சென்னை:
முற்போக்கு படைப்புகள் மூலமாக கலைஇலக்கிய வாதிகளால் சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

சென்னையில் வெள்ளியன்று (அக். 19) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலை
ஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டைத் தொடங்கி
வைத்து அவர் பேசியதன் மற்றொரு பகுதி வருமாறு:
ஆர்.எஸ்.எஸ் கருத்தியலும் கண்ணோட்டமும் ஏன் இன்னமும்வெற்றிபெறவில்லை. அது இன்றைக்கு இருக்கக்கூடிய உண்மைகளுக்கும் எதார்த்தத்திற்கும் புறம்பானதாக இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு வேற்றுமைகள், அந்த வேற்றுமையில் ஒற்றுமையைக்
கட்ட எடுக்கப்படுகிற முயற்சிகள் இவற்றுக்கு முற்றிலும் புறம்பானதாக ஆர்எஸ்எஸ் கருத்தி
யல் இருக்கிறது. அவர்கள் கருத்தியலின் மையம் என்பது அவர்கள் சொல்கிற மொழி, அவர்கள் சொல்கிற கலாச்சாரம், வடஇந்திய இந்துக்களுடைய மரபுகள், கலாச்சாரங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள்.

இவை தான் உலகில் உயர்ந்தவை என்ற கருத்தியலை அவர்கள் முன்வைக்கிறார்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய எதார்த்தத்திற்கும் உண்மை க்கும் புறம்பானதாக இருக்கக்கூடிய அவர்களுடைய கருத்தியலை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று சொன்னால் அவர்கள் செய்யவேண்டியது என்ன? ஏற்கனவே இருக்கக்கூடிய வரலாற்றை திருத்தி எழுதுவது
தான். இப்படிச் செய்தால் தான் அவர்கள்தங்களுடைய நோக்கத்தில் வெற்றிபெற முடியும். எனவே அவர்கள் வரலாற்றை புனைகதைகளாக புராணங்களாக இடமாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் கடவுள் சொன்னார் என்று புராணங்களில் சொன்னால் அதற்கு மேல் நம்மால் கேள்வி கேட்க முடியாது. எனவே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. விமர்சனத்திற்கு இடமில்லை. காரண காரியங்களுக்கும் விடைகளைத் தேடுகிற தேடல் போக்குக்கும் இடமில்லாமல் போகிறது. எனவே சிறுவயதில் என்னுடைய தாத்தா எனக்குத் தினமும் ராமாயண கதைகளை சொல்லுவார். எல்லா அத்தியாயங்களும் அவருக்கு அத்துப்படி. பொதுவாக நான் ஒரு
கேள்வியை அவரிடம் திரும்ப திரும்பக் கேட்கும்போதெல்லாம் அவர் கோபப்படுவார்.

அது என்ன விந்திய மலைக்கு தெற்கு பக்கம் இருக்கிற அத்தனைப்பேருமே விலங்குகளா
கவே சித்தரிக்கப்படுகிறார்கள். தெற்கில் இருக்கக்கூடிய நாமெல்லாம் மனிதப்பிறவிகள் இல்லையா? அனுமானைப் பொறுத்தவரை ஒரு திராவிட அரசர். ஆனால் ஆரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற ராமரின் ஏவலாளாக பக்தனாக அனுமானை சித்தரிப்பதன் மூலமாக அன்றைக்கு நடந்த ஆரிய – திராவிட மோதலில் ஆரியம் வெற்றியடைந்தது என்பதன் பிரதிபலிப்பாகத்தான் இப்படிப்பட்ட கதைகளும் புராணங்களும் புனைகதைகளும்
எழுதப்பட்டன என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும்.

எனவே தான் வெளியில் தெரிகிற விஷயம் அல்ல; அதற்குப் பின்னால் மறைக்கப்படுகிற நிகழ்ச்சி நிரல் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். எனவே ஆரியத்தினுடைய பிரதி
நிதியாக வெற்றியடைந்ததாக சித்தரிக்கப்படுகிற ராமரை மையப்படுத்தி இன்றைக்கு இந்துத்துவா சக்திகள் மோதல்களை உருவாக்குகிறார்கள். அயோத்தியா பிரச்சனை அதில் ஒன்று. பாபர்மசூதி, ராமர்கோவில் உள்ளிட்ட பிரச்சனைகளை மீண்டும் கிளப்பஅவர்கள் தயாராகி வருகிறார்கள்.

எனவே ஆர்எஸ்எஸ்சின் இந்து தேசம் என்கிற கருத்தியல் வெற்றிபெறவேண்டும் என்று சொன்னால் அதற்கு எதிராக உள்ள விமர்சனங்களை தாக்கி அழித்தொழிப்பது என்பதை அவர்கள் செய்யத்தான் வேண்டும்.அதைச் செய்யாமல், அதில் வெற்றியடையாமல் அவர்களால் நிச்சயமாக இந்து தேசத்தை உருவாக்கமுடியாது. எனவே இன்றைக்கு வெறியூட்டக்கூடிய பேச்சுக்களைப் பேசுபவர்கள், வன்முறையில் இறங்கு பவர்கள், படுகொலை செய்பவர்கள் இவர்கள் எல்லாம் ஏதோ ஆர்எஸ்எஸ் இயக்கத்தோடு தொலை தூரத்தில் இணைக்கப்பட்ட சிறு சிறு குழுக்கள் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.

இந்து தேசத்தின் உள்ளார்ந்த நிகழ்ச்சி நிரல் இதுதான். எனவே இதைச் செய்பவர்கள் ஏதோ ஆர்எஸ்எஸ் அமைப்பின் மையப்புள்ளியாக இல்லாமல் அதை விட்டு விலகி இருக்கிற தொங்கு சதையாக வாலாக இருக்கிற சிறிய சிறிய குழுக்கள் இதைச் செய்வதாக பார்க்கக்கூடாது, இதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மையமான நோக்கம், மையமான நிகழ்ச்சிநிரல் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே விமர்சனங்களும் மாற்றுக் கருத்துக்களும் காரண காரியங்களும் முற்போக்கு சிந்தனைகளும் முன்னுக்கு வருகிறது என்பது அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களுக்கு நிச்சயமாக உதவாது. உயர்கல்வித்துறையில்தான் இப்படிப்பட்ட வாய்ப்புகள் அதிகம். எனவேதான் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகம் அல்லது பரோடாவில் இருக்கக்கூடிய கலை கல்லூரி அல்லது திரைப்பட பயிற்சிக் கழக கல்லூரி மீது தாக்குதல் நடத்தப்படுவது என்பது இந்த அடிப்படையான நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான ஒரு பகுதியாக நாம்பார்க்கவேண்டும். எனவேதான் அவர்கள் இந்திய வரலாற்றை இந்து புராணங்களாக மாற்றிக் கட்டமைக்க முயற்சிக்கிறார்கள்.
இந்து மத தத்துவங்களை இந்து இறையிலாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதில் அவர்கள் வெற்றியடைந்தால் தான் அவர்கள் முன்வைக்கிற இந்து தேசம் என்கிற கருத்தியல் வெற்றிபெறும். எனவே இப்படியெல்லாம் செய்வது தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது அல்ல. இந்து தேசம் என்கிற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படையான இந்தியாவுக்கு ஒத்து வராத கருத்தியலை வெற்றிபெற வைப்பதற்காக உள்ளார்ந்து திட்டமிடப்பட்ட விஷயம் தான் அது என்பதை நாம் பார்க்கவேண்டும்.

சபரிமலையில் என்ன நடக்கிறது?
சபரிமலையில் என்ன நடக்கிறது? சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து
வயது பெண்களும் அனுமதிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் தரப்பிலும் இதுபோன்று மனு போடப்பட்டது. சபரிமலைக்குள் வயது வரம்பு வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அதை பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் வர
வேற்றன. அரசியல் சாசனத்திற்கு முன் அனைவரும் சமம் என்று அப்போது சொன்னார்கள். இன்று உச்சநீதிமன்றமும் அப்படிப்பட்ட தீர்ப்பைத்தான் தந்துள்ளது.

