===என்.ராஜேந்திரன்===
கூகுள் தேடல், ஆண்ட்ராய்ட் ஃபோன், கூகுள் மெயில், குரோம் பிரௌசர் , யூடியூப், கூகுள் பிளஸ், கூகுள் மேப், கூகுள் பே, கூகுள் டிரைவ், கூகுள் டாக்ஸ், கூகுள் காலண்டர் என எண்ணற்ற சேவைகளை கூகுள் வழங்குகிறது. அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு சமயத்தில் கூகுளின் சேவை தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கூகுளிடம் பலரும் சொல்லும் ஒரு முக்கியமான பிரச்சனை தனிநபர் தகவல்களை சேகரிப்பதுதான். எனக்கு பிரைவசி முக்கியம். அதனால் கூகுள் வேண்டாம் என்று சொல்பவர்கள் அதற்கு மாற்றாக வேறு இணைய சேவைகளுக்கு மாறலாம். அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

கூகுள் தேடல்
கூகுள் தேடலுக்கு மாற்றாக பிரைவசியை அதிகம் தரக்கூடிய டக்டக்கோ (https://duckduckgo.com/)வை பயன்படுத்தலாம். தனிப்பட்ட தேடல் விபரங்களை இத்தளம் பதிந்து வைப்பதில்லை. உடனடியாக பதில்களைத் தருதல், தேடல்களை ஃபில்டர் செய்து பார்க்கும் வசதி எனப் பல சிறப்புகள் இதில் உள்ளது.

ஜிமெயில்
ஜிமெயில் சேவைக்கு பதிலாக பிரைவசியை அதிகம் எதிர்பார்ப்பவர்கள் புரோட்டான் மெயில் (https://protonmail.com)ஐ பயன்படுத்தலாம். இலவச சேவையில் 500 எம்பி அளவு மட்டுமே தரப்படுகிறது. கூடுதல் இடம் தேவைப்படுபவர்கள் கட்டணம் செலுத்தவேண்டும். ஜெர்மனியைச் சேர்ந்த மெயில் டாட் காம் (https://mail.com/) 2 ஜிபி அளவு இடம் தருகிறது. 50 எம்பி அளவுள்ள கோப்புகளை இணைத்து அனுப்பும் வசதி இதன் சிறப்பாகும். 5 ஜிபி அளவு இலவச இடம்தரும் ஜோகோ மெயிலையும் (https://zoho.in) பயன்படுத்தலாம். பிரைவசி பற்றிக் கவலை இல்லை. ஆனால், வேறு மின்னஞ்சல் முகவரியும், கூகுளுக்கு இணையான வசதிகளும் வேண்டும் என்பவர்கள் யான்டெக்ஸ் (https://mail.yandex.com) பயன்படுத்தலாம். இதில் 10 ஜிபி அளவு இடம் தரப்படுகிறது. மைக்ரோசாப்ட்டின் அவுட்லுக் (https://outlook.live.com/), யாகூ மெயில் (https://mail.yahoo.com/), ஆப்பிளின் ஐகிளவுட் (https://www.icloud.com/) சேவைகளையும் முயற்சிக்கலாம்.

யுடியூப்
கணக்கற்ற வீடியோ கோப்புகளைக் கொண்டிருக்கும் யுடியூப் தவிர்க்கமுடியாத இணையதளமாக இருந்தாலும், அதற்கு மாற்றாக இருக்கக்கூடிய வைமியோ (https://vimeo.com/), டெய்லிமோஸன் (https://www.dailymotion.com) மற்றும் டி டியூப் (https://d.tube) தளங்களைப் பயன்படுத்தலாம்.

கூகுள் மேப்
புதிய இடங்களை அறிந்து கொள்ளவும், வழிகாட்டியாகவும் பயன்படும் கூகுள் மேப் சேவைக்கு மாற்றாக வீ கோ ஹியர் (https://wego.here.com), மேப் கியூஸ்ட் (https://www.mapquest.com), ஆப்பிள் நிறுவனத்தின் மேப் சேவை (https://www.apple.com/ios/maps/), மைக்ரோசாப்ட்டின் பிங் மேப் (https://www.bing.com/maps) மற்றும் ஓப்பன் ஸ்ட்ரீட் மேப் (https://www.openstreetmap.org/) ஆகிய தளங்களைப் பயன்படுத்தலாம்.

