கோவை : காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை காவல்துறையினர் அராஜகமான முறையில் இழுத்து சென்று கைது செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு காலமுறை ஊதியத்துக்கு பதிலாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சமையலர் மற்றும் உதவியாளரை முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைமையில் செவ்வாயன்று இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்ஒருபகுதியாக கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.இன்னாசிமுத்து, மாவட்ட செயலாளர் என்.பழனிச்சாமி, முன்னாள் மாநில தலைவர் கே.பழனிச்சாமி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் மிக அராஜகமான முறையில் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினரின் இந்த தாக்குதலில் சூலூரை அடுத்த ஏ.ஜி புதூரைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளரான உமாராணி (42) என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதேபோல் ஏரளாமான பெண் ஊழியர்கள் படுகாயமடைந்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை சத்துணவு ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு
இதேபோல், ஈரோடு மாவட்டஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சம்பத் நகர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.தனுஷ்கோடி தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு, மாவட்ட தலைவர் ஜே.பாஸ்கர்பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.