===கொடியேரி பாலகிருஷ்ணன்,கேரள மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)===                                                                                       ஆண்களைப்போல பெண்களுக்கும் சமூகநீதியும் சமவாய்ப்பும் கிடைக்க உதவும் ஒரு மதச்சார்பற்ற  இந்தியாதான் தேவை. அதற்கான நல்லதொரு நடவடிக்கையாக சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கான தீர்ப்பை பார்க்கும் சிபிஎம் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.                                                                                                                                                                                                                                                                   சபரிமலையை மற்றொரு அயோத்தியாக்கும் பெரும் திட்டத்தை (மாஸ்டர் பிளான்)
பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் உருவாக்கியிருந்தன. துலா மாத (ஐப்பசி) பூஜைக்காக சபரிமலை கோயில் திறக்கப்பட்டபோது நம்பிக்கையின் பெயரில் கேரள மாநிலத்தில் வகுப்புவாத வன்முறை நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்காக மாநிலத்திற்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் சுமார் 3 ஆயிரம்பேரை சபரிமலை காட்டுக்குள்ளும் வெளியிலும் முகாமிடச் செய்தனர். அவர்கள் நடத்திய வன்முறைகளுக்கும், அட்டகாசங்களுக்கும் அளவில்லை.

மலையேற வந்த 50 வயதைக் கடந்த பெண்களைக்கூட தொல்லை செய்தனர். உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வின் தீர்ப்பை அமல்படுத்தும் பொருட்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முயன்ற காவல்துறையினரையும், ஊடகவியலாளர்களையும் கொடூரமாக தாக்கினார்கள். பெண் ஊடகவியலாளர்கள் 7 பேரை குண்டர்கள் தாக்கினர். தொலைக்காட்சிகளின் காமிராக்களும் மைக்குகளும் வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டன. சங்பரிவார் குண்டர்களின் கொலைக் கத்தியின் முனையிலிருந்து தப்பி சபரிமலை கோயில் மூடப்பட்ட அன்று சில மணிநேரங்களுக்கு முன்பாகவே அங்கிருந்து பலர் வெளியேறினார்கள்.

சபரிமலையில் ரத்தக்களரி ஏற்படுத்தவும், நாட்டில் வகுப்புவாத வன் முறைகளை நடத்தவும் சங் பரிவாரக் கும்பல்கள் முயன்றது நம்பிக்கையை பாதுகாப்பதற்கல்ல. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இடங்களைப் பெறுவதற்கு தேவையான ஓட்டுக்காக நீசத்தனமான அரசியலை சங்பரிவார் அரங்கேற்றியது. அறிவொளி பெற்ற உண்மையானநம்பிக்கையாளர்கள் மற்றும் மதச்சார்பற்ற சக்திகளது தலையீடு, காவல்துறை மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை ஆகியவை காரணமாக தங்களது பெரும் திட்டத்தை சங்பரிவாரால் நிறைவேற்ற முடியாமல்
போனது. ஆனால், இந்த கும்பலுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஊக்கமளித்தது காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கட்சிகளின் நிலைப்பாடுகள். இதை புரிந்துகொள்ள நவீன வரலாற்றில் பங்குவகித்துள்ள சில சமுதாய அமைப்பு
களால் இயலவில்லை.

தீர்ப்பை அமல்படுத்தக் கூறும் மத்திய அரசு
சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முயற்சித்ததாக பாஜகவும், காங்கிரசும் கேரள மாநில அரசின் மீதும் சிபிஎம் மீதும் குற்றம்சாட்டி வருகின்றன. தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என்கிற பாஜகவினருக்கு மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமரோ உள்துறை அமைச்சரோ அறிவுரை வழங்கினார்களா? தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறினார். ராணுவத்தை பயன்படுத்தியாவது பெண்களுக்கு தரிசன உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார். தீர்ப்புக்கு எதிராக ஒருபகுதியினர் போராட்டம் நடத்துவதாகவும் இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெண்கள் உட்பட அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசிடம் மத்திய அரசு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தது.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு தானாக வந்ததல்ல. கோயில் மரபுகளை துல்லியமாக பரிசீலித்து 12 ஆண்டுகள் நடந்த சட்டப் போராட்டங்களுக்கு பிறகு வந்த தீர்ப்பாகும். இதில் நம்பிக்கையாளர்களில் ஒருபகுதியினரின் தவறான புரிதல் அல்லது
வேறு காரணங்களுக்காக இந்த தீர்ப்புடன் உடன்பட முடியவில்லை. என்எஸ்எஸ் (நாயர் சர்வீஸ் சொசைட்டி) உள்ளிட்ட அமைப்புகள் சீராய்வு மனுக்களுடன் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன. வழக்கை நவம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை அமல்படுத்துவதே இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசின் கொள்கைநிலை.

