(இந்தியப் பொருளாதாரம் குறித்து இந்தியா டுடே பத்திரிக்கையின் தலைமை ஆசிரியரான அருண் பூரி எழுதியுள்ள கட்டுரை)

கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பப்பட், ’அலை முழுவதுமாக ஓய்ந்து போனால் மட்டுமே யார் நிர்வாணமாக நீந்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்’ என்று ஒரு முறை கூறியிருந்த வாசகம் மிகவும் புகழ் பெற்றதாகும். தற்போதைய இந்தியப் பொருளாதாரம் குறித்தும் அதே போன்றதொரு வாசகத்தை இப்போது நம்மால் கூற முடியும். கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவது, பணவீக்கம் அதிகரித்தல், முதலீடுகளில் ஏற்பட்டிருக்கும் சரிவு, நிதிச் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் பீதி என்று கடலுக்குள் அலை உள்வாங்கியிருக்கிறது. அது பல வங்கியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளைத் தனக்குள் பிடித்து வைத்திருக்கின்றது.

2014இல் மோடி பதவி ஏற்றுக்கொண்ட போது, இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கவில்லை. 2014ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக இருந்ததாகவும், பத்தாண்டுகளுக்கான சராசரி 8.1 சதவீதமாக அப்போது இருந்ததாகவும் 2015ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீடுகள் தெரிவித்தன. 2014ஆம் ஆண்டு மே மாதம் மோடி அரசாங்கம் பதவியேற்றுக் கொண்ட போது, பேரலுக்கு 106 டாலர் என்றிருந்த கச்சா எண்ணெய் விலை, தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28.08 டாலராக என்று அடிமட்ட விலையைத் தொட்டது. இரண்டாவது ஐக்கிய முற்போக்கு முன்னணியின் ஆட்சியின் போது (2009 – 2014) கச்சா எண்ணெயின் சராசரி விலை 93 டாலராக இருந்தது. தற்போதைய தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் அது 53 டாலர் என்பதாக இருக்கிறது. இத்தலைய விலை வீழ்ச்சி மட்டுமல்லாது, ஏராளமான வெளிப்புற காரணிகளும் இணைந்து மோடி அரசாங்கத்தின் கீழ் ஏற்பட வேண்டிய பொருளாதார வளர்ச்சிக்கான மிகச் சரியான  தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. ஆனால் இவையனைத்தும் மிக வேகமாக கொடுங்கனவாக மாறி வருகின்றன. 2017ஆம் ஆண்டில் 8800 கோடி டாலர் அன்னியச் செலாவணி கச்சா எண்ணெய் வாங்குவதற்காகச் செலவழிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட ஆறு மாதங்களில்  ஒரு பேரல் 68  டாலரில் இருந்து  84 டாலர் என்பதாக, 24 சதவீதம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஒரு டாலர் அதிகரிப்பு என்பது இந்தியாவின் இறக்குமதிச் செலவில் 823 கோடி ரூபாயை அதிகரிக்கச் செய்வதாக இருக்கிறது. இதன் விளைவாக கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவிகிதமாக இருந்த நடப்பு நிதிப் பற்றாக்குறையானது, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.4 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

வீழ்ச்சியடைந்து வருகின்ற இந்திய ரூபாயின் மதிப்பு இந்த நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. ரூபாயின் மதிப்பு குறைந்து வந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பது வருத்தமளிப்பதாகவே இருக்கிறது. இந்திய ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 2.15 சதவிகிதம் சரிவடைந்திருக்கிறது. உண்மையில், இறக்குமதி செய்யக்கூடாத பல பொருட்களை குறிப்பாக விவசாயப் பொருட்களை நாம். இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். உயர்ந்து வருகின்ற கச்சா எண்ணெய் விலை பணவீக்கம் குறித்த அச்சத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. மேலும் ரிசர்வ் வங்கியானது நுகர்வையும் முதலீட்டையும் ஊக்குவிக்கும் வகையில் வட்டி விகிதங்களைக் குறைப்பதாகத் தெரியவில்லை. அடுத்து வருகின்றதொரு சந்தர்ப்பத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் என்ற கவலை சந்தைகளில் நிலவுகிறது. அமெரிக்காவில் உயர்ந்து வருகின்ற வட்டி விகிதங்களும், உலகெங்கிலும் நிலவுகின்ற தற்காப்புப் போக்குகளும் இந்திய பொருளாதாரம் குறித்த அச்சத்தை அதிகரிக்கச் செய்யும் பிற உலகளாவிய காரணிகளாக இருக்கின்றன. 2002க்குப் பிறகு, மிக அதிக அளவில் இந்த ஆண்டில் 12.33 பில்லியன் டாலர், சுமார் 90,746 கோடி ரூபாய் அளவிற்கான பணம் இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வெளியே சென்றிருக்கிறது.

