‘டூரிங்கிற்கு மறுப்பு’ என்ற நூலானது ‘திருவாளர் யூஜின் டூரிங்கின் விஞ்ஞானத்தில் புரட்சி’ என்ற முழுப் பெயரைக் கொண்டதாகும். டூரிங் என்பவர் குட்டி முதலாளித்துவ தத்துவ வாதியாவார். அவர் மார்க்சியத்தை வெறுப்போடு விமர்சித்து எழுதினார். அதற்குப் பதிலடியாகவே இந்நூலை ஏங்கெல்ஸ் எழுதினார்.

இந்நூல் அச்சாவதற்கு முன்பு அதன் கையெழுத்துப் பிரதியை படித்த மார்க்ஸ், ‘அரசியல் பொருளாதார வரலாறு’ என்ற பகுதியை தானே எழுதி அதில் சேர்த்தார். இந்நூல் 1879ஆம் ஆண்டில் வெளிவந்தது.

இந்நூலில் ஏங்கெல்ஸ் மார்க்சியத்தின் மூன்று பிரதான பகுதிகளான இயக்கவியல் மற்றும் வரலாற்றியல் பொருள் முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான கம்யூனிசத்தின் கோட்பாடு ஆகிய மூன்றையும் விளக்கி டூரிங்கின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தத்துவத்தின் வளர்ச்சியை விளக்கிய ஏங்கெல்ஸ், விஞ்ஞான கம்யூனிசம் தோன்றுவது தவிர்க்க இயலாதது என்று உறுதியாகக் கூறினார். இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை விளக்கிய அவர் தத்துவத்தின் அடிப்படையான கேள்விக்கு பொருள் முதல்வாத விடை கூறினார். உலகின் பொருளாயத தன்மை, அறிதல் என்ற அறிவுக் கோட்பாட்டின் அடிப்படைவிதிகள், காலம், இடைவெளி, பொருளுக்கும் இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு, விஞ்ஞானத்தின் வகைப் பிரிவுகள் போன்றவற்றை விளக்கினார்.

இயக்க இயல், அதன் அடிப்படை விதிகள், இயக்க இயலுக்கும் தர்க்க இயலுக்குமிடையிலான உறவு போன்றவற்றையும் அவர் விளக்கியுள்ளார். சமூகத்தின் வளர்ச்சியில் பொருளாதாரம் என்பதன் தீர்மானகரமான பங்கை விளக்கிய ஏங்கெல்ஸ், தனிச் சொத்து மற்றும் வர்க்கங்கள் தோன்றிய விதத்தையும் விவரித்துள்ளார்.

அரசியல் பொருளாதாரம் குறித்து டூரிங்கின் கருத்தை விமர்சித்த ஏங்கெல்ஸ் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் சிறப்பை விளக்கினார்.

விஞ்ஞானப் பூர்வ சோசலிசம், கம்யூனிசம், அரசாங்கம், குடும்பம் போன்றவை குறித்தும் நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான வேறுபாடு மற்றும் உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்குமிடையிலான வேறுபாடு ஒழிக்கப்படுவது குறித்தும் ஏங்கெல்சின் இந்நூலில் விளக்கியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.