கூகுள் அலோ
இணையவழிக் குரல் சேவை, வீடியோ காலிங் வசதிகளைத் தரும் கூகுள் அலோ-விற்கு மாற்றாக சிக்னல் (https://signal.org/) பயன்படுத்தலாம். தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதாக சிக்னல் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹேங்அவுட்
கூகுளின் ஹேங்அவுட் குழு உரையாடல் சேவைக்கு மாற்றாக ஜூம் (https://zoom.us/) சேவை பயன்படுத்தலாம். 100 பயனர் வரை சேர்த்துக் கொள்ளலாம். 40 நிமிடம் வரை உரையாடலாம். அதிக வசதிகள் தேவைப்படுவோர் கட்டணத் திட்டத்தில் இணையவேண்டும்.

கூகுள் குரோம் பிரௌசர்
கூகுளின் குரோம் பிரௌசருக்கு மாற்றாக பல பிரௌசர்கள் கிடைக்கின்றன. ஃபயர்பாக்ஸ் (https://www.mozilla.org/firefox/), எபிக் பிரௌசர் (https://www.epicbrowser.com/), பிரேவ் (https://brave.com) ஆகியவை பிரைவசிக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் பிரௌசர்கள் மட்டுமல்ல குரோம் பிரௌசரை விட கூடுதல் வசதிகளையும் தரக்கூடியவை.

கூகுள் டாக்ஸ்
கூகுள் டாக்ஸ் ஆஃபீஸ் கோப்பு பயன்பாட்டு சேவைக்கு மாற்றாக பிட் நிறுவன (https://bit.ai/) சேவையைப் பயன்படுத்தலாம். 5 எம்பி அளவுக்கும் குறைவான கோப்புகளை இலவசமாகப் பயன்படுத்தலாம். 1 ஜிபி அளவிற்கு இலவச சேமிப்பிடம் வழங்கப்படுகிறது. ஒன்லி ஆஃபீஸ் (https://personal.onlyoffice.com/) என்ற தளம் தனி நபர்களுக்கு இலவச சேவை வழங்குகிறது.கூகுள் டிரைவ், ஒன்டிரைவ், , டிராப்பாக்ஸ் போன்ற ஆன்லைன் சேமிப்பிடங்களில் உள்ள டாக்குமெண்ட்களையும் கையாளக்கூடிய வசதிகள் இதில் உள்ளன. வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட் சேவைகளைத் தரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆஃபீஸ் 365 (https://www.office.com/) சேவைக்கு மாறலாம். மாணவர்களுக்கு இலவசம் என்றாலும், இதில் கட்டணத் திட்டத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. 

கூகுள் டிரைவ்
ஆன்லைன் சேமிப்பிட சேவையை பல நிறுவனங்களும் வழங்குகின்றன. டிராப் பாக்ஸ் (https://www.dropbox.com/) 2 ஜிபி இலவசம் இடம் தருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன்டிரைவ் (https://www.dropbox.com/) 5 ஜிபி இலவச இடம் தருகிறது. யான்டெக்ஸ் டிஸ்க் (https://disk.yandex.com) 10 ஜிபி இலவச இடம் தருகிறது. ரஷ்ய நிறுவனமான யான்டெக்ஸ் கூகுளைப் போலவே ஒருங்கிணைந்த பல சேவைகளை வழங்குகிறது. இணையத் தேடல் (https://yandex.com/), மின்னஞ்சல் சேவை, மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் டாக்குமெண்ட்களை பயன்படுத்தும் வசதி, டிரைவ் சேமிப்பகம், மேப் சேவை (https://yandex.com/maps/) என பல சேவைகளையும் வழங்குகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.