புதுதில்லி, அக். 22-

பாஜக தலைமையிலான ஹரியானா மாநில அரசு, பொதுத்துறை நிறுவனமான ஹரியானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தை, தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுதியுடன் போராடிவரும் போக்குவரத்து ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளையும், அடக்குமுறை, ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ள ஹர்யானா மாநில அரசிற்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு, யுடியுசி மற்றும் தொமுச முதலான மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பாஜக தலைமையிலான ஹரியான மாநில அரசாங்கம், ஹரியானா மாநிலத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமான ஹரியானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தை, தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து, தொழிற்சங்கங்களின் ஐக்கிய மேடை என்னும் அமைப்பின்கீழ் ஹரியானா மாநில சாலைப் போக்குவரத்து ஊழியர்கள் அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்தனர். வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. எனினும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது மாநில அரசாங்கம் மிகவும் மூர்க்கத்தனமாக ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நீட்டித்துள்ளனர். போராட்டம் மேலும் அதிகமான தொழிலாளர்களுடன் தற்போது நடைபெற்று வருகிறது.

தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடிவரும் தொழிலாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, மாநில அரசு போராடும் தொழிலாளர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பது அதிர்ச்சியையும் கடுங்கோபத்தையும் அளிக்கிறது.

ஹரியானா மாநில அரசு, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை எஸ்மா என்னும் கருப்புச் சட்டத்தின் கீழும் மற்றும் பிணையில் வரமுடியாத குற்றங்களின் கீழும் பொய் வழக்குகள் ஜோடித்து கைது செய்துள்ளது. 500 ஊழியர்களுக்கும் மேலாக இடைநீக்கம் உத்தரவு அளித்துள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 100ஊழியர்களை வேலையிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. புதிதாக ஆட்களை எடுப்பதற்கான வேலைகளிலும் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

கைது செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராகப் புனையப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் மத்தியத் தொழிற்சங்கங்கள் ஹரியானா மாநில அரசைக் கோருகின்றன.

மேலும் ஹரியானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டும், போராடும் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் மத்தியத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

அதேசமயத்தில் அரசின் அடக்குமுறைக்கு எதிராக, துணிவுடன் போராடிவரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு, மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். போராடிவரும் ஹரியானா சாலைப்  போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும்விதத்தில் நாடு முழுதும் உள்ள தொழிலாளர்கள் ஆதரவு இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறோம்.

இவ்வாறு மத்தியத் தொழிற்சங்கங்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

(ந.நி.)

 

Leave a Reply

You must be logged in to post a comment.