திருப்பூர்,
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 9 நைஜீரியர்கள் அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பிளெசிங்கு , சென்னெடு, டெய்க் , வின்சென்ட் , கெச்கூவ் , உகாச்கூவ் , ஸ்டிபன்ஜோனாதம் , சக்கூவ்மேகா , சென்னெடு ஆகிய 9 நைஜீரியர்களை ஊத்துக்குளி காவல் துறையினர் திங்களன்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரிக்கையில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூரில் பனியன் துணிகளை வாங்கி நைஜீரியா நாட்டிற்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று நைஜீரியர்களை அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து நைஜீரியர்களை சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.

பத்திரிகையாளர்களை தாக்க முயற்சி
நைஜீரியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவிநாசி நீதிமன்றத்திற்கு காவல் துறையினர் வேனில் அழைத்து வந்திருந்தனர். அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை தரக்குறைவாக திட்டியதுடன் செருப்பை வீசினார்கள். மேலும், நைஜீரியர் ஒருவர் வேனிலிருந்து இறங்கி ஓடிவந்து பத்திரிகையாளரை தாக்கவும் முயற்சி செய்தார். அப்போது அருகிலிருந்த காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்திற்குள் காவலர்கள் பாதுகாப்பையும் மீறி பத்திரிகையாளர்களை நைஜீரியர்கள் தாக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

You must be logged in to post a comment.