கோவை,
தண்ணீரை வணிக பொருளாக மாற்றி பொதுமக்களை குடிநீருக்கு கையேந்த வைக்கும் கோவை மாநகராட்சியின் சூயஸ், வாட்டர் ஏடிஎம் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 ஆவது கோவை மாவட்ட மாநாடு திங்களன்று கோவை காந்திபுரத்தில் உள்ள பிடல்காஸ்ட்ரோ நினைவரங்கத்தில் மாவட்டத் தலைவர் ஜே.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியை ஸ்டாலின் குமார் ஏற்றிவைத்தார். வரவேற்புக்குழு செயலாளர் என்.ஜாகீர் வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து சங்கத்தின் மாநில துணை செயலாளர் பாலசந்திரபோஸ் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ்,பொருளாளர் சீலாராஜ் ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாநில துணை செயலாளர் பிரவின்குமார், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கேப்டன்பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.

தீர்மானங்கள்
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் பழுதடைந்துள்ளது. ஆகவே பருவமழை துவங்கும் முன்பே போர்க்கால அடிப்படையில் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் புதுசாலை போட வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடமும், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்க வாட்டர் ஏடிஎம் போன்ற அடுத்தடுத்த நாசகர ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது.இயற்கையாய் உற்பத்தியாகும் தண்ணீரை வணிக பொருளாகமாற்றும் நடவடிக்கையை கோவை மாநகராட்சி கைவிட வேண்டும். இந்த சூயஸ், வாட்டர் ஏடிஎம் ஒப்பந்தங்களை திரும்பப்பெறும் வரை தொடர் போராட்டங்களை மேற்கொள்வது. இதேபோல் தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், பெண்களின் பாதுகாப்பிற்கான விசாகா கமிட்டியை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு
இதனையடுத்து மாநாட்டில் மாவட்ட தலைவராக ஸ்டாலின் குமார், செயலாளராக கே.எஸ்.கனகராஜ், பொருளாளராக சந்திரசேகர் மற்றும் துணை நிர்வாகிகளாக அர்ஜூன், துரைசங்கர், கிருபாசுருதி, அன்பரசன் மற்றும் 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதன்பின் மாநாட்டை நிறைவு செய்து சங்கத்
தின் மாநில செயலாளர் எஸ்.பாலா நிறைவுரையாற்றினார். முடிவில் த.நாகராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.