திண்டுக்கல்: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

திண்டுக்கல்லில் திங்களன்று கட்சியின் இடைக்கமிட்டி உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அவர் மேலும் உரையாற்றியதாவது. பூரண சுதந்திரத்திற்காக போராடியவர்கள் கம்யூனிஸ்ட்டுக்கள். அதற்கு முன்பு காங்கிரஸ் ஏனோதானோ என்று போராடிக்கொண்டிருந்தது. அப்போது நமது சிங்காரவேலர் தான் பூரண சுதந்திரம் அதாவது பூரண சுயராஜ்ஜியம் வேண்டும் என்ற கோரிக்கையை காந்தியிடம் முன்மொழிந்தார். அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு பூரண சுயராஜ்ஜியத்திற்கான போராட்டம் துவங்கியது. மேலும் மொழி வழி மாநிலங்கள் உருவாக காரணமாக இருந்ததும் கம்யூனிஸ்ட்டுக்கள் தான். கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், உள்ளிட்ட மொழி மாநிலங்கள் உருவாக அன்றைக்கு கம்யூனிஸ்ட்டுக்கள் தான் குரல் கொடுத்தனர். தமிழ்நாடு தனியான ஒரு மாநிலமாக உருவாகவும் குரல் கொடுத்தனர். சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட்டுக்கள் ஆட்சியை பிடிக்க இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ராஜாஜி போன்றவர்களையும், சின்ன சின்ன கட்சிகளையும் இணைத்து தில்லுமுல்லு செய்து ஆட்சியை பிடித்தது. ஆந்திராவில் தெலுங்கானா, கேரளாவில் புன்னப்புரா வயலார், தேபகா போன்ற எழுச்சிமிக்க போராட்டங்களையும் நடத்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுக்கள்.

தெலுங்கானாவில் நடந்த அந்த வீரஞ்செறிந்த போராட்டத்தை நேரு தலைமையிலான அரசு, உள்துறை அமைச்சராக இருந்த பட்டேல் போன்றவர்கள் இந்திய ராணுவத்தை கொண்டு ஒடுக்கினார்கள். தமிழகத்தில் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டம், ரயில்வே போராட்டம் போன்ற தொழிலாளர்களின் போராட்டங்களும் நடைபெற்று உள்ளன. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. மீரட் சதிவழக்கு, கான்பூர் சதி வழக்கு என பல்வேறு சதி வழக்குகளை சந்தித்தது. பல தலைவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். ஆனால் இன்றைக்கு நமது கட்சி கம்பீரமாக எழுந்து நிற்கிறது. அவசர காலத்தில் கூட பிற கட்சிகள் துவண்டிருந்த போது கம்யூனிஸ்ட்டுக்கள் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடினார்கள்.

இன்றைக்கும் மதவாதத்திற்கு எதிராக நாம் போராடி வேண்டியுள்ளது. மோடி அரசை நாம் மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் இந்த நாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டு மக்களை எச்சரிக்கை செய்கிறது. தொடர்ந்து மக்கள் இயக்கங்களை முன்னெடுத்து செல்கிறோம். அதோடு மதவெறிச் சக்திகளுக்கு எதிராகவும் நாம் போராடுவதற்கு தயாராக வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார். காலையில் நடைபெற்ற முகாமில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என். பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வ.கல்யாணசுந்தரம், கே.முத்துராஜ், மற்றும்; மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

(நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.