திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தொடர்ந்து மழையின்மை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதோடு விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் அய்யலூர் தக்காளி சந்தையில் 100 டன் தக்காளி விற்பனைக்கு வந்த நிலை மாறி ஒரு டன் தக்காளி மட்டுமே வந்துள்ளது. தொடர்ந்து மழையின்மை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்ததாகவும், வெளி மாநில தக்காளி வருகையின் காரணமாக விலையும் குறைந்ததாக விவசாயிகளும் வியாபாரிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து மண்டி வியாபாரி ரவி கூறும் போது. திண்டுக்கல் அய்யலூரில் உள்ள தக்காளி சந்தை மிகவும் பிரபலமானது. இந்த தக்காளிச் சந்தையில் இருந்து மாநிலத்தில் பிற பகுதிகளுக்கும், கேரளம். உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தக்காளி ஏற்றுமதியாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் அருகேயுள்ள கூம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தக்காளி சந்தை இருந்தாலும்; அய்யலூர் தக்காளி சந்தைக்கு அதிக அளவிலான தக்காளி கூடைகள் வருவதுண்டு. ஒரு நாளைக்கு 100 டன் தக்காளி வரத்து இருக்கும். அய்யலூரை சுற்றியுள்ள கிராமங்களில் பிரதான தொழிலே தக்காளி விவசாயம் தான். மேலும் இந்த பகுதியில் விளையும் தக்காளி வீரிய ஒட்டு ரகத்தில் நீண்ட நாள் தாக்குப்பிடிக்கும் தக்காளி விளைவிக்கப்படுகிறது.

இதனால் இந்த ஊர் தக்காளிக்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் தொடர்ந்து மழையின்மை நிலவுகிறது. கிணறுகளில் தண்ணீர் இல்லை. ஆழ்துளை கிணறுகளில் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் தக்காளி செடிகள் வாடி வதங்குவதோடு காய்ப்பும் குறைந்து உள்ளது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துவிட்டது. 100 டன் தக்காளி வந்த இந்த மார்க்கெட்டில் தற்போது ஒரு டன் தக்காளி தான் வந்துள்ளது. இது போன்ற சோக நிலை இதற்கு முன்பு வந்ததில்லை என்றார். மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 15 கிலோ அடக்கமுள்ள தக்காளி கூடை ரூ.120க்கு விலை போகிறது. ஒரு கிலோ தக்காளியின் அடக்க விலை ரூ.9 வரை விற்கப்படுகிறது.

அருகில் உள்ள வேடசந்தூரில்; தக்காளி கிலோ ரூ.7 வரை விற்கப்படுவதாகவும் ரவி கூறினார். பொதுவாக வரத்து காலங்களில் தான் விலை வீழ்ச்சி அடையும். ஆனால் வரத்து குறைவான காலத்தில் தக்காளி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தீபாவளி காலத்ததில் தக்காளி வரத்து கூடியிருந்தால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்திருக்கும். இந்த வரத்து குறைவு குறித்து தங்கம்மாபட்டியைச் சேர்ந்த விவசாயி சண்முகம் கூறும் போது. கடந்த பல ஆண்டுகளாக மழை இல்லை. மழை இல்லாததால் தக்காளி விளைச்சல் இல்லை. பருவமழையும் பொய்த்துவிட்டது என்று சண்முகம் வேதனையுடன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.