திருப்பூர்: திருப்பூரில் பலகார சீட்டு நடத்தி பல லட்சம் பணத்துடன் தம்பதி தலைமறைவாகியதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பாப்பணன் நகரை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளியன்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறோம். நாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் பாப்பணன் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன்(வயது 45). அவருடைய மனைவி சுமதி(40) ஆகியோரும் வேலை செய்து வந்தார்கள். அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகார சீட்டு நடத்தினார்கள். அவர்களிடம் 20க்கும் மேற்பட்டவர்கள் வாரந்தோறும் பணம் செலுத்தினோம். சீட்டு முடிந்து முதிர்வு தொகை இந்த மாதம் கொடுக்கவேண்டும். ஆனால் அவர்கள் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். பின்பு ஆயுதபூஜையன்று அனைவருக்கும் பணம் கொடுப்பதாக உறுதியளித்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக ரவிச்சந்திரன் மற்றும் அவருடைய மனைவியை காணவில்லை. அவர்களுடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வீட்டிலும் இல்லை. எங்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. ரவிச்சந்திரன் இதுபோல் மேலும் பலரிடம் சீட்டுப்பணம் பெற்றுள்ளார். பல லட்சம் பணத்தை அவர் திருப்பிக்கொடுக்காமல் உள்ளார். நாங்கள் செலுத்திய பணத்தை திரும்பப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சீட்டு பண விவகாரம் என்பதால் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் வடக்கு காவல்துறையினர் கூறி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.