நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின்னர், கங்கையைச் சுத்தப்படுத்துவதற்காக பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதுவரையிலும் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.  எனினும் கங்கை ஓடுகின்ற பல பகுதிகளில் மாசு முன்பைவிட அதிகமாகி இருக்கிறது.  இன்றைய நிலையில் கங்கையில் ஓடும் நீர், குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ அல்லது வீட்டு உபயோகங்களுக்குப் பயன்படுத்துவதற்கோ இலாயக்கானது அல்ல என தெரிய வந்துள்ளது.

மிகவும் புகழ்பெற்ற சூழலியலாளராக இருந்த பேராசிரியர் ஜி.டி அகர்வால், கங்கை நதியைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகள் செலவிட்டவர், அதற்காக, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர். கங்கையைச் சுத்தம் செய்வதற்கோ அல்லது  அவரது உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கோ,  மோடி அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக, பேராசிரியர் ஜி.டி. அகர்வால்,  உண்ணாவிரதமிருந்த தன்னுடைய 112 நாள் அன்று மரணம் அடைந்தார்.
மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின்னர்,  2014க்கும் 2018 ஜூன் மாதத்திற்கும் இடையே 5,523 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், 3,867 கோடி ரூபாய் இதுவரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் கூட, தகவல் அறியும் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட விவரங்களிலிருந்து, கங்கை நதி மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்ததைவிடத் தற்போது மிகவும் மோசமான அளவில் மாசு அடைந்திருப்பது தெரியவருகிறது. கங்கை நதி ஓடும் பல இடங்களில் மாசு அதிகரித்திருக்கிறது

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் என்னும்  அமைச்சகத்தின்கீழ் சிபிசிபி எனப்படும் மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாடு வாரியம் என்கிற ஓர் அமைப்பு (CPCB – Central Pollution Control Board) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அது  அளித்துள்ள தகவலின்படி,  2017இல் கங்கை நதியில் உயிரிரசாயனத்திற்குரிய பிராணவாயு தேவை (BOD-Biochemical Oxygen Demand) என்பது மிகவும் அதிகமாக இருந்தது. அதேபோன்று, இது வெளியேற்றும் பிராணவாயு அளவும் (quantity of Dissolved Oxygen (DO)என்பதும் பல இடங்களில் குறைந்து  கொண்டிருக்கிறது.
தண்ணீரில் வாழும் உயிரினங்கள் வாழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பிராண வாயு  தேவை. தண்ணீரில்  உயிரிரசாயனத்திற்குரிய பிராணவாயு தேவை (பிஓடி) அதிகமாக இருக்கிறது என்றால், தண்ணீரில் உள்ள பிராணவாயு வேகமாகக் குறைகிறது என்று பொருள். பிஓடி அதிகம் இருப்பது, ஆற்றிற்கும், ஆற்றில் வாழும் உயிரினங்களுக்கும் பெரும் கேட்டினை உருவாக்கிடும்.
ஆற்றிலிருந்து பிராணவாயு வெளியேற்றம் (DO-Dissolved Oxygen) என்பது தண்ணீரில் மாசு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அளப்பதற்கான மற்றுமொரு  அளவீடாகும். தண்ணீரில் DO அளவு அதிகம் இருக்கிறது என்றால், அது மிகவும் குறைவான அளவிற்கே மாசு அடைந்திருக்கிறது என்று அர்த்தம். மாசு அதிகரித்தால், தண்ணீரில் உள்ள பிராணவாயுவின் அளவு குறையும்.