பாஜகவின் ஊதுகுழலாக காங்கிரஸ்
அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை அமலாக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியோ, காங்கிரஸ் தலைவரோ இதுவரை கூறவில்லை. தீர்ப்பு வந்தவுடன் கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் அதனை வரவேற்றனர். அவர்கள் இப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். அதன் பிறகு கேரளத்தில் சங்பரிவார் சக்திகள் விரித்துள்ள வலைக்குள்பாய்ந்து பாஜகவின் ஊதுகுழலாக கேரளத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தரம் தாழ்ந்து விட்டனர். அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை கடந்து செல்ல அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் கோர வேண்டும் எனவும் அதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார்.

பெருவெள்ளத்தில் மூழ்கிய கேரளத்தை புதுப்பித்து நிர்மாணிக்க வெளிநாட்டு உதவிகள் பெற அனுமதிக்க வேண்டும் என சட்டமன்றம் கேட்டுக்கொண்டபோதிலும் மத்திய அரசு அதை புறக்கணித்துவிட்டது. மாநில அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லவும் அங்குள்ள மலையாளி சகோதரர்களிடம் உதவிகள் கோரும் வாய்ப்பையும் கூட மத்திய அரசு மனிதாபிமானமற்ற முறையில் நிராகரித்தது. அதனால் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க சட்டமன்றத்தின் பரிந்துரை தேவையில்லை. ஸ்ரீதரன்பிள்ளையின் கோரிக்கையை ரமேஷ் சென்னித்தலா ஏற்கவில்லை. ஆனால் கேபிசிசி அரசியல் விவகாரக் குழு கூட்டம் சென்னித்தலாவின் நிலைப்பாட்டை நிராகரித்துள்ளது. ஸ்ரீதரன்பிள்ளையின் கோரிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சட்டமன்றக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்கிற பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் வழிமொழிந்துள்ளார்.

சங்பரிவாரின் அரசியல் ஆயுதம்
கேரளத்தில் இதுவரை நாடாளுமன்ற இடங்களைப்பெற இயலாத சங்பரிவார் விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இடங்களும் வாக்குகளும் பெறுவதற்
கான இலக்காக கொண்டு சபரிமலையை அரசியல் ஆயுதமாக்கி இருக்கிறது. இந்து சமுதாயங்களில் ‘பீதியும், அச்சஉணர்வும், வெறுப்புணர்வும்’ வளர்ப்பது; அதோடு இந்துக்கள் அல்லாதாரோடு பகை ஏற்படுத்துவது; இவற்றின் வழியாக வகுப்புவாத வன்முறைகளுக்கு பாஜக – ஆர்எஸ்எஸ் சக்திகள் களம் அமைக்கின்றன. இதற்கு துணை நிற்கும் காங்கிரஸ் யுடிஎப் கட்சிகள் மன்னிக்க முடியாத குற்றத்தை நாட்டு மக்களுக்கு இழைத்து வருகின்றன. கொடி பிடிக்காமல் போராட்டத்தில் பங்கேற்பது என்கிற முடிவை மாற்றி கொடி பிடித்து போராட்டத்தில் பங்காளிகளாகலாம் என்பது அவர்களது புதிய தீர்மானம்.

