===ஐ.வி.நாகராஜன்===
தமிழகத்தில் முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே குளறுபடிகள் நீடித்து வரும் நிலையில், ஆயுஷ்மான் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட பிரதமர் மருத்துவக் காப்பீட்டு திட்டமும் தெளிவின்றி இருப்பதால் அதன் பலன்கள் எளிய மக்களுக்கு சென்றடையாத நிலையே தொடர்கிறது.

இதுதொடர்பான விபரம் வருமாறு:
தமிழகத்தில் ஏற்கனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத்திட்டம் அமலில் இருக்கிறது. இத்திட்டத்தில் சில மறுதல்கள் செய்யப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்ற பெயர் மாற்றத்துடன் 11-01-2012 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. 1016 வகையான நோய் சிகிச்சைகளும் 23 நோய் பரிசோதனைகளும் அதனோடு தொடர்புடைய 113 தொடர் சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உட்பட தனியார் மருத்துவமனைகளும் சேர்க்கப்பட்டு 784 மருத்துவமனைகளும் 107 பரிசோதனை மையங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்நிலையில் அரசு என்னதான் முயற்சி எடுத்து ஒப்பந்தம் செய்திருந்தாலும் இந்த சிகிச்சை திட்டத்தில் ஒப்பந்தம் செய்துள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் திட்டத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்க முன்வருவதில்லை. காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறவரும் நோயாளிகள் தங்களது விருப்பத்தை மருத்துவர்களிடம் தெரிவித்தால் அவர்கள் மருத்துவமனையில் உள்ள காப்பீடு நிறுவன லைசன்ஸை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் அனுப்பி வைக்கவேண்டும். அவர் காப்பீடு திட்ட ஸ்மார்ட்கார்டு மற்றும் நோயின் தன்மை சிகிச்சைப் பற்றிய விவரங்கள் குறித்து சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

மேலும் அந்த சிகிச்சைக்கான தொகை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டு அதுபற்றிய விவரம் நோயாளிகள் குடும்பத்திற்கு தெரிவிக்கவேண்டும். இதில் 1 பைசா கூட நோயாளிகள் மருத்துவமனைக்கு செலுத்தக்கூடாது என்பதுதான் இத்திட்டத்தின் விதி. ஆனால் அதற்கு மாறாக இத்திட்டத்தில் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் மருத்துவமனைகள் திட்டம் குறித்து எவ்வித புரிதலும் இல்லாமல் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளிடம் ஏதாவது காரணங்கள் கூறி கட்டணம் பெற்று சிகிச்சை பெற வைக்கின்றனர்.

இன்னும் சில மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின்படி கிடைக்கும் பணம் எங்களுக்கு போதுமானது அல்ல; எனவே இத்திட்டதில் கிடைக்கும் பணம்போக பாக்கித்தொகையை நோயாளிகள்தான் செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையுடன் கறாராகப்பேசி பணம் தரஒப்புக்கொண்ட பின்னரே சிகிச்சைக்கு அனுமதி அளிக்கின்றனர். இதை தவிர்த்து பல முறைகேடுகள் இதில் நடைபெறுகிறது.

ஆயுஷ்மான் – மற்றொரு குளறுபடி
முதலமைச்சர் மருத்துவக்காப்பீடுத்திட்டதில் இத்துணை குளறுபடிகள் இருக்கும் நிலையில் இப்போது புதிதாக “ஆயூஷ்மான்” என்ற பிரதமர் மருத்துவக் காப்பீடுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஏழை மக்களின் ஆரோக்கியத்தை காக்கும் இந்த திட்டத்திற்கு போதுமான அளவில் நிதி ஒதுக்காததும், அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தாததும் ஆட்சியின் இறுதி கட்டத்தில் பாஜக அரசு இதை அறிமுகப்படுத்தியிருப்பதும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

பிரதமர் மோடி அறிவித்துள்ள இந்த காப்பீடுத் திட்டத்தின்படி சிறப்பு தகுதியுடைய ஒரு பயனாளி இந்தியாவில் எங்குவேண்டுமானாலும் சிகிச்சை பெற முடியும். குறிப்பாக ஆந்திர மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ளவர்கள் தரமான மருத்துவமனையை தேடி தமிழகத்தில் சென்னை, வேலூர் போன்ற நகரங்களுக்கு வந்து சிகிச்சைப்பெற முடியும். நோயாளி தனக்கான மருத்துவமனையை தேர்வு செய்யும் வாய்ப்பு விரிவாகவே இதில் சொல்லப்பட்டுள்ளது.
இத்தகைய திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளை அங்கீகாரம் செய்யும்போது அவை தேசிய சிறந்த மருத்துவமனை தரச்சான்று (என்ஏபி,எச்) பெற்றிருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்ற விதி தளர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சமூக பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் 10.74 கோடி குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவகாப்பீடு வசதி அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் நலிவுற்றநிலையில் இருக்கும் மக்கள் குறிப்பிட்ட கால அளவுக்குள் மருத்துவ காப்பீட்டு வசதியை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.
நடப்பாண்டில் (2018) இத்திட்டத்துக்கு வெறும் ரூ.2 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மருத்துவ தேவைக்கு இந்த தொகை உத்தரவாதம் வழங்கமுடியுமா எனும் கேள்வி இயல்பாக எழுகிறது. சில மாநிலங்கள் இன்னும் இத்திட்டத்தின் கீழ் இணையாத நிலையில் இந்ததிட்டம் எப்படி முழு பலனை தரும் என்பது இன்னொரு கேள்வி. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்தி செலவை குறைத்து மருத்துவ சேவைக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும். ஆனால் இந்த திட்டத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மருத்துவ சிகிச்சைக்கும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டணங்களை பல மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்கெனவே தமிழக அரசின் முதலமைச்சர் மருத்துவக்காப்பீடுத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளும், குளறுபடிகளும் பல இடங்களில் புகார் எழுந்தும் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தும் இவைகளை முறைப்படுத்தாத குறைபாடுகள் தொடரும் நிலையில், இப்போது புதிதாக பிரதமர் காப்பீடுத்திட்டம் என்ற பெயரில் நரேந்திர மோடி அறிவித்துள்ள மத்திய அரசின் இந்தக் காப்பீடுத்திட்டம் உரிய தெளிவில்லாமல் அறிவிப்பதனால் முதலமைச்சரின் காப்பீடுத் திட்டத்தில் தொடரும் முறைகேடுகளே இதிலும் தொடர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

அதோடு லாபநோக்கம் கொண்ட மருத்துவமனைகள் இந்த கட்டணங்கள் நடமுறைக்கு சாத்தியமில்லை என்று ஒதுங்குகின்றன.

இது மக்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்குமா என்பதும் சந்தேகம்தான். அந்த கட்டணங்களை வசூலிக்கும் மருத்துவமனைகளை தவிர்த்துவிட்டு நோய் தடுப்புமுறைகளிலும் ஆரம்ப சுகாதாரத்திலும் அரசு தீவிர கவனம் செலுத்துவது அவசியம். அரசு மருத்துவமனைகளின் வாயிலாகவே அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற இலக்கை எட்டமுடியும்.

Leave a Reply

You must be logged in to post a comment.