நாமக்கல்:
நாமக்கல், செருக்கலை புதுப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி ஆங்கில வழிக்கல்வி கட்டிடத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், செருக்கலை புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடச்சேரி, இருட்டனை புதூர், சீர்வார்பட்டி, கரட்டூர், பிராந்தகம், உத்திகாபாளையம், மானத்தி உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவர்கள் வருகை தருகின்றனர். இப்பள்ளியில் 18 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த சில வருடங்களாக பள்ளியில் ஆங்கில வழி கல்வி இருந்தும் மாணவர்கள் படிப்பதற்கான போதிய கட்டிட வசதிகள் இல்லாததால் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம், அவ்வூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் பள்ளியில் கூடுதல் கட்டிட வசதிகள் ஏற்படுத்திட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இப்பள்ளிக்கு 44 லட்சம் ரூபாயை டி.கே.ரங்கராஜன் எம்.பி., தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தார். இதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளியன்று பள்ளியின் தலைமையாசிரியர் பெரியண்ணன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, ந.வேலுசாமி, பரமத்திவேலூர் வட்டக்குழு உறுப்பினர் ஏ.கே.சந்திரசேகரன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நல்லுசாமி, வேலுசாமி, ராமசாமி, சமூக ஆர்வலர் மணிவண்ணன், வழகறிஞர் ராஜாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.