===கே.பாலகிருஷ்ணன்===
மாநிலச் செயலாளர் – சிபிஐ(எம்)                                                         நவம்பர் 1, 1956 சென்னை மாகாணம் என்ற தமிழ் மாநிலம் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க நாள்.

தமிழ்ச் சமூகம் உருவாகிய காலத்திலிருந்து ஒரே தேசிய இனமாக ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு ஆட்சி நிர்வாக அமைப்பின் கீழ் வாழும் வரலாறு போற்றும் நிலை உருவான நாள் தான் நவம்பர் 1, 1956. இந்த மகத்தான சாதனையை தமிழக வரலாற்றில் படைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பது பெருமைக்குரியதாகும்.

வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழர்கள் பரவி வாழ்ந்த போதிலும், காலம்காலமாக பல்வேறு மன்னர்கள், குறுநில மன்னர்கள், மூவேந்தர்கள், பல அன்னிய படையெடுப்பாளர்கள் இறுதியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கீழ் பல்வேறு கூறுகளாக பிரிந்து கிடந்ததே வரலாற்று உண்மையாகும். ஒரு தமிழ் தேசிய இனமாக உருவாகி ஒரே நிர்வாக ஆட்சியமைப்பின் கீழ் வாழ்ந்த வரலாறு முன்னெப்போதும் இல்லை.

பதினேழாம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும் கூட அவர்களால் உருவாக்கப்பட்ட மாநில நிர்வாக அமைப்புகளில் பலமொழி பேசப்பட்ட மக்கள் பகுதி பகுதியாக இணைக்கப்பட்டிருந்தார்கள். உதாரணமாக, பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் தமிழர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களில் ஒருபகுதியினர் இணைந்து உருவாக்கப்பட்டதே சென்னை மாகாணம். இந்த மாகாணத்திற்கு வெளியிலும் இம்மொழிகள் பேசுகிற மக்கள் பல ஜமீன்தார்கள் நிர்வாகத்தின் கீழ் பிரிந்து கிடந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இந்திய மக்களின் இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் இவைகளைப் பற்றி எள்ளளவும் கவலையில்லை. அவர்களது தேவையெல்லாம் இந்திய மக்களை சுரண்டி கொழுப்பதற்கும், அதற்குத் தேவையான அடக்குமுறை, அரசு நிர்வாகம் மட்டுமே.

வங்கப்பிரிவினையும், மொழிவழி மாநில கோரிக்கைகளும்
இதன்காரணமாகவே, 1905ம் ஆண்டு ஒன்றுபட்ட வங்கத்தை இரண்டு நிர்வாக மாநிலங்களாக பிரித்த போது வங்கமே கொதித்தெழுந்தது. அப்போது தொடங்கி இந்தியாவில் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் உருவாக வேண்டுமென கோரிக்கை எழும்பியது. காங்கிரஸ் கட்சி விடுதலைப் போராட்டக் காலத்தில் மாநில மொழிகளில் பேசி சுதந்திர தாகத்தை தட்டியெழுப்ப முடியும் என்ற அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சியின் மாநில அமைப்புகளை மொழி அடிப்படையிலான மாநிலக்குழுக்களாக அமைத்து செயல்படுத்தியது. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலேயே தமிழ்நாட்டுக்கும், ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும் தனித்தனியான மாநில குழுக்களை அமைத்திருந்தார்கள். முன்னர் மொழி வழி மாநிலம், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பதே காங்கிரஸ்காரர்களின் கோஷமாக அப்போது இருந்தது.

1947ம் ஆண்டு நாடு விடுதலை பெற்ற பின்பு மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மொழி பேசும் மக்கள் மத்தியிலும் உருவாகியிருந்தது. ஆனால், ஆட்சி பொறுப்பினை ஏற்ற இந்திய பெருமுதலாளித்துவ வர்க்கமும், அதற்கு தலைமைதாங்கிய காங்கிரஸ் அரசும் மக்களின் இத்தகைய எண்ண ஒட்டங்களை ஏற்க மறுத்துவிட்டனர். இதற்கு தீர்வுகாண காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீத்தாராமையா ஆகிய மூவரைக் கொண்ட குழு பல மொழி பேசும் மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மொழிவழி மாநிலங்களை விட நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என சிபாரிசு செய்தார்கள். ஆட்சிக்கு வந்த காங்கிரசுக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை விட பெருமுதலாளிகளின் நலன்களே பிரதானமாகிப்போனது.

ஆந்திரம் தனி மாநிலமானது
நீண்டகாலமாக ஆந்திர மக்களின் தெலுங்கு மொழி அடிப்படையிலான மாநிலக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட காரணத்தால் அம்மக்கள் விடுதலைக்குப் பிறகு மிகப்பெரும் போராட்டத்தை துவக்கினார்கள். பொட்டி ஸ்ரீராமலு 1952 அக்டோபர் 13ம் நாள் இக்கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். இப்போராட்டம் மக்களின் பேரெழுச்சியாக உருவெடுத்தது. மாநிலம் முழுவதும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டு மாநிலமே ஸ்தம்பித்தது. இப்போராட்டத்தை அடக்க காங்கிரஸ் கட்சி நடத்திய துப்பாக்கி சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பேர் படுகாயங்களோடு கைது செய்யப்பட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் அரசின் கொள்கை முடிவுகளை நிர்ப்பந்திக்க யாரும் முயற்சிக்கக்கூடாது என அறிவித்ததுடன், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டிகள் ஆதரவளிக்கக் கூடாதென அகில இந்திய தலைமை கட்டளைப் பிறப்பித்தது. அதையும் மீறியே போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பொட்டி ஸ்ரீராமலு 65வது நாள் மரணமடைந்தார். இதையொட்டி ஏற்பட்ட பலமான கிளர்ச்சியின் காரணமாக வேறு வழியில்லாமல் சென்னை மாகாணத்தோடு இணைந்திருந்த ஆந்திர பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி ஆந்திர மாநிலமாக 1953ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவில் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே.

தனி ஆந்திர மாநிலம் ஏற்பட்டதையொட்டி நாடுமுழுவதும் தனி மாநிலங்களுக்கான போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. காவல்துறையை பயன்படுத்தி போராட்டங்களை அடக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் எதிர்விளைவுகளையே உருவாக்கின. இதன்காரணமாக, 1953ம் ஆண்டு டிசம்பர் 22ம்தேதி மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் (எஸ்.ஆர்.சி.) அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக சையத் பைசல் அலி, உறுப்பினர்களாக சர்தார், கே.எம்.பணிக்கர் மற்றும் ஹெச்.என்.குரூன்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஆணையத்தை அமைத்த கையோடு, இந்த ஆணையத்திற்கு புதிய மாநிலங்கள் அமைப்பதற்கான எந்த கோரிக்கைகளையும் காங்கிரஸ் கமிட்டிகள் முன்வைக்கக்கூடாது என்ற கட்டளையையும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை பிறப்பித்தது. இதையும் மீறி பல காங்கிரஸ் கமிட்டிகள் கோரிக்கைகளை முன்வைத்தன.

மொழிவழி மாநிலங்களும், கம்யூனிஸ்ட் கட்சியும்
வங்க பிரிவினையை எதிர்த்து கிளம்பிய போராட்டத்தினைத் தொடர்ந்து தெலுங்கு பேசும் மக்கள் தங்களுக்கு தனி மாநிலம் அமைக்க வேண்டுமென 1927லேயே கோரிக்கை வைத்து போராடினார்கள். இந்தியாவின் சிக்கல்கள் நிறைந்த தேசிய இனப் பிரச்சனையில் மார்க்சிய கண்ணோட்டத்தோடு, மிகச்சிறந்த அணுகுமுறையினை உருவாக்கியது ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாகும். “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’’ என லட்சிய முழக்கத்தை கம்யூனிஸ்டுகள் எழுப்பினாலும் உலக முழுமைக்கும் அல்லது இந்திய நாடு முழுமைக்கும் ஒரே மொழி என்ற கோஷத்தை எப்போதும் முன்வைத்ததில்லை.
ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், பண்பாடு, பொருளாதார வாழ்வியல், தொடர்ச்சியான நிலப்பரப்பு இவைகளைக் கொண்ட மக்கள் தனி தேசிய இனமாகவும், அவர்களது உணர்வுகளுக்கு தனி முக்கியத்துவம் மற்றும் மாநிலம் அளிக்க வேண்டும் என்பதை கொள்கை முழக்கமாக வரலாற்று நெடுகிலும் கம்யூனிஸ்டுகள் எழுப்பி வந்துள்ளார்கள். இந்த அடிப்படையிலேயே 1938 முதல் இந்தியாவில் மொழி வழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள்.

