புதுக்கோட்டை:
அக். 28 ஆம் தேதி அன்று காணாமல் போன இளம்பெண் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் ஆற்றில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (19). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு மெடிக்கலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அக். 28 ஆம் தேதி முதல் கஸ்தூரியைக் காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து அப்பெண்ணை தேடி வந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் ஆற்றில் சடலமாக இளம்பெண் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல் கஸ்தூரியினுடையதுதான் எனவும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி உறவினர்கள் கீரமங்களம், பனங்குளம், கொத்தமங்கலம், ஆவனம் கைகாட்டி, மரமடக்கி உள்ளிட்ட பலவேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆலங்குடியில் டாட்டா ஏசி வாகனம் ஓட்டும் நாகராஜூக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இளம்பெண்ணை நாகராஜ் மூலம் கடத்திச் சென்று கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதர் சங்கம் கண்டனம்
இச்சம்பவத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலளார் டி.சலோமி, தலைவர் பி.சுசீலா ஆகியோர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் காலை வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து வீடு திரும்பும் வரை பல்வேறு பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறை மிகுந்த மெத்தனம் காட்டி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுக்கும் புகாருக்குக் கூட முறையான நடவடிக்கை எடுப்பதில்லை.

இதன் உச்சகட்ட வெளிப்பாடுதான் கஸ்தூரியின் கொடூரக் கொலைச் சம்பவம். கஸ்தூரின் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.