சென்னை, அக். 19-
எழுத்தாளர்களும் கலை இலக்கியவாதிகளும் முற்போக்கு சக்திகளும் நடத்துகிற போராட்டத்தால் மட்டுமே கருத்துரிமையை பாதுகாக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
சென்னையில் வெள்ளியன்று (அக். 19) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டைத் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் இந்த மாநாடு கடந்த பல மாநாடுகளை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கே கருத்துரிமையை போற்றுவதற்காக நாம் கூடியிருக்கிறோம். இன்றைக்கு இருக்கக்கூடிய மிக மோசமான சூழலுக்கு பொருத்தமான கருப்பொருளாக இதை நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள். ஜெர்மனியில் பிரெக்ட் சொன்னதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ஜெர்மனியில் பாசிசம் தலைவிரித்தாடியபோது, “இந்த இருண்ட காலத்திலே பாடல்கள் ஒலிக்குமா’’ என்று அவரிடம் சிலர் கேட்டார்கள். அதற்கு அவர் “இருண்ட காலத்தை பற்றிய பாடல்கள் நிச்சயமாக ஒலிக்கும்’’ என்று  சொன்னார். ஆகவே இன்றைய இருண்ட காலத்தை பற்றிய பாடல்களை கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலமாக இருளில் இருந்து  வெளிச்சத்தை நோக்கிய பயணத்தை நீங்கள் துவங்கவேண்டும். அதுவே நமக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால். எனவே இருளில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான உங்களுடைய படைப்பும் பாடலும் மிக உரத்த குரலில் ஒலிக்கவேண்டும். அந்தப் புள்ளியில்தான் நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும். இந்தியாவின் எதிர்காலம் இந்திய ஒற்றுமை இந்தப்புள்ளியில்தான் இருக்கிறது என்று புரிதலோடு இந்தப் பயணத்தை நாம் மேற்கொள்வோம்.
மனிதக் குலத்தினுடைய வரலாறு  நெடுக்கிலும் பார்த்தால் கருத்து மோதல்கள் பிரதிபலித்திருப்பதை காணமுடியும். கருத்துமோதல்கள் காரணமாகத்தான் முன்னேற்றம் நடந்துள்ளது. மனிதக்குல நாகரீகம் உருவாகியிருக்கிறது. கருத்து மோதல் என்பதுதான் இன்று வரை தொடர்கிறது. இன்றைக்கும் நடக்கிறது. இந்தக் கருத்துக்களில் ஒருபகுதி கருத்துக்கள், இன்றைக்கு இருக்கக்கூடிய மோசமான சுரண்டல் சூழலை  இப்படியே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஆளுகிற வர்க்கத்தினுடைய அந்தக் கருத்துக்கள், நிலைமை, ஆதிக்கம் நீடிப்பதற்காக முன்னுக்கு வருகிற கருத்துக்கள் என்பது வேறு. அதுமாற்றப்படவேண்டும் என்று எதிராக வரும் கருத்துக்கள் என்பது வேறு, 2400 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் சாக்ரட்டீஸ் காலத்திலேயே கருத்து மோதல் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட கருத்து மோதல் விளைவாகத்தான் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் காலத்திலும் இதை நாம் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு நரேந்திர தபோல்கர், பன்சாரே,  கல்புர்கி, கவுரிலங்கேஷ் ஆகியோரது படுகொலையிலும் இதைத்தான் நாம் பார்க்கிறோம். ஆளுகிற வர்க்கம் அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்று  சொன்னால் அதற்கு எதிராக வரும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அழிப்பது, கொல்லுவது என்கிற முடிவைத்தான் தேர்வு செய்வார்கள்.
