கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 8ஆவது மாநில மாநாடு அம்மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் இசைக் கருவிகள் மற்றும் பறையிசை நடனத்துடன் கள்ளக்குறிச்சியில் எழுச்சியுடன் தொடங்கியது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டக் கல்வராயன் மலையையொட்டியுள்ள கள்ளக்குறிச்சி நகரில் அக்டோபர் 24,25,26 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் செங்கொடிகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் முக்கிய இடங்களில் மாநாட்டை விளக்கும் டிஜிட்டல் பேனர்கள் கோரிக்கைகளுடன் அழகுற வைக்கப்பட்டுள்ளன.

குடும்பத்துடன் பங்கேற்ற பழங்குடி மக்கள்
புதனன்று மாநிலம் முழுவதுமுள்ள மலைகளிலிருந்தும், மலையை ஒட்டிய சமவெளி பகுதிகளிலிருந்தும் இருளர், வேட்டைக்காரன், குரும்பர், குறவன் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களும் குடும்பத்துடன் திரண்டு வந்திருந்த மலைவாழ் மக்களும் நகராட்சி அலுவலகம் முன்பிருந்து தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை கோஷங்களாக முழங்கியபடி பேரணியில் பீடுநடை போட்டு வந்தனர்.

முன்னதாக பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை செங்கொடியசைத்து துவக்கி வைத்தார். செந்தொண்டர்களின் மிடுக்கான அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது. கவரைத்தெரு, பொதுமேடை மற்றும் முக்கியவீதிகள் வழியாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது. அங்கு புதுவை சப்தர்ஹஷ்மி கலைக்குழுவினரின் அரசியல் கிராமிய கலை நிகழ்சியுடன் மலைமக்களின் பெரிய மேளம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி நகர வீதிகள் வழியாக ஊர்வலம் செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். இதற்குமுன் பல ஊர்வலங்களை இந்நகர மக்கள் கண்டிருந்தாலும் இந்த வித்தியாசமான ஊர்வலத்தை கண்டு வியப்படைந்தனர். ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சங்கத்தின் கல்வராயன்மலைக் கமிட்டித் தலைவர் வி.அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதிவாசி மக்களுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிருந்தாகாரத், அமைப்பின் அகில இந்திய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிதேந்திரசவுத்திரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சண்முகம், மாவால் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, பொதுச்செயலாளர் இரா.சரவணன், பொருளாளர் பி.சடையப்பன் ஆகியோர் உரையாற்றினர். கல்வராயன்மலைக்கமிட்டி செயலாளர் ஏ.செல்வராஜ் நன்றி கூறினார்.

பிரதிநிதிகள் மாநாடு
வியாழன், வெள்ளி இருநாட்கள் தோழர் எஸ்.டி.துரைசாமி நினைவரங்கில் (திருமலை திருமண மஹால்- கூத்தக்குடி சாலை, நீலமங்கலம்) பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் அகில இந்திய தலைவர்களான பிருந்தாகாரத், ஜிதேந்திரசவுத்திரி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.வரதராசன் உள்ளிட்ட தலைவர்களும் 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.