சத்துணவு ஊழியர் சங்க பிரதி நிதிகளுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சத்துணவு ஊழியர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் ஆகியோர் காலமுறை ஊதியம், ஓய்வூதியமாக ரூபாய் 9 ஆயிரம், பணிக்கொடையாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அனுமதி மறுத்தும், பெண் ஊழியர்களையும், நிர்வாகிகளையும் கைது செய்தும் காவல்துறையினர் ஜனநாயக விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டு போராட்டத்தை முடக்கி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகாலமாக இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் தள்ளிபோடப்பட்டு வருகிறது. கடந்த 19.2.2016 அன்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சத்துணவு ஊழியர்கள் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் எதிர்வரும் ஊதியக்குழுவே பரிசீலிக்கும் என அறிவித்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

அரசுப்பள்ளிகளில் பயிலும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மதிய உணவும், பராமரிப்பும் சேவை நோக்கத்துடன் வழங்கி நிரந்தரப் பணியாற்றி வருகிற இந்த ஊழியர்களின் பிரச்சனையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த ஆக்கப்பூர்வமான முன்யோசனைகளும் வழங்கப்படாத பின்னணியில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் காரணமாக வெளி ஆட்களை வைத்து உணவு தயாரித்து பரிமாறப்படுவதால் ஏழை மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள் என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

எனவே, குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அடக்குமுறைகளை கைவிட்டு, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்து, சத்துணவு ஊழியர் சங்க பிரதிநிதிகளை தமிழக முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Leave A Reply

%d bloggers like this: