ஈரோடு,
பச்சிளம் குழந்தைகளுக்கு கூட மதவெறியையூட்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பார்க்கும் கட்சியாக பாஜக இருப்பதாக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்ட 3 ஆவது மாநாட்டையொட்டி பவானி காலிங்கராயன் பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகையில், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் மத கலவரங்களை தூண்டும் சங்பரிவார் அமைப்புகளுக்கு காவல்துறை அனுமதி அளிக்கிறது. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தென்காசியில் நடந்தபோது 10 முதல் 12 வயது வரை உள்ள பச்சிளம் குழந்தைகளின் கைகளிலும், கால்களிலும் காவி துணிகளை கட்டிக் கொண்டு அழைத்துச் சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள கடைகளின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். மேலும், தகாத வார்த்தைகளை பேசி வன்முறையை தூண்டினர். இவ்வாறு குழந்தை பருவத்தில் இருந்தே மதவெறியை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். இத்தகைய வன்முறையாளர்களுக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்கிறது.

மேலும், நீதிமன்றத்தையோ அல்லது காவல்துறையையோ தகாத வார்த்தைகளால் பேசினால் கூட அதற்கெதிராக கூட நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாக்கிறது. ஆனால், ஜனநாயக உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காகவும் நடத்தப்படும் போராட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த தடைகளை உடைத்து ஜனநாயக உரிமைகளுக்காக பல்வேறு இடங்களில் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறோம். கடந்த அக்.2 ஆம் தேதி சென்னையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் கொள்கையை எடுத்துக்கூறும் விதத்தில் அமைதியை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது. ஆனால், இதற்குகூட காவல்துறை அனுமதி மறுக்கும் நிலையே காணப்பட்டது.

கருத்துரிமையை பறிக்கும் மாநிலமாக தமிழகம்;
இதேபோல், ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி, மாணவி வளர்மதி, பாசிச பாஜக ஒழிக என்று கூறிய சோபியா, மனித உரிமை செயல்பாட்டாளர் திருமுருகன் காந்தி, நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்றைய நிலையில் ஜனநாயகம் மற்றும் கருத்துரிமையை பறிக்கும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. ரேசன் கடைகளில் நடத்தப்படும் தீண்டாமை கொடுமைகள் குறித்து மதுரையை சேர்ந்த எவிடன்ஸ் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தினர். இதில் தமிழகத்தில் உள்ள 450 ரேசன் கடைகளில் சாதிய பாகுபாடு உள்ளது எனவும், 255க்கும் மேற்பட்ட கடைகளில் சாதிய பாகுபாடு நிறைந்து காணப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாதி, மத வெறி என்ற ஒரு பிரச்சனை இல்லை என்றால், இந்த அரசிற்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட்டங்களை நடத்துவார்கள் என்பதற்காகவே இந்த சாதி, மத பாகுபாடுகளை ஆதரித்து வருகிறார்கள்.

ஆகவே, சாதி, மதங்களை மறந்து ஒற்றுமையாக போராட்டத்தை நடத்த வேண்டும். இது போன்ற சாதிய ஒடுக்குமுறைகள் உழைப்பாளி மக்களை பிளவுபடுத்தி வருகிறது. இதனை எதிர்த்து சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை இடதுசாரி இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளைதடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கான சிறப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், சேலத்தில் தொடங்கி சென்னை வரை 350 கிலோ மீட்டர் நடைபயணம் சென்றுள்ளது.

பாஜகவின் இரட்டை வேடம்
கேரளாவில் சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், அதேபோல் பெண்களின் சம உரிமையை பாதுகாப்பதற்காகவும் இடதுசாரி அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால், பாஜகவினர் கலவரங்களை நிகழ்த்த வேண்டும் என நினைக்கிறார்கள். அதுவும், தெலுங்கானா மாநிலத்தில், தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால் உங்களை இலவசமாக சபரிமலை கோயிலுக்கு அழைத்து செல்வதாக பெண்களிடையே பாஜகவினர்க்குறுதி அளித்தனர். ஆனால், கேரளாவில் சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கக்கூடிய அடிப்படை உரிமையை நிச்சயமாக பெண்களுக்கு வழங்குவோம் என்ற உறுதியோடு கேரள அரசு செயல்பட்டு வருகிறது. கேரள அரசின் நடவடிக்கைள் வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்த பொதுக்கூட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தாலுகா தலைவர் முருகன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் பி.பி.பழனிச்சாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து, விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா நிர்வாகி வ.இளங்கோ ஆகியோர் உரையாற்றினர். மேலும், கடம்பூர் ஏ.எம்.காதர் நினைவு விடியல் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஊனாத்திபுதூர் வெண்மணி தப்பாட்டமும் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.