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் கங்கை நதியில் 80 இடங்களில் 2,525 கிலோ மீட்டர் அளவிற்கு,  தண்ணீரின் தன்மையை ஆய்வு செய்தது. இவ்வாறு ஆய்வு செய்தபின் அது அளித்துள்ள அறிக்கையிலிருந்து, அது ஆய்வு செய்த இடங்களில் பாதிக்கும் மேலான இடங்களில் கங்கை நதியில் ஓடும் தண்ணீரானது வீட்டு உபயோகத்திற்குக் கூட பாதுகாப்பானதாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம், கங்கை உற்பத்தியாகும்  கங்கோத்ரியிலிருந்து, அது கடலில் கலக்கும் மேற்கு வங்கம் வரையிலும் நீரின் தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது. கங்கோத்ரி, ருத்ரபிரயாக், தேவபிரயாக் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் மட்டுமே கங்கை நதி சுத்தமாக இருக்கிறது.

பின்னர் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே, மிகவும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ஹரித்வாரிலேயே கங்கை நதியின் தூய்மைக் கேட்டின் அளவு பரிதாபமான அளவிற்கு மோசமடைந்துவிட்டது. பின்னர் வாரணாசி, அலகாபாத், கான்பூர், பாட்னா, ஹவுரா ஆகிய இடங்கள் குறித்து சொல்லவே வேண்டாம், அந்த அளவிற்கு மோசமாகிவிட்டன.

மோடி அரசாங்கம் 2015 மே மாதத்தில் நமாமி கங்கை திட்டம் என்ற பெயரில் கங்கை நதியைச் சுத்தம் செய்வதற்காக பல திட்டங்களைக் கொண்டு வந்தது. இதன்படி நகரங்களில் ஓடும் சாக்கடைத் தண்ணீரைச் சுத்தம் செய்தல், தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்தம் செய்தல், ஆற்றின் சுற்றுப்புறங்களைச் சுத்தம் செய்தல், கிராமப்புறங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல், ஆற்றின் கரைகளைக் கட்டுதல் மற்றும் சுடுகாடுகள் ஏற்படுத்துதல், மரம் வளர்ப்புத் திட்டங்களைக் கொண்டுவருதல் முதலானவை மேற்கொள்ளப்பட்டன.

இவற்றுக்காக 22 ஆயிரத்து 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 221 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.  இதில் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கு என்று 17 ஆயிரத்து 485 கோடி ரூபாய் செலவினத்தில் 105 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தன.  இதில் இதுவரை 26 திட்டங்கள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. ஆற்றின் கரையோரங்களில் கரைகளைக் கட்டுதல், சுடுகாடுகள் அமைத்தல் போன்றவற்றிற்காக 67 திட்டங்கள் உருவாக்கப்பட்டதில் 24 மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன.

பேராசிரியர் அகர்வால் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுவதில் உள்ள சுணக்கம் குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  அவர் தன் கடிதத்தில் இத்திட்டங்கள் அனைத்துமே கார்ப்பரேட்டுகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் உதவுவதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்டிருக்கின்றனவே தவிர, கங்கையைச் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கை எதையும் இத்திட்டங்கள் செய்திடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இருந்தார்.
மேலும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து மத்திய தணிக்கைத்துறைத் தலைவரும் (CAG) கேள்வி எழுப்பியிருந்தார். 2017இல் அவர் தன்னுடைய அறிக்கையில், “கங்கையைச் சுத்தம் செய்வதற்கான தேசியத் திட்டம் (NMGG—National Mission for Clean Ganga) அமல்படுத்திட இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஆறரை ஆண்டுகள் கழிந்தபின்னரும்கூட, இத்திட்டத்தை இன்னமும் முழுமையாக நிறைவு செய்திட முடியவில்லை,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதே போன்று பல திட்டங்கள். எதுவும் உருப்படியாக மேற்கொள்ளப்படவில்லை. இவற்றின் விளைவாக கங்கை நதி இன்றைய தினம் பல இடங்களில் வீட்டு உபயோகத்திற்கோ அல்லது பாசனத்திற்கோகூட பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. பல இடங்களில் இதனால் மக்கள் பலவிதமான நோய்களுக்கும் ஆளாகக்கூடிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

-தீரஜ் மிஷ்ரா

நன்றி: தி ஒயர் இணைய இதழ்

Leave a Reply

You must be logged in to post a comment.