கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 8ஆவது மாநில மாநாடு கள்ளக்குறிச்சியில் வியாழனன்று (அக். 25) எழுச்சியுடன் தொடங்கியது.

பிரதிநிதிகள் மாநாட்டு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக சங்கத்தின் மறைந்த தலைவர் கே.பாஷாஜான் இல்லத்திலிருந்து தியாகிகள் நினைவு ஜோதி ஊர்வலமாக மாநாட்டு திடலுக்கு கொண்டுவரப்பட்டது.பாஷாஜான் இல்லத்திலிருந்து அவருடைய மகள் மற்றும் பேத்தி ஆகியோர் தியாகிகள் நினைவு ஜோதியை எடுத்துக்கொண்டு வந்து விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரனிடம் வழங்கினர். பிரதிநிதிகளின் விண்ணதிர முழக்கங்களுக்கு இடையே அதனை அவர் பெற்றுக்கொண்டார். மூன்றாம் தலைமுறையினரும் அமைப்போடு ஒன்றியிருப்பதை இது வெளிப்படுத்தியது. கடந்த 7ஆவது மாநாடு நடைபெற்ற திருவண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட கொடியினை சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.பி.பெருமாள் பெற்றுக்கொண்டார். அதனை மூத்த தலைவர் கிருஷ்ணமூர்த்தி எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.

பிரதிநிதிகள் மாநாடு
தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தியபின் மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் துவங்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் வரவேற்புக்குழு தலைவர் எம்.சின்னப்பா வரவேற்றுப்பேசினார். கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் சங்கத்தின் போராட்ட வரலாறுகளை அவர் எடுத்துரைத்தார். மாநில துணைத்தலைவர் ஜி. செல்வம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஆதிவாசிஉரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய அமைப்பாளர் ஜிதேந்திரசவுத்திரி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். பொதுச்செயலாளர் இரா.சரவணன் வேலை அறிக்கையும், பொருளாளர் பி.சடையப்பன் நிதிநிலையறிக்கையும் சமர்ப்பித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம் தீர்மானங்களை முன்மொழிந்தார். பிரதிநிதிகள் விவாதத்துடன் மாநாடு வெள்ளியன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. வியாழன் மாலையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தீர்மானங்கள்
பழங்குடியின மக்களுக்கு காலதாமதமின்றி இனச்சான்று வழங்கவேண்டும் என்று மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:
எஸ்சி.எஸ்டி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பழங்குடியினருக்கு பொதுத்துறை மற்றும் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கி, பின்னடைவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். எஸ்.சி, எஸ்.டிக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பழங்குடி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படாமல் அரசு ஆவணங்களில் இல்லாத ஆவணங்களை கேட்டு இனச்சான்று வழங்க பழங்குடி மக்களை அலைகழிக்கும் போக்கை கைவிட்டு அரசு ஆணைப்படி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் இனச்சான்று வழங்க வேண்டும்.தகுந்த ஆவணங்கள் இருந்தும் உரிய காலத்தில் இனச்சான்று வழங்காத அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பழங்குடி இனப்பணியாளர்களை மெய்த்தன்மை என்ற பெயரில் மாநில கூர் நோக்குக்குழு, மாவட்ட விழிப்புணர்வுக் குழு, விசாரணைக் குழு என அமைத்து காலவரைமுறையே இல்லாமல் அலைகழிக்கும் போக்கை கைவிடவேண்டும். அதிகாரிகளின் சொந்த திருப்தி முறையை ஒழித்து,குற்றவாளிகளை விசாரிப்பது போல் விசாரிக்கும் டிஎஸ்பி விசாரணை முறையை நிறுத்தி, பதவி உயர்வு, பணப்பலன் ஆகியவற்றை நிறுத்தி வைக்காமல் வழங்கி முறையான விசாரணை மூலம் விசாரணையை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும்.

தமிழகத்தில் பரவலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசித்து வரும் வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அளிக்கப்பட்ட ஆய்வறிக்கை ஓராண்டாக பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே அந்த அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக ஆராய்ச்சி மையம் கள ஆய்வு தொடங்கி ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து பழங்குடி பட்டியலில் வேட்டைக்காரன் இனத்தைச் சேர்க்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: