ஈரோடு,
பிரதம மந்திரியின் விவசாய நீர்ப்பாசன திட்டத்தின்கீழ் மின் மோட்டார், டீசல் பம்புசெட் நிறுவுவதற்கு மானியம் பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதம மந்திரியின் விவசாய நீர்ப்பாசனத்திட்டம் – நுண்ணீர் பாசனம் மற்றும் இதர உள்ளீடுகள் என்ற புதியதிட்டத்தின் கீழ் நிறைவான நீர் மேலாண்மை நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளின் (60:40) நிதிபங்களிப்பின் மூலம் ஈரோடு மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி புதிதாக நுண்ணீர் பாசனம்-சொட்டு நீர்ப்பாசனம். தெளிப்பு நீர்ப்பாசனம் மற்றும் மழை தூவுவான் அமைக்கும் அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் 50 சதவிகித மானியத்தில் மின் மோட்டார், டீசல் பம்புசெட் நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம், நீர் எடுத்து செல்லும் குழாய்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம், வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீரினை குறைந்த அளவு பயன்படுத்திடும் பிர்க்காக்களில் குறைந்த ஆழம் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் 50 சதவிகித மானியத்தில் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் அமைத்திடலாம்.

இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையாக கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் 300 எண்கள் அமைத்திட ரூ.75 லட்சமும், 900 எண்கள் மின் மோட்டர், டீசல் பம்புசெட் நிறுவுவதற்கு ரூ.135 லட்சமும், 600 எண்கள் நீர் எடுத்து செல்லும் குழாய்கள் அமைத்திட ரூ.60 லட்சமும், 600 எண்கள் நீர் சேமிப்பு தொட்டிகள் அமைத்திட ரூ.240 லட்சமும் என ஆக மொத்தம் ரூ.510 லட்சம் நிதி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவு முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கிட திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டுமுகமை, வித்யாநகர், திண்டல்மேடு, (திண்டல் அஞ்சல்), ஈரோடு-12. தொலைபேசி எண். 0424-2330103 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். அனைத்து வட்டாரவேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.