கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பின் காரணமாக 38 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக டெங்கு, பன்றிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மேலும், காய்ச்சல் பாதிப்பு என வரும் நோயாளிகளுக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திங்களன்று நிலவரப்படி கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பின் காரணமாக 35 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர், பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் என மொத்தம் 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டது. இதில், 50 படுக்கை வசதிகளும் வார்டில் கொசு வலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் தலைவர் அசோகன் தெரிவித்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் அனுமதி வடவள்ளியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அம்மா, மகன், மருமகள் ஆகிய மூன்று பேருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில், மருமகள் கர்ப்பிணி என கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.