ஹலோ மோகன்,
நான்தான் பிஸ்வஜித். திரிபுராவின் தலாய் மாவட்டம் அம்பாசாவிலிருந்து எழுதுகிறேன். நான் திரிபுரா மாநில அரசு ஊழியர். சுகாதாரத்துறையில் பணிபுரிகிறேன். நீங்கள் நலமா.? என்னை நினைவிருக்கிறதா? என்னுடைய மாமனாரை அழைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தபோது நீங்கள்தான் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தீர்கள். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வந்திருந்தேன். அப்போது நிறையப் பேசினோம்.

அப்போது திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. என்னைப் பெருமையாகப் பார்த்தீர்கள். இன்றைக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் இருக்கும் ஓரிரு இடங்களில் திரிபுராவும் ஒன்று என்பதைச் சொல்லி, சொல்லி மாய்ந்து போனீர்கள். அப்போது கூட, அரசு ஊழியர்களின் வாக்குகள் இடது முன்னணிக்கு எதிராக விழும் என்ற பத்திரிகைச் செய்தி பற்றிப் பதறிப் போய்ப் பேசினீர்கள். எனக்கு பதற்றம் இருந்தாலும், அன்று நான் உங்களிடம் அதைக் காட்டிக் கொண்டதில்லை.

ஏமாற்றிய பாஜக
ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மாணிக்சர்க்கார் தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியது. அது அரசு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் பல மாநிலங்களை விட விலைவாசி மிகக்குறைவான அளவில் இருப்பதை இடது முன்னணி சுட்டிக்காட்டினாலும் அரசு ஊழியர்கள் மத்தியில் ஊதியக்குழு பற்றிய பிரச்சாரம் எடுபட்டது. அவர்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்தனர். இதைத் தபால் வாக்குகளில் பார்க்க முடிந்தது.

புதிய அரசு பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் நிறைவு பெறுகையில், மீண்டும் அரசு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுகிறோம் என்று சொன்ன பாஜகவினர், ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் என்று சொல்லி முன்னாள் ராணுவத்தினரை ஏமாற்றியது போல், எங்களையும் கைவிட்டு விட்டார்கள். ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தைத் தந்து விட்டோம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஏமாந்து விட்டோம் என்று நாங்கள் பதைபதைக்கிறோம். பழைய ஓய்வூதியத் திட்டத்திலும் கைவைத்து விடுவார்களோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டிருக்கிறது.

எட்டுமணி நேர வேலையும்…
இடது முன்னணிதான் காவல்துறையினருக்குக்கூட எட்டு மணி நேர வேலை என்று கொண்டு வந்தது. எந்த மூலையில் இருந்தாலும், மாற்று ஏற்பாடு இருக்கும். தற்போது அதில் மாற்றங்கள் வருகின்றன. விரைவில் எட்டு மணி நேர வேலை என்பது போய், மற்ற மாநிலங்களில் உள்ள காவல்துறையினரைப் போல் ஆகிவிடும் போலிருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வீரஞ்செறிந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று செய்தி படித்தேன். ஆர்ப்பாட்டங்கள் குறித்து தங்கள் முகநூல் படங்களையும் பார்த்தேன். மகிழ்ச்சி. விரைவில் வேலை நிறுத்தம் என்றும், அதற்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று அண்மையில் தஞ்சாவூர், மதுரை ஆகிய ஊர்களுக்கு சுற்றுலா வந்து திரும்பிய சக ஊழியர் சொல்லிக் கொண்டிருந்தார். வாழ்த்துக்கள்.

படுத்துவிட்ட நூறுநாள் வேலைத்திட்டம்
அரசு ஊழியர்களை விட, மற்றவர்களின் நிலை படுமோசமாகிவிட்டது. நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் இந்தியாவுக்கு முன்மாதிரியாக இருந்த திரிபுரா படுத்தே விட்டது. பட்டினியால் வாடுவது என்பது இடது முன்னணி ஆட்சியில் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. தற்போது அது தலைதூக்கியுள்ளது.

25 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சியில் ஒருமுறை கூட கும்பலாகச் சேர்ந்த அடித்துக் கொல்லும் நிகழ்வு நடந்ததில்லை. தற்போது நான்கு பேர் அப்படிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நமது ஊழியர் சங்கங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்று மட்டும் சுருங்கி விடுபவை அல்ல என்பது எனக்கும் தெரியும். உங்கள் போராட்டங்கள் எங்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். எங்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் உங்கள் கோரிக்கைக்கு வலு சேர்க்கும். இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. நாங்கள் ஏமாந்தது போல் நீங்களும், மற்ற மாநில அரசு ஊழியர்களும் ஏமாந்து விடக்கூடாது. ஏன், அனைத்துப் பகுதி மக்களுக்கும் இது ஒரு பாடம்தானே.. என்ன செய்யப் போகிறீர்கள்?

இப்படிக்கு,பிஸ்வஜித்…

Leave a Reply

You must be logged in to post a comment.