20 விழுக்காடு வரை கிடைக்கும் எனத் தகவல்

சென்னை,
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு லாப நட்டத்தை குறியீடாக கொண்டு 20 விழுக்காடு வரை தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 விழுக் காடு போனஸ் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனசும், பிற கூட்டுறவு சங்கங் களில் பணியாற்றுவோருக்கு 10 விழுக்காடு போனசும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப் போல, இந்த ஆண்டும் 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும். குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கியதைப் போல 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு ரப்பர் கழகம், வனத் தோட்ட கழகம், தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் ஆகியனவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 10 முதல் 20 விழுக்காடு வரையும், பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 விழுக்காடும் போனஸ் வழங்கப்படும். இது தவிர, மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ. 4 ஆயிரம், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கு ரூ. 3 ஆயிரம், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 400 என கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஊழியர்கள் ஏமாற்றம்

 

போனஸ் அறிவிப்பு குறித்து மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மின்வாரியம் தவிர மற்ற துறைகளில் தொழிற்சங்கங்கள் எழுப்பிய கோரிக்கையின் மீது பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் அறிவிக்கப்பட வேண்டும் என்ற மரபு கூட பின்பற்றப்படவில்லை.  மத்திய அரசு போனஸ் உச்சவரம்பை உயர்த்திய உத்தரவு 01.04.2014 முதல் அமலுக்கு வந்ததன் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு உச்சவரம்பை உயர்த்தியதனால் கிடைக்க வேண்டிய போனஸ் நிலுவைத்தொகை வழங்குவது சம்பந்தமாக எந்த அறிவிப்பும், அரசின் அறிவிப்பில் இல்லை.

அரசு அறிவிப்பில் சில துறையைச் சார்ந்த ஊழியர்களுக்கு போனசும், கருணைத் தொகையும் சேர்ந்து 20 சதவீதம் என்றும் சில துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழக அரசு மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது சம்பந்தமாக வழங்கிய வழிகாட்டுதலுக்கும் மாறாக 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தரம் பிரித்து பாகுபாட்டோடு அறிவித்தது சரியல்ல. அரசு அறிவிப்பில் தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி, தமிழ்நாடு ஜரிகை ஆலை போன்ற நிறுவனங்களுக்கு போனஸ் அறிவிப்பில் இடம்பெறவில்லை. 2017 – 2018 ஆம் ஆண்டு மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் சில துறைகளுக்கு 20 சதவீதம் என்றும், சில துறைகளுக்கு 10 சதவீதம் என்றும், அறிவித்த அறிவிப்பானது சென்ற ஆண்டு அறிவிப்பினை அப்படியே பின்பற்றியுள்ளதே தவிர, ஒரு சிறு மாற்றமும் இல்லை, ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது.

நாளும் ஏறும் விலைவாசி, வாழ்க்கைத்தர உயர்வு, அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, குறிப்பாக மின்சாரம், போக்குவரத்து, டாஸ்மாக், நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின் போன்ற அனைத்துத் துறைகளிலும் அதன் வருவாய் உயர்ந்துள்ள நிலையில் மாநில பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனசும், கருணைத் தொகையும் சேர்ந்து 25 சதவீதம் வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கங்கள் எழுப்பிய கோரிக்கைகளை கணக்கில் கொள்ளாமல், எந்தவித மாற்றமும் இன்றி பழைய சதவீத போனசையே அறிவித்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்த மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு போனசும் கருணைத் தொகையும் இணைத்து 10 விழுக்காடு வழங்கிட வேண்டும்.

தமிழக மின்சார வாரியத்தில் அனல், புனல், பொதுகட்டுமான வட்டம், விநியோகப் பகுதிகளில் சுமார் 8000க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள், தமிழக அரசின் அறிவிப்பு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. தமிழக அரசு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளருக்கு ரூ.4000 கருணைத் தொகை என்று அறிவித்துள்ளதை அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கிட வலியுறுத்தி, அரசின், மின் வாரியத்தின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.