இந்த வெளிப்புறக் காரணிகள் மட்டுமல்லாது, உள்நாட்டிலும் கூட சில ஆபத்தான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. வங்கித் துறையின் துயரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசுத்துறை வங்கிகள் 3.1 லட்சம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்திருக்கின்றன. 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திரும்பவராக் கடன்கள் என்கிற மலை போன்ற சுமையை வைத்துக் கொண்டு இந்த வங்கிகள் போராடி வருகின்றன. வணிக நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதற்கான நிதி வசதி அவற்றிடம் இல்லை. நிதிப் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் சாதகமற்ற சந்தை நிலைமைகள் ஆகியவற்றால் புதிய திட்டங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன. முந்தைய காலாண்டை ஒப்பிடும் போது புதிய திட்டங்கள் 41 சதவீதம் குறைந்திருக்கின்றன. முதலீடுகள் 2018 மார்ச் மாதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. இது கடந்த 2017 மார்ச் மாதம் பணமதிப்பு நீக்க அறிவிற்குப் பின் ஏற்பட்ட 29.6 சதவிகித வீழ்ச்சியை விட அதிகமானதாகவே இருக்கிறது. 2011இல் இது 41.2 சதவீதம் என்ற அதிக அளவிற்கு உயர்ந்திருந்தது. சமீபத்தில் 93,000 கோடி ரூபாய் கடனில் இருந்த உள்கட்டமைப்பு நிதி நிறுவனமான ஐ.எல்.எஃப்.எஸ்சிற்கு ஏற்பட்ட வீழ்ச்சி, நிதிச் சந்தைகளில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் துயரங்களோடு கிராமப்புறங்களில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியும் சேர்ந்து கொண்டிருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையை விட சந்தை விலை குறைவாக விவசாயிகளுக்கு குறைந்த அளவிலான வருமானமே கிடைக்கும் என்று 2018ஆம் ஆண்டிற்கான கிரிசில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய வருமானத்தில் ஏற்படும் இந்த குறைவு, நுகர்வோர் பொருட்களுக்கான தேவைக் குறைவை ஏற்படுத்துவதோடு, மற்ற பிற தொடர் தாக்கங்களையும் ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

மோடியின் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் மற்றும் அவசர கோலத்தில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி போன்றவை இந்திய பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய பேரழிவை எவரொருவரும் மறந்து விடக் கூடாது. இவை தவிர, மோடியின் மேக் இன் இந்தியா  திட்டம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் நிற்கிறது. தற்போது சந்தையில் வேலை தேடுபவர்களின்  எண்ணிக்கை 1.2 கோடியாக இருப்பதைக் கருத்தில் கொண்டால், இதுவரையிலும் உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் எவ்விதத்திலும் போதுமானவையாக இருக்கவில்லை என்பதாகவே இருக்கிறது. மேலும், நீதிமன்றத் தலையீடுகள், குழப்பமான அரசாங்கக் கொள்கைகளாலும் பல முக்கியத் தொழிற்துறைகள் செயலிழந்து நிற்கின்றன.

இவையனைத்துமே இந்தியப் பொருளாதாரம் துயரத்தில் ஆழ்ந்திருப்பதையே சுட்டிக் காட்டுகின்றன. எமது நிர்வாக ஆசிரியர் எம்.ஜி. அருண் மற்றும் மூத்த பதிப்பாசிரியர் ஸ்வேதா பஞ்ச் ஆகியோர் இந்தியப் பொருளாதார நிலை குறித்த மதிப்பீடுகளைச் செய்து, அதனை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டனர். இந்தியப் பொருளாதாரம் எதிர்கொண்டிருக்கும் முக்கியமான சவால்கள் குறித்த தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற வகையில் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களின் குழு ஒன்றும் எங்களால் அமைக்கப்பட்டுள்ளது. கொள்கைகளை வடிவமைக்காமல், நடைபெறும் நிகழ்வுகளின் மீது மட்டுமே நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற வகையில் இன்னும் தற்காப்பு வழிமுறையிலேயே இந்த அரசாங்கம் இருப்பதாக இந்த பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை நல்ல அறிகுறிகளாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியப் பொருளாதாரம் தன்னிடம் இருக்கின்ற திறன் காரணமாக புலிப் பொருளாதாரம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் இருக்கின்ற குறைகள், திக்குமுக்காடி நிற்கின்ற அதிகார மையம் ஆகிய நிலமைகள் இருந்து வருகின்ற போதிலும், வேகமாக வளர்ந்து வருகின்ற உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாகவே இந்தியப் பொருளாதாரம் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. நான் இன்னமும் நம்மைப் புலி என்றுதான் சொல்லுவேன், ஆனாலும் தன்னுடைய காயத்தை ஆற்றுவதற்கான சரியான அணுகுமுறையை எதிர்பார்த்து நிற்கும் காயமடைந்த புலியாகவே அது இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 https://www.indiatoday.in/magazine/editor-s-note/story/20181029-from-the-editor-in-chief-indian-economy-1370449-2018-10-19

-தமிழில்: முனைவர். தா.சந்திரகுரு, விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.