 சில கருத்துக்களை வெறியை, துவேஷத்தைக்  கிளப்பி விடுகின்றன. சில கருத்துக்கள் வன்முறையைத் தூண்டி கொலைகளுக்கு இட்டுச் செல்கின்றன. இவையெல்லாம் இன்றைக்கு இருக்கக்கூடிய சட்டப்படி தடுத்து நிறுத்தப்படவேண்டும். அது வேறு விஷயம் ஆனால் ஆளுகிற வர்த்தினுடைய கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்கிற காரணத்திற்காக அல்லது அவர்கள்  முன்வைக்கிற தத்துவத்திற்கு சவால் விடுகிறது என்பதற்காக  அப்படிப்பட்ட மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காமல் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது., ஆனால் இன்றைய காலத்தில் அந்த நிலைமை தான் மிக மிகத் தீவிரமடைந்து வருகிறது.  இந்த மோதலில் மாற்றத்திற்கான கருத்துக்கள் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றியை நோக்கிய போராட்டங்களைத்தான் நாம் தொடங்கவேண்டும்.
உலகம் முழுவதும் நடந்திருக்கக்கூடிய கருத்துமோதல் போராட்டத்தைப் பார்க்கும் போது மாற்றுக்கருத்துக்களை எப்படி ஆளுகிற வர்க்கம் அழிக்கிறது என்பதை இட்லர் காலத்தில் பார்த்தோம். அனைத்துப் புத்தங்களும் எரிக்கப்பட்டன. லோகாயுத வாதிகள் கொல்லப்பட்டார்கள். தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூட இப்படிப்பட்ட வரலாற்றை மறு கட்டமைப்பு செய்திருக்கிறார். அவருடைய மூல நூல் இன்றைக்குக் கிடைக்கவில்லை. எனவே மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை அழித்தொழிப்பதற்கு ஆளும்வர்க்கம் எடுக்கிற முயற்சிகளைப்  பார்த்திருக்கிறோம். அதை எதிர்த்து மீண்டெழுகிற விமர்சனங்களையும்  நாம் பார்த்து வருகிறோம். இந்த நிலைமை ஏன் வருகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி. நீங்கள் அனைவரும் கலைஞர்கள் படைப்பாளிகள். விஷயங்களை நீங்கள் மேலொட்டமாகப் பார்ப்பது கிடையாது.  எது நடந்தாலும் அதன் ஆழத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள், இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலுக்கு எது காரணம் என்ற தேடல் நிச்சயமாக ஒவ்வொரு படைப்பாளியின் சிந்தையிலும் இருக்கிறது. இது ஏன் என்கிற கேள்வி நம் முன் எழுகிறது.  இது சில தனி நபர்களுடைய விருப்பு வெறுப்புகளால் இன்றைக்கு மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படுகிறதா? அல்லது  இதற்குப் பின்னால் மறைந்திருக்கிற நிகழ்ச்சிநிரல்  ஏதாவது இருக்கிறதா? ஏன்  வன்முறையைத் தூண்டுகிற வெறியைத் தூண்டுகிற அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிற  நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதை  ஆழமாகப் படைப்பாளிகள் என்கிற முறையில் தேடுவதும் வெளியே தெரிகிற திரைக்குப்பின்னால் என்ன காரணங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அதை மாற்றுவோம் என்று மக்கள் மத்தியில் சொல்லுவதும் படைப்பாளிகள் என்கிற முறையில்  உங்களது கடமையாகும்.
