===எஸ்.எஸ்.சுப்பிரமணியன்===
சர்வதேச நிதி மூலதனத்தின் கடுமையான நிர்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள சேவைத்துறைகளை சந்தைத் துறைகளாக மாற்றுகிற நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

மின்சாரம், போக்குவரத்து, தொலை தொடர்பு, இரயில்வே ஆகிய சேவைத்துறைகளை இலாப மீட்டும் சந்தைத்துறையாக மாற்றுவதற்கான திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு மூர்க்கத்தனமாக அரங்கேற்றி வருகிறது.

இன்றைய இந்தியாவின் உச்சகட்ட மின்தேவை 1,75,000 மெகாவாட் ஆகும். இதில், 1,57,136 மெகாவாட் மின் உற்பத்தி என்பது, மத்திய அரசால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மின்சாரத் துறையின் செயல்பாட்டில் மின் உற்பத்தி தான் முக்கியமானதாகும். அது தான் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபத்தை உத்திரவாதப்படுத்தக் கூடியதாகும். இது இன்று முழுமையாக தனியார் ஆதிக்கத்தின் கீழ் சென்று விட்டது.

மின்சார சட்டம் 2003 வருவதற்கு முன்பாக தனியார் மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் மின் விநியோக நிறுவனங்களின் மூலமே விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் மின்சார சட்டம் 2003 மற்றும் மின்சாரக் கொள்கை 2005 ஆகியவற்றின் அடிப்படையில் திறந்தவெளி மின் பரிமாற்றக் கொள்கையை மத்திய ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

கொள்கை சொல்லும் விதி என்ன?
மின்சாரத்தை எந்த தனியார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம். யாருக்கு வேண்டுமானாலும் விநியோகம் செய்து கொள்ளலாம். மின் விநியோகம் செய்வதற்கு கட்டண நிர்ணயிப்பு, மின் மீட்டர் பொருத்துவது, மின் பயனீட்டு அளவு எடுப்பது. மின் கட்டணம் வசூலிப்பது என அனைத்தும் செய்து கொள்ளலாம் என தனியாருக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கி, அதை முறைப்படுத்துகின்ற அரசு இயந்திரம் செயலற்றதாக்கப்பட்டுள்ளது.
திறந்த வெளி மின்பரிமாற்றக் கொள்கை அமலாக்கத்திற்கு வந்த பின்னர் அரசு துறை சார்ந்த மின் விநியோக நிறுவனங்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனியாரிடம் மின் நுகர்வோர்கள் மின்சாரத்தை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிற மாநிலங்களில் நிலை என்ன?
உதாரணமாக மராட்டிய மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய உயர் அழுத்த மின் நுகர்வோர், மராட்டிய மாநில மின்வாரியத்திலிருந்து மின்சாரம் பெறுவதை மாற்றி தனியார் மின் விற்பனையாளரிடமிருந்து மின்சாரத்தை பெறும் நிலைக்கு சென்றுள்ளனர். மராட்டிய மாநில மின்வாரியம் தான் விற்பனை செய்யும் 30,000 மில்லியன் யூனிட்டில் 6000 மில்லியன் அளவு யூனிட் மின்சாரம் தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கு சென்று விட்ட காரணத்தினால் மாநில மின்வாரியத்தின் கீழ் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் தனது உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வாரியத்தின் வருவாயும், செயல்பாடும் சுருங்கி சீரழியும் திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள உயர்அழுத்த வணிக மின் நுகர்வோர்கள் ஒரு பெரும் பிரிவினர் தனியார் மின் விற்பனையாளரிடம் மின்சாரத்தை பெறும் நிலைக்கு சென்று விட்ட காரணத்தினால் பஞ்சாப் மாநில மின் உற்பத்தி நிறுவனம் உற்பத்தி செய்த மின்சாரத்தை விற்க பெருமுயற்சி எடுத்து வருகிறது. ஆனால் வாங்குவதற்கோ ஆள் இல்லாத நிலை.
மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழகம், தான் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 1 யூனிட் ரூ.4.50 பைசாவிற்கு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் உட்பட இதர மின்விநியோக பயனீட்டாளர்கள் வழங்குவதற்கு தயாராக இல்லை. அதனால் தேசிய அனல் மின் கழகம் உற்பத்தி செய்யும் தனது பல மின் நிலையங்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தேசிய அனல் மின் கழகம் இந்தியாவின் பல மாநிலங்களில் அனல் மின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டதை இப்போது கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகம் மிக மிக மோசம்
அண்டை மாநிலங்களின் அவலநிலையோ அப்படி என்றால் தமிழகத்தின் நிலை அதை விட மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளது. தமிழக மின்வாரிய மின் நுகர்வோர்களில் மின்சார வாரியத்திற்கு நிதியை உருவாக்கித் தருவது உயர் அழுத்த, வணிக மின் நுகர்வோர்கள் என்றால் மிகையாகாது. தமிழகத்தில் உயர் அழுத்த மின் நுகர்வோர் 9249, அவர்களில் சரிபாதி மின் நுகர்வோர், தனியாரிடமிருந்து மின்சாரத்தை பெறும் நிலைக்கு சென்று விட்டனர். அது மட்டுமல்லாமல் தன் பயனீட்டு மின் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 986 மெகாவாட் மின்சாரத்தை நேரிடையாக அவர்களே மின் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதனால் சுமார் 1000 மெ.கா.வாட் பொது மின்சார உற்பத்தியும், பரிமாற்றமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவை ஒரு பக்கம் இருக்க, மின்சார சட்டம் 2003ல் ‘ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தனியார் மின் விற்பனையாளர் மின்சாரத்தை விநியோகிக்கலாம்’ என்ற ஷரத்தை பயன்படுத்தி திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் 2518 ஏக்கர் நிலத்தில் உள்ள பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு மின் கழக தூத்துக்குடி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு மின்விநியோகம் செய்து கொள்ளலாம் என்ற அனுமதியை ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது.

