திருப்பூர்: கல்வியில் மதத்தைப் புகுத்த அனுமதித்ததுடன், இன்றைய கல்விமுறை சரியில்லை என்று விமர்சித்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் இரா.இராஜ்குமார், மாவட்டச் செயலாளர் ப.கனகராஜா, மாவட்டப் பொருளாளர் பா.ஜெயலட்சுமி ஆகியோர் திங்களன்று கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக். 22ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் திருப்பூர் ஜெய்வாய்பாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் வரவேற்புரையின் போது வரலாறு தொகுப்பு பேரவை என்னும் தலைப்பில் கூட்டம் நடைபெறுவதாக கூறியிருந்தார். பின்னர் பேசிய சுப்பிரமணியம்ஜி என்பவர் காலையில் பள்ளிகளில் பாடபோதனை தொடங்குமுன்* *ஓம்* என்னும் *மந்திரச்சொல் உச்சரித்தால் கூடுதல் மதிப்பெண் பெறமுடியுமென ஆய்வுகள் தெரிவிப்பதாகவும், என்றைக்கு குருகுலக் கல்வி முறை கெடுக்கபட்டதோ, அன்றிலிருந்தே நாடு நாசமாகிவிட்டது எனவும், திறமை உள்ளவர்
களுக்கு இக்கல்வித் திட்டத்தில் வாய்ப்பு இல்லை எனவும், இந்த கல்வி அமைப்பு முறையே தவறு எனவும் கூறினார்.மேலும் விமானம், அறுவைச் சிகிச்சை முறைகள் போன்றவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டில் இருந்ததாகவும் கூறியது உண்மைக்கு மாறாகவும், அறிவியலுக்கு புறம்பானதாகவும் இருந்தது. அடுத்து பேசிய ரெங்கராஜன் என்பவர் இராமயணத்தையும், மகாபாரதத்தையும் மேலும் இதர இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டும் எனவும் அதில் ஆய்வுகள் தொடங்கப்பட வேண்டுமெனவும் கூறினார். பசுவின் புனிதம் பற்றியும் பசுவின் உடலில் உள்ள அனைத்து பொருட்களும் அற்புதமானவை என்றும் கூறினார்.

இவை அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டு இருந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மேடையில் கூறப்பட்ட விஞ்ஞானத்திற்கு எதிரான எந்தக்கருத்துக்களுக்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை. கல்வித் திட்டத்தில் இல்லாத ஒன்றை வரலாற்று பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் அரசு ஆசிரியர்களுக்கு கூட்டம் என்ற பெயரில் தமிழக கல்வித்துறையில் பயிற்சி பெறாத *சுப்பிரமணியம் ஜியும், ரெங்கராஜனும்* பேசுவதற்கு யாரால் அனுமதி அளிக்கப்பட்டது. *கல்வியில் மதவாதத்தை புகுத்த நினைக்கும் மதவெறியர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதி அளித்தது எவ்வாறு? அரசின் கல்வித் திட்டத்தை சரியில்லை எனக்கூறிய மேடையில் முதன்மைக்கல்வி அலுவலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது எதனால்? ஏழை மாணவர்களின் கல்விக்காகவும், நாட்டில் மதசார்பற்ற கொள்கையை பாதுகாக்கவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் இத்தகைய செயல்களை வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். இத்துடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் திங்களன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலத்தில் இயங்கக்கூடிய அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று வரலாற்றுக்கும், அறிவியலுக்கும் புறம்பாக புராணத்தையும், இதிகாசத்தையும் திணிக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய கல்வி முறையை நேரடியாக தவறு என்று மோசமாக விமர்சித்தும், சாதி அடிப்படையில் கல்வி அளிக்கும் குருகுல கல்வி முறையை முன்னிறுத்தியும் பேசியுள்ளனர். முதன்மைக் கல்வி அலுவலர் முன்னிலையிலேயே காவி அமைப்பினர் இதைப் பேசியுள்ளனர். ஆனால் இதற்கு அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல், நிகழ்ச்சி முழுமையிலும் பங்கேற்றிருப்பது வியப்பளிக்கிறது.

குறிப்பாக 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாடு முழுவதும் காவிமயமாக்கும் பலவித சூழ்ச்சிகளில் ஆர்எஸ்எஸ் சார்ந்த காவி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே திருப்பூர் மாவட்டத்தில் பகிரங்கமாக இந்த முயற்சி நடைபெற்றுள்ளது. இது நாட்டின் மதசார்பற்ற ஜனநாயக அரசமைப்புச் சட்டத்துக்கும், நவீன கல்வி முறைக்கும் எதிரானது. நம் சமூகத்தை ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளும், சகிப்புத்தன்மையற்ற, குறுகிய, பிற்போக்குத்தனத்தை வலிந்து திணிக்க முயலும் சக்திகளுக்கு திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் வெளிப்படையாக ஆதரவளிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.