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் என்ற அடிப்படையில் ‘விசால ஆந்திரா’ என்ற கோஷத்தை தோழர் பி.சுந்தரய்யா தலைமையில் ஆந்திரத்திலும், மலையாள மொழி பேசும் பகுதிகளையெல்லாம் ஒருங்கிணைத்து, ‘நவகேரளம்’ என்ற கோஷத்தை தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலும், தமிழ் பேசும் பகுதிகளை ஒருங்கிணைத்து ‘ஐக்கிய தமிழகம்’ என்கிற கோஷத்தை பி.ராமமூர்த்தி, ஜீவா ஆகியோர் தலைமையிலும் கம்யூனிஸ்டுகள் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே எழுப்பி வந்தார்கள். 1946ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்கும், தாய்மொழி கல்வி, ஆட்சிமொழி நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. விடுதலைக்குப் பின்னர் 1951ல் உருவாக்கப்பட்ட கட்சி திட்டத்திலும் இவைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மறுசீரமைப்பு குழுவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமைக்குழு மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறு அமைக்கப்படுவதற்கு குறிப்பிட்ட மொழி பேசும் கிராமங்களை அளவுகோலாக கொள்ள வேண்டுமெனவும் வற்புறுத்தி விரிவான கோரிக்கை மனுவினை சமர்ப்பித்தது. அம்மனுவில் ஒவ்வொரு மாநிலமும் எந்தெந்த பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென விபரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன. எஸ்.ஆர்.சி. முன் சமர்ப்பிக்கப்பட்ட உருப்படியான மாநிலங்கள் மறுசீரமைப்பு சம்பந்தமான மனு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினால் அளிக்கப்பட்டது மட்டுமே. இது இன்றைக்கும் சிறந்த ஆவணமாக உள்ளது.

தமிழ்நாடு உருவானது
இந்திய பெருமுதலாளிகளைப் போலவே தமிழக முதலாளிகளும் அப்போதுள்ள சென்னை மாகாணமே தொடர வேண்டுமென வற்புறுத்தினார்கள். அவர்களது நோக்கமெல்லாம் தங்களது பொருட்களை விற்பனை செய்ய விரிவடைந்த சந்தை தேவை என்பதை தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. முதலமைச்சராக இருந்த ராஜாஜியும், திராவிட இயக்கம் முன்வைத்திருந்த திராவிட நாடு என்ற கோரிக்கைக்கு தட்சண பிரதேசம் என புதுப்பெயர் சூட்ட வேண்டுமென வற்புறுத்தினார். தமிழ்மொழி அடிப்படையிலான தமிழ் மாநிலம் அமைக்க வேண்டுமென எந்த இயக்கமும் கோரிக்கை முன்வைக்காத நிலையில், ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கான கோரிக்கையை முன்வைத்தது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தியது.

சென்னை நகரில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன், கே.முத்தையா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்டமான போராட்டத்தின் மீது காவல்துறை கண்மூடித்தனமான அடக்குமுறையை ஏவியது. போராட்டத்திற்கு தலைமைதாங்கிய தலைவர்கள் உள்பட எண்ணற்ற தோழர்கள் படுகாயமடைந்தனர். தமிழர்களுக்கு தனியான மாநிலம் அமைக்க வேண்டுமென்பதற்காக இரத்தம் சிந்தி போராடியது கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. இப்போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளோடு தமிழரசு கழக தலைவர் மா.பொ.சிவஞானமும் இணைந்து போராடினார்.

அமைக்கப்பட்ட மாநிலங்கள் மறுசீரமைப்பு குழு தனது அறிக்கையினை 30.09.1955 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் தமிழ்நாடு, கேரளா, கன்னட மக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருந்தன. ஆனால், அதேசமயம், இதர பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன. இக்குழு சிபாரிசுகள் படி இந்தியாவில் 16 மாநிலங்கள் அமைக்கப்பட்டாலும், பல மாநிலங்களுடன் மொழி அடிப்படையில் அமைக்கப்படவில்லை. மொழிவாரியாக ராஜ்யங்கள் அமைப்பது என்ற கோட்பாடு மட்டுமே நமக்கு அடிப்படையாக இருக்க முடியாது என இக்குழு வலிந்து கூறுவது ஏற்கமுடியாது என கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளரான தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் தனது அறிக்கையில் குறிப்பிட்டதன் மூலம் விளங்கி கொள்ள முடியும். இக்குழுவின் சிபாரிசுபடி மீண்டும் பல மொழி பேசும் மக்கள் இணைந்த மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன்விளைவாக, மொழி அடிப்படைகளான மாநிலம் உருவாகுவதற்கான போராட்டங்கள் விடுதலைக்குப் பின்னரும் பல

10 ஆண்டுகள் நீடித்தன என்பது இந்தியாவின் சோகமான வரலாறு.மறுசீரமைப்புக் குழுவின் மீதான அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பி.சி.ஜோஷி வெளியிட்ட அறிக்கையும், மாநிலச் செயலாளர் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அறிக்கையும் இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது தோழர் ஜீவா ஆற்றிய பேருரையும் சிறந்த ஆவணங்களாக திகழ்கின்றன. பெருமுதலாளிகள் மற்றும் பிரதேச முதலாளிகளின் நலன்களை மையமாக கொண்டு மக்களின் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, இன உணர்வுகளை புறந்தள்ளிய அரசியல் இயக்கங்களுக்கு மத்தியில் கம்யூனிஸ்டுகள் இந்திய ஒற்றுமைக்கு குரல் கொடுக்கும் அதேசமயம், மக்களின் மொழி சம்பந்தப்பட்ட ஜனநாயக உள்ளுணர்வுகளுக்கு எவ்வாறு போராடினார்கள் என்பதற்கு இந்த ஆவணங்களே சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