ரயில்வேயும் கழன்று கொள்கிறது
மேலும், தமிழகத்தில் அதிக அளவு மின்சாரத்தை நுகரும் இரயில்வேதுறை தமிழக மின் வாரியத்திடம் மின்சாரம் பெறுவதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு செய்து காத்துக்கொண்டுள்ளது. இரயில்வே துறைக்கு அனுமதி அளித்து அவர்கள் மின்சாரத்தை பெறுவதற்கு வெளியில் சென்று விட்டால் தமிழக மின்வாரியத்தின் மின் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். தனது சொந்த மின் நிலைய உற்பத்தியை நிறுத்தும் அவல நிலை ஏற்படும்.

தனியார் மின் விநியோகிப்பாளர் பலருக்கு மின் விநியோகம் அளிப்பதற்கு அனுமதி அளித்தால் போட்டி உருவாகும்; கட்டணம் குறையும் என்று சொல்லும் வாதங்கள் எல்லாம் பொய்யான வாதங்களே. தில்லி மாநகர மின் விநியோகம் என்பது தனியாரால் பராமரிக்கப்படுகிறது. மேற்கூறிய வாதத்தின் அடிப்படையில் தனியார் கைக்கு மாற்றப்பட்டு தில்லியில் மின் கட்டணம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை.

தூத்துக்குடி பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் மின் விநியோகம் செய்வதற்கு அனுமதி கேட்ட போதே, மின் உற்பத்தி செலவு ரூ.4.50 பைசா என்று இருந்த போதிலும் உயர் அழுத்த மின் நுகர்வோர்களுக்கு ரூ.6.25 பைசாவும், வணிக மின் நுகர்வோர்களுக்கு ஒரு யூனிட்டு ரூ. 8க்கு விற்பதற்கும் அனுமதி கேட்டது; மின்வாரிய செயல்பாட்டை முறைபடுத்துவதாக சொல்லப்படும் மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையமும் உற்பத்தி செலவைவிட கூடுதல் விலைக்கு மின்சாரத்தை விற்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு காரணம் என்ன? தமிழக அமைச்சரவையை அலங்கரிக்கும் அமைச்சர்களின் வகையராக்களது பினாமியாக உள்ளதால் தான் ஒழுங்கு முறை ஆணையம் ஒழுங்கற்ற அனுமதியை அளித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு தமிழக மின்சார வாரியத்தில் மின்சாரத்தை விற்றதின் வாயிலாக வாரியத்தின் வருவாய் ரூ.45528 கோடி; 2018 ஆம் ஆண்டில் வாரியத்தின் வருவாய்
ரூ.43964 கோடி. ஒரு ஆண்டில் வருவாய் இழப்பு ரூ.2662 கோடி. நிலைமை நீடித்தால் இது மேலும் தீவிரமாகும். மின்வாரியச் செயல்பாடு குறையும்; மானியவிலையில் விவசாயிகளுக்கும், குடிசைகளுக்கும், ஏன் வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் இலவச மானிய விலையில் மின்சாரம் என்பது கனவுப்பொருளாக மாறும்.இப்படியாக மத்திய அரசு சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைக்கிணங்க, சேவைப் பொருளாக உள்ள மின்சாரத்தை சந்தைப் பொருளாக்கி மின்துறையை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு காணிக்கையாக்கும் நிகழ்ச்சி நிரலை சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

எனவே, சிதைந்து நொறுங்கும் மின்சாரத்துறையை தடுத்து நிறுத்தி மின் நுகர்வோர்களின் சேவையை உறுதியாக்கவே 2019 ஜனவரி 8,9, 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் இந்திய மின்வாரிய ஊழியர்களும், கோடிக்கணக்கான மின் நுகர்வோர்களும் கரம்கோர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றிபெறச் செய்திடுவோம்.

கட்டுரையாளர்: தலைவர், தமிழ்நாடு மின்ஊழியர்
மத்திய அமைப்பு (சிஐடியு)

Leave a Reply

You must be logged in to post a comment.