அவிநாசி: சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி அவிநாசிஅருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ராயன் கோயில் காலனி,ஆதிதிராவிடர் காலனி, காசிகவுண்டன்புதூர், மங்கலம்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக ஆழ்துளை கிணற்று நீர், ஆற்றுக் குடிநீர் உள்ளிட்டவை சீராக விநியோகிக்கப்படாததால் அப்பகுதிமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். மேலும், குடிநீர் விநியோகத்திலும் ஊராட்சி நிர்வாகம் பாரபட்சம் பார்ப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துவந்தனர்.

 இதேபோல், அப்பகுதியில் தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்டவைகளும் முறையாக இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் திங்களன்று ராயங்கோயில் காலனி நுழைவாயில் மங்கலம் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், கடந்த பல மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. இப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டும், மின் மோட்டர்கள் பொறுத்தப்படவில்லை. எனவே, ஒருதலைபட்சமாக செயல்படும் ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இப்போராட்டம் குறித்த தகவலறிந்து வந்த அவிநாசி காவல் துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதில் சமாதானமாகாத பொதுமக்கள், அங்கிருந்து புறப்பட்டு அவிநாசி – கோவை பிரதான சாலையில் மறியலில் ஈடுபடமுயன்றனர். இவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அருகிலுள்ள தாமரைக்குளம் பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஒரிரு நாள்களில் ஆழ்துளை கிணறுகளுக்கு மின் மோட்டார் பொருத்தி சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார், 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தினால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.