சபரிமலை குறித்து சரியான மதச்சார்பற்ற நிலைப்பாட்டை காற்றில் பறக்கவிடும் மாநில காங்கிரசுக்கு காத்திருப்பதுகுஜராத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே ஆகும். ஆண்களைப்போல பெண்களுக்கும் சமூகநீதியும் சமவாய்ப்பும் கிடைக்க உதவும் ஒரு மதச்சார்பற்ற இந்தியா
தான் தேவை. அதற்கான நல்லதொரு நடவடிக்கையாக சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கான தீர்ப்பை பார்க்கும் சிபிஎம் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. சபரிமலை வனத்திலும் வெளியிலும் நிலய்கல்லிலும் அணிவகுத்த சங்பரிவாரின் 3 ஆயிரம் கயவர்கள் அல்ல கேரளத்தின் நம்பிக்கையாளர் சமூகம். நம்பிக்கையாளர்களை தொடர்பு கொள்ளாமலே உச்சநீதிமன்ற தீர்ப்பு அமலாக்க வேண்டியதாகும். பெண்களின் வழிபாட்டு உரிமையுடன் சமூகநீதியின் பகுதியாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளதை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோர் புரிந்துகொள்ள வேண்டும்.

மறுமலர்ச்சி கால அடிப்படைகளை தங்களுக்கு கற்பிக்க பினராயி விஜயனும் கொடியேரியும் வர வேண்டாம் என சென்னித்தலாவும் முல்லப்பள்ளியும் கூறுகின்றனர். அவர்கள் பாரபட்சமின்றி பாதைகளில் செல்லவும் கோயில்களுக்கு செல்லவும் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போராட்டங்களில் பங்கு வகித்த டி.கே.மாதவன்,கே.பி.கேசவமேனோன், சி.கேசவன் உள்ளிட்ட தலைவர்க
ளின் பாரம்பரியத்தை கைவிட்டு மறுமலர்ச்சியின் வரலாற்றை பின்னோக்கி செலுத்த முயற்சிப்பது தீங்குவிளைவிக்கும் செயலாகும். ஸ்ரீநாராயணகுரு உள்ளிட்ட
மறுமலர்ச்சி நாயகரும், மன்னத்து பத்மநாபன் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளும் நமக்கு வழிகாட்டிகள்.

மதச்சாயம் பூசும் சங்பரிவார்
சபரிமலையில் காவல்துறையினர் பணியாற்றுவது பல்லாண்டு காலமாக நடந்து வருவது. அங்கு வரும் காவல்துறையினரும், அதிகாரிகளும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது அட்டூழியம். சாதியும் மதமும் பார்த்து காவல்துறையினரை சங்பரிவாரின் ‘சமூக ஊடக
கயவாளிகள்’ மட்டுமல்ல; ஸ்ரீதரன் பிள்ளை போன்ற தலைவர்களே கூறுவது அவமானகரமானது. இது மதச்சார்பற்ற கேரளத்திற்கு களங்கமாகும். ஐயப்பனின் நந்த
வனமான சபரிமலையில் ஐயப்பனே அழைத்துக்கொண்ட வாவர் சாமி உண்டு. அதுபோல் மாளிகைப்புறத்து அம்மா உண்டு. இங்கு இந்து மரபுகள் பின்பற்றப்படும் கோயில்
என்பதற்கு இணையாக அனைத்து சாதிமத பிரிவினரும் தரிசனம் செய்ய அனுமதி உள்ள இடமுமாகும்.

இங்கு அலுவலக பணிகளுக்காக மற்ற அதிகாரிகளுடன் காவல்துறை ஐஜி மனோஜ் ஆப்ரகாம் வந்தது சங்பரிவாரிகளின் கண்களுக்கு கொடிய செயலாகபட்டுள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற அதிகாரிகள் சபரிமலைக்கு வந்துள்ளனர். இங்கு பணி நிமித்தம் வரும் காவல்துறை அதிகாரிகளின் சாதியையும் மதத்தையும் ஆராய்ச்சி செய்பவர்கள் நாளை சபரிமலையில் தர்மசாஸ்தாவை உறங்க வைக்கும் ‘ஹரிவராசனம்’ பாடியமகத்தான பாடகரின் சாதி மதம் பற்றியும் கூறுவார்கள். இந்த போக்கை ஏற்றுக்கொள்ள கல்வியிற் சிறந்த கேரளத்தால் முடியாது. காவல்துறையிலும் சமூகத்திலும் சபரிமலையின் பெயரால் வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தும் போக்கை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும். சபரிமலையை மற்றொரு அயோத்தியாக மாற்ற கேரளம் அனுமதிக்காது.

Leave a Reply

You must be logged in to post a comment.