புதுக்கோட்டை:
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் பாடத்திட்டத்தை தாண்டிய பொதுவான புத்தகங்களை வாசித்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 3-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகின்ற நவ.24 முதல் டிச.3-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடம் புத்தகத்தின் அவசியத்தை விளக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 3-ஆம் பாட வேளையில் பள்ளி நூலகங்களில் இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. புத்தகத் திருவிழா வரவேற்புக்குழு நிர்வாகிகளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று இதற்கான அழைப்பிதழைக் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் செவ்வாய்க்கிழமையன்று இந்தப் புத்தக வாசிப்பு இயக்கம் மிகப்பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது. புத்தக வாசிப்பில் சுமார் 2.5 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளதாக கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் வரவேற்புக்குழுத் தலைவர் தங்கம்மூர்த்தி, செயலாளர் அ.மணவாளன், பொருளாளர் எம்.வீரமுத்து, அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், கவிஞர் நா.முத்துநிலவன், எல்.பிரபாகரன், பேரா.கருப்பையா, முத்துச்சாமி, சு.பீர்முகமது, பவுனம்மாள், உஷாநந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: