எடப்பாடி,
விவசாயிகளை தாக்கியதுடன், பொய் புகார் அளித்து அவர்களை கைது செய்ய காரணமானபவர் கிரீடு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட மூலக்கடை மற்றும் ஜலகண்டாபுரம், நொரச்சிவளவு பகுதிகளில் விவசாய நிலத்தில் அனுமதியின்றி உயரழுத்த மின்கோபுரம் அமைக்க திங்களன்று பவர் கிரீடு அதிகாரிகள் முயன்றுள்ளனர். இதற்கு அப்பகுதி விவசாயிகளான முருகேசன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பவர் கிரீடு அதிகாரிகள், மேற்கண்ட விவசாயிகள் இருவரையும் தாக்கியுள்ளனர். மேலும், எடப்பாடி காவல் நிலையத்திற்கு சென்று தங்களை பணி செய்யவிடாமல் தாக்கியதாக பொய் புகாரும் அளித்துள்ளனர். இதனையடுத்து எடப்பாடி காவல்துறையினர், முறையாக விசாரிக்காமல் விவசாயிகளான முருகேசன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள் உடனடியாக எடப்பாடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எ.ராமமூர்த்தி தலைமையில் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பான சூழல் காணப்பட்டது.

பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து எடப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார், வட்டாட்சியர் ஆகியோர் விவசாயிகள் கூட்டமைப் பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பவர் கிரீடு அதிகாரிகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை ஆதாரத்துடன் எடுத்துரைத்தனர், குறிப்பாக, மாவட்ட ஆட்சியரின் அனுமதி இன்றி விவசாயிகள் நிலத்திற்குள் பவர் கிரீடு அதிகாரிகள் வரக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை காண்பித்தனர். இதனையடுத்து விளை நிலத்தில் இனி எந்த வேலையும் நடக்காது. இந்த நிமிடமே அனைத்து வேலைகளும் நிறுத்தப்படும் என்றும், இனி இதுபோன்ற செயல்கள் நடக்காது எனவும் உறுதியளித்தார். மேலும், பவர் கிரீடு அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

பவர் கிரீடு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
அதேநேரம், கைது செய்யப்பட்ட விவசாயிகள் இருவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகளின் நிலங்களில் அத்துமீறி நுழைந்து விவசாயிகளை மிரட்டியதுடன், அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தபவர் கிரீட் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்திலேயே காத்திருப்போம் என விவசாயிகள் உறுதியுடன் தெரிவித்தனர். இதையடுத்து பவர் கிரீடு அதிகாரிகள் பாண்டியராஜன், குமார், சிற்றரசன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதன்பின்னரே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த முற்றுகை போராட்டத்தில் தமிநாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பெருமாள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கொங்கு ராஜாமணி, முனுசாமி, சிபிஐ சார்பில் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விவசாயிகள் மீதான வழக்கு தள்ளுபடி
இதற்கிடையே, பவர் கிரீடு அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் முருகேசன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் எடப்பாடிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயிகள் இருவர் மீதுபோடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், இனிவரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவைமுறையாக அமல்படுத்த வேண்டும் என பவர் கிரீடு அதிகாரிகளை நீதிபதி எச்சரித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.