குறைந்தபட்ச கல்வித் தகுதியில் பணியமர்த்தப்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள் 34 ஆண்டு காலத்தைக் கடந்த பின் ஊதிய மாற்றத்தில் ரூ.7700ல் தொடங்கும் ஊதியத்தில் குறைந்த பட்ச ஊதியத்தைக் கூட எட்டாத நிலை உள்ளது. அதேபோல தற்போது சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.4100, ரூ.3000 என அரசு நிர்ணயித்த ஊதியம், தினக்கூலி மற்றும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் வழங்கப் படும் ஊதியத்தைக் கூடத் தொடவில்லை.ஆனால் அதை அரசு நியாயப்படுத்துகிறது.

சத்துணவுத் திட்டத்திற்கென மத்திய அரசு ஒரு குழந்தைக்கு 150 கிராம் அரிசியும், உணவு தயாரிப்பு செலவினத்திற்காக ரூ.4.60 முதல் ரூ.5.00 வரை வழங்குகிறது. தேவையான பாத்திரங்களும் மையக் கட்டிடங்களும் அதற்கான நிதியும் இன்றைய விலைவாசிக்கு ஏற்றபடி உயர்த்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குழு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ள நிலையில், தமிழக அரசு கூடுதல் நிதியினைப் பெற முயற்சி மேற்கொள்ளாமல், திட்டத்தினை சுருக்குவது என்ற ரீதியில் செயல்படுவதுதான் சத்துணவு ஊழியர்களின் பிரச்சனைகளுக்குக் காரணமாகும்.

சத்துணவுத்துறையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேல் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி சத்துணவுத் திட்டம் சிறப்புடன் நடைபெற நடவடிக்கை மேற்கொள் ளாமல் 25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள மையங்களை மூடுவது என தமிழக அரசு பின்னோக்கி யோசிக்கிறது. தமிழகம் தான் இந்தியா முழுமைக்கும் சத்துணவுத்திட்டத்தை அமல்படுத்திட வழிகாட்டியாக விளங்கியது. ஆனால் சத்துணவு அமைப்பாளராக, சமையலராக, சமையல் உதவியாளராக, சமூக நலப்பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை முறையே வெறும் ரூ.700, ரூ.600 மற்றும் ரூ.500 மட்டுமே. பல்லாண்டு காலம் சத்துணவுத் துறையில் வேலை செய்து விட்டு இப்போது, அடுத்த வேளை உணவிற்குக் கூட வழியின்றி தாங்கள் பணியாற்றிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களிலேயே சோற்றுக்காக தட்டேந்தி தவமிருக்கும் ஓய்வூதியர்களாக மாறியிருக்கும் அவலம் துயரமானது.

இத்தகைய நிலையில்தான், தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியும் ஏமாற்றப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் காத்திருப்பு போராட்டத்தை சத்துணவு ஊழியர்கள் நடத்தினார்கள். ஆனால் அரசு அலட்சியத்தின் உச்சத்தில் உள்ளது. போராடும் ஊழியர்களை அழைத்துப் பேசாத நிலையில்29.10.2018 முதல் சத்துணவு மையங்களை மூடிவிட்டு காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதோடு மாவட்ட தலைநகரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் மறியல் செய்து கைதாவது என திட்டமிட்டிருக்கிறார்கள்.சத்துணவு ஊழியர்களின் பிரச்சனையை பேசக்கூட தயாராக இல்லாத அரசுக்கு பாடம்புகட்டுவதுதான் சரி!

Leave a Reply

You must be logged in to post a comment.