மொழிவரி மாநிலங்கள் உதயம்
மாநிலங்களின் மறுசீரமைப்பு குழுவின் சிபாரிசு அடிப்படையில் 1956 நவம்பர் 1ம் நாள் தமிழ்நாடு, கேரளம், கன்னடம் ஆகிய மாநிலங்கள் அமைக்கப்பட்டது. மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த போது சில பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்க வேண்டுமென எதிரும் புதிருமான கோரிக்கைகளுக்கான இயக்கங்களும் நடைபெற்றன. உதாரணமாக, சென்னை நகரத்தை தங்கள் மாநிலத்தோடு இணைக்க வேண்டுமென ஆந்திர மாநிலமும், தமிழகமும் கோரி வந்தன. ஆனால், கம்யூனிஸ்டுகள் இத்தகைய பிரதேச உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுக்காமல், நியாயமான கோரிக்கைகளுக்காக குரல் எழுப்பி வந்தார்கள். சென்னை நகரத்தை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென தமிழக கம்யூனிஸ்டுகளும், ஆந்திர கம்யூனிஸ்டுகளும் ஒருசேர மனு அளித்தனர். இதன் அடிப்படையிலேயே, சென்னை நகரம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டு தமிழகத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென்ற போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினார்கள். இதையொட்டி, குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கான கோரிக்கையை கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தோழர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இதற்காக வலுவாக போராடினார்கள். 1962ம் ஆண்டு பெயர் மாற்றத்திற்கான சட்ட திருத்த மசோதாவை தோழர் பி.ராமமூர்த்தி நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து பேசினார். ஆனால், அந்த மசோதா விவாதத்திற்கு வரும் நேரத்தில் இந்திய – சீனா எல்லை போர் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட காரணத்தால் அந்த திருத்த மசோதாவை முன்மொழிந்து நாடாளுமன்றத்தில் மேற்குவங்கத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தோழர் பூபேஷ் குப்தா பேசினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணாதுரை அதை ஆதரித்து குரல் கொடுத்தார்.

பெரும்பான்மை பலம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் நாடாளுமன்றத்தில் இம்மசோதா தோற்கடிக்கப்பட்டது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு 55வது நாள் உண்ணாவிரதத்தில் மரணமடைந்தார். அவரது போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் துணை நிற்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் ஆட்சி நீடிக்கும் வரையிலும் சென்னை மாகாணத்தின் பெயர் மாற்றத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு அண்ணா முதலமைச்சரான பின்னரே இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி, பயிற்று மொழி நீதிமன்ற மொழியாக வேண்டுமென்ற கம்யூனிஸ்டுகள் எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை அரங்கேற்றும் முயற்சி அனுதினமும் நடந்து கொண்டிருந்தது. அரசு நடத்தும் மழலை பள்ளிகளிலும் ஆங்கிலம் கோலோச்சும் நிலைமை உருவாகியுள்ளது. இன்னொருபக்கம் மத்திய பாஜக அரசு மூலம் இந்தியையும் அதனைத்தொடர்ந்து சமஸ்கிருதத்தையும் அரியணையேற்ற பகீரத முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவைகளுக்கு மாற்றாக தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழியாக அரங்கேற்றுவதற்கான போராட்டங்களை தொடர வேண்டியது அவசியமாகும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வழிகாட்டப்படும் பாஜகவுக்கு மொழிவழி மாநிலங்கள் மீதோ, மாநில சுயாட்சி மீதோ மரியாதை இல்லை. பலவீனமான மாநில அரசுகள், அதிகாரங்கள் குவிக்கப்பட்ட மத்திய அரசு என்பதே அவர்கள் கோட்பாடு. எனவே, மொழி வழி மாநிலங்களை தொடர்ந்து சிதறடிக்க முயற்சி மேற்கொள்கிறார்கள். மாநில மொழிகளை அழிக்க நினைக்கிறார்கள். இதற்கு மாற்றாக, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை மத்திய ஆட்சி மொழியாக மாற்றவும், நாடாளுமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தடையின்றி பேசவும் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் வழக்காடு மொழியாக, வழிபாட்டு மொழியாக, நிர்வாக மொழியாக, நீதி மொழியாக, பயிற்று மொழியாக மாற பாடுபடுவோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.