இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் இன்று (21.10.2018) சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு :

தமிழக அதிமுக அரசு வரி சீராய்வு என்ற பெயரில் தமிழக மக்கள் மீது கொடும் தாக்குதலை தொடுத்துள்ளது. தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து தள்ளிவைத்து வரும் அதிமுக அரசு உள்ளாட்சி ஜனநாயகத்தின் வேரில் வென்னீர் ஊற்றுகிறது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், அதிகாரிகளின் ராஜ்யம் கொடி கட்டி பறக்கிறது.

இந்நிலையில், தமிழக அரசு 7.9.2018 அன்று வெளியிட்ட அரசாணை எண்கள் 73 மற்றும் 76இன் படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற ஊராட்சிகளில் உள்ள கடைகள், அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு 100 சதவிகிதத்திற்கு அதிகமாகவும், குடியிருப்பு வீடுகளுக்கு 50 சதவிகிதம் அளவிற்கு அதிகமாகவும் சொத்து வரியை உயர்த்தியுள்ளது.  இது மக்கள் தலையில் பேர் இடியாக இறங்கியுள்ளது.

மேலும், ஏ, பி, சி, டி என வரிவிதிப்பு மண்டலங்கள் பிரிக்கப்பட்டிருந்த நிலையில், அடிப்படை வசதிகளற்ற குடிசைப் பகுதியான ‘டி’ பிரிவு என்பது முற்றாக நீக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளர்கள் தன்னிச்சையாக தீர்மானம் போட்டு, ‘டி’ பிரிவை நீக்கியுள்ளனர். இதற்கான எந்த வழிகாட்டுதலும் மாநில அரசின் நகராட்சி ஆணையாளரால் தரப்படவில்லை. இதனால், இதுவரை ‘டி’ பிரிவு என்று அறியப்பட்டு குறைந்த வரி செலுத்தி வந்த ஏழை, எளிய மக்கள் கூட பலமடங்கு கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலையை அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளது. இதற்காக சுயமதிப்பீட்டு படிவம் விநியோகித்து விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. அத்துடன் மின் இணைப்புகள் பற்றிய விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் கடும் ஆட்சேபணைக்கு உரியது.

வரி உயர்வோடு, குடிநீர் கட்டணம், குடிநீர் இணைப்புக் கட்டணம், பெயர் மாற்றுக் கட்டணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் ஆகியவையும் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. வரிசீராய்வு குறித்து மக்கள் கருத்து தெரிவிப்பதற்கு விரிவான விளம்பரமும் செய்யப்படவில்லை, போதிய கால அவகாசமும் தரப்படவில்லை. இது முற்றிலும் அநியாயமானது. ஜி.எஸ்.டி வரி, பணமதிப்பு நீக்கம், பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு இந்த வரி உயர்வு கடும் சிரமத்தை ஏற்படுத்தும். குடியிருப்பு கட்டிடங்களுக்கான வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் வாடகை வீட்டில் குடியிருப்போர்  தலையில் தான் இந்த சுமையும் சேரும்.

வரிஉயர்வு மற்றும் கட்டண உயர்வு குறித்து மக்கள் ஆட்சேபணை தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். இது குறித்து அனைத்துப் பகுதி மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், விரிவாக விளம்பரம் செய்ய வேண்டும். வரி சீரமைப்பு குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், உள்ளாட்சி மன்றத் தேர்தலை உடன் நடத்திட கோரியும் அக்டோபர் 29, 2018 அன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சிகள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டு கோரிக்கைகள் நிறைவேறும் வகையில்  இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுகிறோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.