அவிநாசி: சேவூர் அருகே முதலிபாளையத்தில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதி மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட முதலிபாளையம் பழைய ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக தெரு விளக்கு எரியாமல் மக்கள் இருளில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் ஞாயிறன்று இரவு கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியும், அப்பகுதிகளைச் சுற்றியுள்ள மின்கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இன்னும் 3 நாட்களுக்குள் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவிட்டால், அடுத்தகட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: