திருவாரூர்:
பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சாமி கோவிலில், சிலை கடத்தல் பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் ஐஜி.பொன்மாணிக்கவேல் மேற்பார்வையில் இரண்டாவது நாளாக தொடர் ஆய்வுச் சோதனையில் ஈடுபட்டனர். இதன்பின் பொன்மாணிக்கவேல் கூறியதாவது:-

கும்பகோணம் அருகே சிவபுரத்தில் அன்னமுத்து படையாட்சி என்பவரது நிலத்திலிருந்து 6 சிலைகள் எடுக்கப்பட்டன. அதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிவபுரம் நடராஜர் சிலையும் ஒன்று. இந்த சிலையானது, சிவபுரத்திலிருந்து தஞ்சாவூர், சென்னை, மும்பை, நியூயார்க் வழியாக லண்டனுக்கு சென்றுள்ளது. இந்த சிலைகள் 1969ல் ரூ.6 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன. பின்னர் நியூயார்க்கிலிருந்து 1973இல் 9 லட்சம் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இதனிடையே சிலை திருட்டு போனது கண்டறியப்பட்டதை அடுத்து அதை மீட்க அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து இந்த சிலைகள் போல மாதிரி புதிய சிலைகள் செய்யப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டிருந்தன. இப்போது அந்த சிலைகளும் எங்கே உள்ளன என தேடி வருகிறோம். இந்த சிவபுரம் நடராஜர் சிலையானது, மீட்கப்பட்டது முதல் பாதுகாப்பு கருதி திருவாரூர் சிலைகள் பாதுகாப்பு மையத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதே போல சிவகாமியம்மாள் சிலை, சோமாஸ்கந்தர் சிலை ஆகியவை இன்னமும், நியூயார்க் சைமன் மியூசியத்தில் உள்ளன. இந்த சிலைகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் 3000 க்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பதால் இவற்றை ஆய்வு செய்ய 20 நாள்களுக்கு மேல் ஆகும். தற்போது இந்த ஆய்வு முடிவடைந்து மீண்டும் சில நாள்கள் கழித்து தொடங்க உள்ளோம்.இவ்வாறு பொன்மாணிக்கவேல் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.