நம்முடைய அரசியல் சாசனத்தில் இது ஒரு அடிப்படை உரிமையாக இருக்கிறது. சமூக தளத்திலும் பொருளாதார தளத்திலும் சமம், சமத்துவம் என்கிற விஷயம் வருகிற
போது மத அடிப்படையிலோ சாதி அடிப்படையிலோ ஆண் பெண் அடிப்படையிலோ பாகுபாடு காட்டப்படக்கூடாது. இது அனைவருக்கும் சமமானது என்று தான் அரசியல் சாசனம் சொல்லுகிறது. எனவேஇது அரசியல் சாசனம் கொடுத்திருக்கக்கூடிய அடிப்படை
யான உரிமை. எனவே அதை பாஜக முதலில் வரவேற்றது. இன்றைக்கு சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்கிற போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஆனால் இவர்கள்தான் இஸ்லாமிய சமூகத்தில் முத்தலாக் பிரச்சனை வந்தபோது, நாடாளுமன்றத்தில் அதுகுறித்து முறையாக விவாதிக்கவிடவில்லை.

நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கு அந்த மசோதாவை அனுப்பவேண்டும் என்று பல கட்சிகள் வலியுறுத்தின. அதில் இன்னும் முடிவெடுக்கப்படாமல் மாநிலங்களவையில் இந்தப்பிரச்சனை நிலுவையில் உள்ளது. ஆனாலும் கூட அவசர அவசரமாக ஒரு அவசரச் சட்டத்தை ஆளும் பாஜக கொண்டுவந்தது. ஏன்? என்று கேட்டபோது இஸ்லாமிய பெண்களுக்கு சமத்துவத்தைக்
கொடுப்பதற்காக அதைக் கொண்டு வந்திருப்பதாக கூறினார்கள்.

சபரிமலைக்கு ஓர் நீதி, முத்தலாக்குக்கு ஒரு நீதியா?                                                                                                            அப்படியானால் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது என்பது சமத்துவம் சம்பந்தப்பட்ட விஷயம்தானே? அதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடமிருந்து முறையான பதில் இன்னும் வரவில்லை. எனவே அவர்களின் அரசியல் லாபத்திற்கு எது பொருந்துகிறதோ அதை எடுத்துக்கொள்வார்கள், ஒருபிரச்சனையில் சமத்துவம்வேண்டும் என்பார்கள். மற்றொரு பிரச்சனையில் சமத்துவம்கூடாது என்கிற இரட்டை நிலைப்பாட்டை எடுப்பார்கள். இவர்கள் எடுக்கிற பிரச்சனைகளின் அஸ்திவாரத்தில் உண்மைகளோ அல்லது காரணகாரியங்களோ முற்போக்கு சிந்தனைகளோ இல்லை. மாறாக அரசியல் நலனுக்கு எதுதோதாக இருக்கிறதோ அதை அவர்களுடைய நிலைப்பாடாக எடுக்கிறார்கள்.

இன்று சபரி மலைக்குச் செல்லும் பாதை யெல்லாம் ரவுடிக்கூட்டத்தை நிறுத்தி வைத்தி
ருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் காரண காரியங்களோ விவாதங்களோ நிச்சயமாக எடுபடாது. அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குத் தோதாக இப்படிப்பட்ட நிலைப்பாட்டை அவர்கள் மாற்றி மாற்றி எடுக்கிறார்கள்.

எங்களது கட்சியைப்பொறுத்தவரை மனைவியின் கருத்தைகேட்காமல் தன்னிச்சையாக மூன்றுமுறை தலாக் சொல்லிவிவாகரத்துசொல்கிற அந்த நடைமுறை சரியானது அல்ல என்பதை நாங்கள் உறுதியாக சொன்னோம். ஆனால் அப்படி முத்தலாக்சொல்லுகிறவர்களுக்கு கிரிமினல் தண்டனை உண்டு என்பதில் எங்களுக்குக் கருத்துவேறுபாடுகள் உண்டு. அந்த மசோதாவை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு விடவேண்டும் என்கிற ஆலோசனையைச் சொன்னோம். ஆனால் அது நடக்கவில்லை. முத்தலாக் விஷயத்தில் ஒருநிலைப்பாடு, சபரி மலை பிரச்சனையில் இன்னொரு நிலைப்பாடு என்கிற நிலைதான் அவர்களின் நிலைப்
பாடாக உள்ளது.

