===பேராசிரியர் கே. ராஜு===                                                                                                                                                என். ராமதுரை தமிழகத்தின் முன்னோடி அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர். அறிவியல் கட்டுரைகளை எளிதாகவும் சுவையாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதி வந்தவர். தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் அறிவியல் வார இணைப்பாக வெளி வந்த தினமணி சுடரின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர். தினமணி சிறுவர் மணியில் அணுசக்தி, சூரிய மண்டலம் குறித்து தொடர்கள் எழுதியிருக்கிறார். தின மணி, தினத்தந்தி, தமிழ் இந்து போன்ற அனைத்து முன்னணி இதழ்களிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகஅறிவியல் கட்டுரைகள் எழுதிவந்தார். `அறிவியல்புரம்’ என்ற பெயரில் அவர் நடத்திவந்த வலைப்பூவிலும் அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தார். 1967-ல் ஐஸக் அஸிமோவ் எழுதிய “Inside the Atom” புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். அவரது எழுத்துப் பணிக்காக பல்வேறு விருதுகள் அவரைத் தேடி வந்தன. அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை 85-வது வயதில் காலமானார் ராமதுரை.

“இறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பதே அவர் விருப்பம். அவருடைய கட்டுரை அவர் இறந்ததற்கு முன்தினம் தினத்தந்தியில் வெளியானது. அதை மருமகள் அவரிடம் சொல்ல, நினைவு சற்றே இருந்த நிலையில் மருமகளின் கையை அழுத்தி மனநிறைவைத் தெரிவித்தார். அவர் சமீப காலமாக வெவ்வேறு நிலையில் முற்றுப்பெறாமல் இருந்த புத்தகங்களை எழுதி முடித்து பதிப்பாளரிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்தினார். விரைவில் அவை வெளியாகும் என்று நம்பலாம்” என அவரது குடும்பத்தினர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர். அவர் எழுதிய நூல்களில் சில : விண்வெளி ; அணு ; அறிவியல் – எது ஏன் எப்படி?
– இரண்டு பாகங்கள்; எங்கே இன்னொரு பூமி? ;

சூரிய மண்டல விந்தைகள்; பருவநிலை மாற்றம்; ராக்கெட் துறையில் கடும் போட்டா போட்டி; கிரகங்கள், சூரியன், சந்திரயான், செயற்கைக்கோள் பற்றிய கையடக்கப் புத்தகங்கள்.
அணுவைப் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகம் பற்றிய அறிமுகம் அவருடைய வார்த்தைகளிலேயே தொடங்கி இப்படி கொடுக்கப்பட்டது :“ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி
அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். எதுவும் ஆகாது. பல லட்சக்கணக்கான ஜப்பானியர்களைக் கொன்றொழித்த அணுகுண்டு எப்படித் தயாரிக்கப் பட்டது, எப்படி வீசப்பட்டது போன்ற பல கேள்வி களுடன் அணு சக்தி, அணு மின்சாரம், அணு ஆராய்ச்சி
என்று பரந்து விரியும் இப்புத்தகம், அணுவைப் பற்றி மட்டுமல்ல அறிவியல் உலகின் அடிப்படைகளையும் எளிமையாக விளக்குகிறது.”

அதே போல விண்வெளி என்ற நூல் பற்றிய அறிமுகத்தில்..“அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வங்கக்கடலில் புயல் அபாயம் உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். சிறகுகளை விரித்தபடி வானத்தில் மிதந்து கொண்டு இருக்கும் தேவதைகளால் அருளப்படும் அறிவிப்புகள் இவை. அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அந்த தேவதையின் பெயர் செயற்கைக்கோள். முழுக்க முழுக்க அதிசயங்கள் மட்டுமே நிறைந்த தனி உலகம் விண்வெளி. நீங்களும் உங்கள் குழந்தைகளும் எழுப்பக் கூடிய கேள்விகள் அனைத்திற்கும் இதில் விடை உண்டு. உங்கள் முதுகில்
இரண்டு இறக்கைகளைச் சொருகி, விண்வெளிக்கு அழைத்துச் செல்லப் போகிறது இந்நூல்.”
இவை இரண்டும் அவர் எழுதிய நூல்களின் சிறப்பு பற்றிய இரு உதாரணங்கள்தான்.“மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஊடகவியல் துறைக்கும் ஆசான் என். ராமதுரை. பள்ளி, கல்லூரி
களில் தமிழ் அறிவியல் புத்தகங்களைப் படிக்கும்போது சில பாடங்கள் வெகு எளிதாகப் புரியும். சில பாடங்கள்கடுமையாகச் சோதிக்கும். காரணம், அதன் மொழிநடைதான். என்.ராமதுரை தான் எழுதும் அறிவியல் கட்டுரைகளில் கலைச் சொற்களுக்குத் தமிழில் சரியான வார்த்தைகளை வெகு இயல்பாகவும் எளிதாகவும் பயன்படுத்துவார். ஒருவகை யில், மாணவர்களோடு தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்த அறிவியல் ஆசிரியர் அவர்” என்கிறார் திரு.வ.ரங்காச்சாரி தமிழ் இந்துவில் அவர் எழுதிய கட்டுரையில். பத்திரிகையாளர் என்பவர் எப்போதும் கற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும் என்று கூறுவாராம் ராமதுரை.

அவரது மரணம் அறிவியல் உலகுக்கு பெரும் இழப்பு. அறிவியல் மாணவர்கள் அவர் எழுதிய புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.