறுத்துவிட்டது என தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனைத் தொடர்ந்து யமஹா நிர்வாகத்தின் சார்பில் 2 நாட்கள் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதனைத் ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கி மீண்டும் ஞாயிறன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்தார்.

இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பேச்சுவார்த்தையில் யமஹா நிர்வாகத்தின் சார்பில் இரண்டு நாள் அவகாசம் கேட்டுள்ளனர். இந்த அவகாசம் வழங்குவது எந்த விதத்திலும் அவசியமும் இல்லை, நியாயமுமில்லை, எங்களின் கோரிக்கை தொழிலாளர் நலத்துறையின் அறிவுரையான இரண்டு தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற அறிவுரையை அமல்படுத்திட வேண்டும் என்பதுதான். நாங்கள் கடந்த 4ம் தேதியே பணிக்குத் திரும்பிவிட்டோம், வேலைதர மறுத்தது நிர்வாகம்தான். இந்த அறிவுரையை அமல்படுத்திட மாவட்ட ஆட்சியர் அழுத்தம் தரவேண்டும். இந்த அறிவுரையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவைக்கவேண்டும்.

இதேப்போன்று ராயல் என்பீல்டு நிறுவனத்தில் கடந்த மாதம் 24ம் தேதி வேலை நிறுத்தம் துவங்கியது. 23ம்தேதி என்ன நிலை இருந்ததோ அதே நிலை நீடிக்க வேண்டும் என்ற தொழிலாளர் நலத்துறையின் அறிவுரையை அமல்படுத்தினால் பணிக்குச் செல்லத்தயார் என நாங்கள் தெரிவித்தோம். ஆனால் நிர்வாகம் ஏதும் செய்யாமல் உள்ளது.

யமஹா நிறுவனம் குறித்து மீண்டும் வரும் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அன்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றால் பண்டிகை விடுமுறைகள் முடிந்த பின்னர் நவம்பர் 9,10 ஆகிய தினங்களில் காத்திருக்கும் போராட்டம் தீவிரமாக நடைபெறும். மேலும் நவம்பர் 2ம் தேதி திமுக சார்பில் படப்பையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் யமஹா விற்பனை மையங்களின் முன்பாக சிஐடியு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.