மோசமான வாக்கு வங்கி அரசியல்
சபரிமலை விஷயத்தில் ஆறு மறு சீராய்வுமனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அரசு நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் என்னமாதிரியான தீர்ப்பை அளிக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போய் இருக்கலாம். ஆனால் அவர்கள் அவசரப்படுகிறார்கள். வெறியூட்டுகிற கருத்துக்களைப் பேசி மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி இந்துவாக்குகளை உறுதிப்படுத்தக்கூடிய நாட்டிலேயே மிக மோசமான வாக்கு வங்கிஅரசியலைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே தான் இந்திய தேசியம்என்கிற இடத்தில் இந்து தேசியம் என்கிற கருத்தை புகுத்தப்பார்க்கிறார்கள். அவர்கள் சொல்லுகிற பாரத மாதா கீ ஜெ என்கிற அந்த முழக்கம் தான் தேசபக்த முழக்கம் என்று சொல்லுகிறார்கள்.

குறுகிய தேசியவாதம்
நேதாஜி சுபாஷ்சந்திர போசின் ஜெய்ஹிந்த் என்கிற முழக்கம் தேச பக்தழக்கமில்லையா? மாவீரன் பகத்சிங் முன்வைத்த இன்குலாப் ஜிந்தாபாத் என்ற
புரட்சி ஓங்குக என்கிற முழக்கம் தேச பக்தமுழக்கமில்லையா? எனவே இவர்கள் இப்படி
உண்மையான தேசபக்த முழக்கங்களை பின்னுக்குத்தள்ளி அவர்கள் சொல்லுகிற முழக்கங்களை முன்நிறுத்தி இந்திய தேசியம் என்கிற பரந்த பல்வேறு வேற்றுமைகளை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட தேசம் என்கிற கருத்தியலுக்கு பதிலாக குறுகிய இந்து தேசியத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

ஊடகங்களுக்கு வேண்டுகோள்
இந்த நிகழ்ச்சிக்கு பெரும்பாலான ஊடகவியலாளர்கள் வந்துள்ளனர். ஆனால் பெரும்பான்மையான ஊடகங்கள் இந்த பாஜக அரசின் மோசமான செயல்களுக்கு துணைபோகிறார்கள். உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை நான் வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன். போஸ்ட் ட்ருத் என்று சொல்லக்கூடிய ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறார்கள். போஸ்ட் ட்ருத் என்றால் என்ன? உண்மையிலேயே கள
நிலைமை என்ன, கள எதார்த்தம் என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் அவற்றை  ரம்கட்டிவிட்டு உணர்ச்சிகளை தட்டிஎழுப்பு வதன் மூலமாக சில மிகப்பெரிய தனிமனித
பிம்பங்களை முன்னிறுத்திப் போற்றிப்புகழ்ந்து அவர்கள் சொல்வது எல்லாம் உண்மை என, உண்மையைப் புறந்தள்ளி நாங்கள் சொல்லுவதுதான் உண்மை என்று உண்மையில்லா ஒன்றை முன்வைக்கிற ஏற்பாடுதான் நடந்துகொண்டிருக்கிறது.

மோடியின் இந்தியா எப்படிப்பட்டது?
நிச்சயமாக மோடியின் இந்தியாவில் இதைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கி
றோம். மிக நன்றாக உடையணிந்த, மகிழ்ச்சியான முகதோற்றம் உடைய கம்பீரமான சிரிப்போடு கூடிய பிரதமர் மோடியின் புகைப்படம் என்பது எல்லா இடங்களிலும் வைக்கப்
பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும் விளம்பரமாகவும் அது வைக்கப்
பட்டுள்ளது. உண்மையிலேயே பெட்ரோல் நிலையங்களுக்கு பெட்ரோல் போடப்போகிற கார் ஓட்டிகளும் இருசக்கர வாகனங்களும் மிக மிக துன்பத்தோடும் துயரத்தோடும் தான் போகிறார்கள். அதுதான் களநிலைமை. ஆனால் பிரதமரின் மகிழ்ச்சியான புன்னகை என்பது போஸ்ட் ட்ருத். எனவே தான் உண்மையான இந்தியாவை மூடி மறைத்து பின்னுக்குத்தள்ளி அவர்கள் சொல்லுகிற விஷயம் தான் உண்மையான இந்தியா என்பதை முன்வைக்கிறார்கள். இந்தச் சூழலில் ஊடக நண்பர்களுக்குநான் முன்வைக்கிற வேண்டுகோள் என்னவென்றால் உண்மை என்ன என்பதை வெளியில் சென்று பார்த்து விட்டு எழுதுங்கள்.

அமித்ஷா மழை பெய்து கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார். சீத்தாராம் யெச்சூரி மழை பெய்யவில்லை என்று சொல்லுகிறார் என்று நீங்கள் எழுதுவதற்குப் பதிலாக ஜன்னலைத் திறந்து பார்த்தால் நிச்சயம் உண்மையைக் கண்டுபிடிக்கமுடியும். உண்மையை நீங்கள் எழுதவேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.

புகழ்பெற்ற புத்தகம்
நான் எனது உரையை நிறைவு செய்வதற்கு முன்பாக மிகச்சிறந்த எழுத்தாளரும் மார்க்சிய ஆய்வாளருமான ஜார்ஜ் லூகாஸ் எழுதிய மிகச்சிறந்த புத்தகத்தை பற்றிச் சொல்லி நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர்,
“காரண காரியத்தை தகர்ப்பது’’ இட்லர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் அதை
அவர் எழுதத் தொடங்கினார். ஆனால் இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்த
பின்னர்தான் ஹங்கேரியில்தான் அவரால் அந்தப்புத்தகத்தை வெளியிட முடிந்தது. அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் அவர் கேள்வி ஒன்றை முன்வைத்துத் தொடங்குகிறார்.

ஜெர்மனியின் பாரம்பரியம் ஹெகல் தத்துவம். இயக்கவியல் தத்துவத்தை தோற்று
வித்த பாரம்பரியம், நிறையக் கேள்விகளை கேட்கிற மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கிற
தேடலை அடிப்படையாகக்கொண்ட ஒரு பாரம்பரியம்.இப்படிப்பட்ட பாரம்பரியத்தை முன்னெடுத்த மக்கள் எப்படி இதற்கெல்லாம் எதிராக இருக்கக்கூடிய பாசிசத்தை ஏற்றுக்
கொண்டார்கள் என்கிற கேள்வியை முன்வைத்து அவர் தொடங்குகிறார்.

ஜெர்மானிய மக்களின் நீண்ட பாரம்பரியம்
ஜெர்மானிய மக்களுக்கு என்ன ஆனது? அவர்களுடைய இந்த நீண்ட கால பாரம்
பரியம் ஏன் அவர்களை விட்டு விலகிச் சென்று விட்டது?இட்லரின் இப்படிப்பட்ட விஷயங்க
ளை அவர்களால் ஏன் எதிர்க்க முடியவில்லை.

அதற்கான பதிலென்ன? பாசிசம் செய்யும் மிகமுக்கியமான பணி என்பது காரண காரி
யங்களைக் கேள்வி கேட்டால் தாக்குதல் தொடுத்து அழித்தொழிப்பதுதான். அதைச் செய்யாமல் பாசிசம் வெற்றிபெறமுடியாது. எனவே மக்கள் மத்தியிலே இட்லர் மிகவும் தேவைப்படுகிறார் என்ற உணர்வை அது தோற்றுவிக்கிறது. அவர்களுடைய மூலாதாரமான சிந்தனைகளை அது மழுங்கடித்து இட்லர் ஜெர்மனிக்குத் தேவை, ஜெர்மனியின் முன்னேற்றத்திற்குப் பாசிசம் தேவை என்கிறஉணர்வு மக்களுடைய மனதில் நம்பவைக்கப் படுகிறது. எனவே இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தவிஷயம் இந்தியாவுக்கு இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமாக உள்ளது.

இந்தியாவுக்கு முக்கியமான செய்தி
இப்போது இருக்கக்கூடிய பாஜக, ஆர்எஸ்எஸ், மோடி அவர்களுடைய தத்துவவி
யலாளர்கள் இந்திய மக்களை இந்துத்துவா என்பது இந்தியாவுக்குத் தேவையானது, ஆர்எஸ்எஸ்சும் பாஜவும் இந்தியாவுக்குத் தேவை, மோடி இந்தியாவுக்கு மிகவும் தேவைப்
படுகிறார் என்று மக்களுடைய சிந்தனையில் கட்டமைக்கப்படுகிறது. இதைசெய்ய
வேண்டும் என்று சொன்னால் ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப்போல மாற்றுக்கருத்து, விமர்சனம் சொல்லுகிற போக்கு, காரண காரியங்களை ஆராய்ந்து வாக்குவாதம் செய்கிற
போக்கு ஆகியவற்றை அழித்தொழித்தால் தான் ஆர்எஸ்எஸ் தனது கருத்தியலில் வெற்றி
பெறமுடியும் என்பதுதான் அந்தப் புத்தகத்தில் இருந்து இந்தியாவுக்குத்தேவைப்படுகிற மிக முக்கியமான செய்தியாகும்.

படைப்பாளிகள் முன்னுள்ள கடமைகள்
இந்திய மக்களின் மனதில் ஏற்றி  வைக்கப்பட்டிருக்கிற மிக மோசமான பிற்போக்கான கருத்துக்களைப் புறந்தள்ளி உண்மையாகக் கருத்துக்களின் அடிப்படை
யில் அவர்களை மாற்றும் வகையில் படைப்பாளிகள் என்கிற முறையில் உங்களுடைய
படைப்புகளும் பணிகளும் அமையவேண்டும்.

எனவே படைப்பாளிகள் என்கிற முறையில் மதவாதத்திற்கு எதிரான நீங்கள் எழ
வேண்டும், மக்களுடைய சிந்தனைகளில் காரண காரியங்கள், முற்போக்கான அம்சங்க
ளை நீங்கள் செய்யவேண்டும். இதைச் செய்யவில்லை என்றால் நமது தேசத்தை பாது
காக்கமுடியாது. அநேகமாக உலகப்புகழ் பெற்ற படைப்பாளிகள் ஒரு சித்தாந்தத்
தோடுதான் இருக்கிறார்கள்.

பிக்காசோவும் ஸ்பெயின் காவல்துறையும்
புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோவை பற்றிச்சொல்லமுடியும். மேட்ரிட் நகரில் ஒரு ஓவியக்கண்காட்சியில் கடந்த கால ஓவியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு சின்னஞ்சிறிய கிராமம் அழிக்கப்பட்டதை அவர் தனது படைப்பாக வைத்திருந்தார்.
இது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே அன்றைக்கு இருந்த காவல்
துறை மற்றும் ஸ்பெயினை ஆட்சி செய்த சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில் அவரது
வீடு திடீர் சோதனையிடப்பட்டது. “ இந்தப் படைப்பு நீ செய்ததா?’’ என்று பிக்காசோ
அவர்களைக் காவல்துறையினர் கேட்டனர்.

அதற்கு அவர், “ நான் செய்யவில்லை. நீங்கள் தான் செய்தீர்கள்’’ என்று சொன்னார்.
அந்தக் கிராமம் காவல்துறையால் அரசாங்கத்தால் அழித்தொழிக்கப்பட்டது. அந்த விஷயம்தான் என்னுடைய படைப்பாக மாறியுள்ளது. எனவே இதைநான் செய்யவில்லை. நீங்கள் தான் செய்தீர்கள் என்று அவர் சொன்னார். இதை அடிப்படையாக வைத்து கலைஞர்கள், படைப்பாளிகள், அறிஞர்கள் இருக்கக்கூடிய இந்த அரங்கம் மக்களுடைய சிந்தனையில் நம்முடைய பாரம்பரியமான வாதப்பிரதிவாதங்களும்கூடிய செழுமையான எதிர்காலத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியைச் செய்யவேண்டும்.

இந்தப்பணி என்பது நம்முடைய குடும்பத்தின் நன்மைக்காகவும் நமதுநாட்டினுடைய நன்மைக்காகவும் நம்முடைய எதிர்காலத்தின் நன்மைக்காகச் செய்யவேண்டும். பேனா என்பது எல்லாவற்றையும் விட மகத்தான சக்தி படைத்தது. எனவே உங்களால் தான் சிறந்த இந்தியாவை உருவாக்கமுடியும். இது உங்கள் கையில்தான் இருக்கிறது. எனவே
இன்று இருக்கக்கூடிய பேச்சுரிமை கருத்துரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இறங்குவதன் மூலமாகத்தான் பாதுகாக்க முடியும். அது உங்களுடைய கையில் நிச்சயமாக இருக்கிறது. அதை நீங்கள் நிச்சயமாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு யெச்சூரி பேசினார். அவரது ஆங்கில உரையை சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தமிழாக்கம் செய்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.