இன்றைய சூழலுக்கு பின்னால் இருக்கக்கூடிய உண்மையான காரணம் என்று வரலாற்றில் பார்க்கும் போது இதற்கான மோதல் என்பது நீண்ட காலமாக நடந்து வருகிறது என்கிற புரிதலொடு இந்த விஷயத்தைப் பார்க்கவேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பாதை எப்படி இருக்கவேண்டும் எப்படிப்பட்ட சுதந்திர இந்தியா கட்டமைக்கப்படவேண்டும் என்பதற்கான விவாதம் 1920 களில் இருந்து தொடர்ந்து நடைபெற்றது. மூன்றுவிதமான கருத்தக்கள் கண்ணோட்டங்கள் முன்னுக்கு வந்தன. இந்திய மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்கவேண்டும் என்பது ஒருவிதமான கண்ணோட்டம். பெரும்பான்மையான கண்ணோட்டமும் அதுவேயாகும்.  இதை இடதுசாரிகள் அப்போது ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இது மட்டுமே போதாது என்று அன்றைக்கு கம்யூனிஸ்ட்கள் கூறினார்கள். மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருந்தால் மட்டும் போதாது, அதை கடந்தும்நாம் போக வேண்டிய பாதை இருக்கிறது. இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கிற அரசியல் சுதந்திரமென்பது பொருளாதார சுதந்திரமாக மாற வேண்டும், அனைத்து இந்தியர்களுக்கும் பொருளாதார சுயசார்பு கிடைக்கவேண்டும் என்று சொன்னால் அது சோசலிச பாதையில்  பயணித்தால்தான் அது நடக்கும் என்ற இரண்டாவது கண்ணோட்டத்தை கம்யூனிஸ்ட்கள் முன்வைத்தார்கள். 3வது கண்ணோட்டம் என்பது மதஅடிப்படையிலான கண்ணோட்டம். ஒரு இஸ்லாமிய தேசம் உருவாகவேண்டும் என்ற கருத்தோட்டத்தை முஸ்லீம் லீக் அப்போது வைத்தது.  அதைப்போல ஒரு இந்து தேசம் உருவாகவேண்டும் என்கிற கருத்தை ஆர்எஸ்எஸ் முன் வைத்தது. எனவே இஸ்லாமிய தேசம் அமையவேண்டும் என்று முஸ்லீம்லீக் முன்வைத்த கருத்தாக  இருந்தாலும் இந்துதேசம் உருவாகவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் முன்வைத்த கருத்தாக இருந்தாலும் இந்த இரண்டுமே மத அடிப்படையில் இந்தியா வடிவமைக்கப்படவேண்டும் என்கிற 3வது  கண்ணோட்டத்தினுடைய இருபக்கங்களாகும்.
சுதந்திற்கு பிறகு நமது தேசத்தலைவர்களும் நாட்டுமக்களும் ஆர்எஸ்எஸ் கருத்தியலையும் கண்ணோட்டத்தையும் தெளிவாக நிராகரித்தார்கள்.  ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு இஸ்லாமிய தேசம் வேண்டும் என்கிற நிலையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. இவ்வளவு போராட்டங்களுக்கு விவாதங்களுங்கு ஒரு கருத்தியல் மோதலுக்குப் பிறகு இந்தியா ஒரு  மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்கிறது. இது நடந்த பிறகு மகாத்மா காந்தி படுகொலைசெய்யப்படுகிறார். இந்தியா  இப்படித்தான் கட்டமைக்கப்பட வேண்டும் என்கிற கருத்துக்கும் காந்தியின் படுகொலைக்கும் சம்மந்தம் இருக்கிறதென்பதை பார்க்கவேண்டும்.  இந்த முடிவு எடுத்தகாரணத்தினால் காந்தியின் படுகொலை நடந்தது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அன்று இருந்து உள்துறை அமைச்சர் படேல் அவர்களால் தடை செய்யப்பட்டது. தடைசெய்யும்போது படேல் கூறியதை நான் இங்கு நினைவுபடுத்தவிரும்புகிறேன்.  ஆர்எஸ்எஸ் கட்டமைக்கிற வளர்த்து விடுகிற வன்முறைக் கலாச்சாரம் ஏராளமான உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. அதன் அண்மைக்கால உதாரணம் தான் காந்தியடிகளைப் பலி வாங்கியிருக்கிறது என்று ஆர்எஸ் எஸ் தன்மை குறித்து இன்று எந்த பட்டேலுக்கு மிகப்பெரிய சிலை வைக்கவேண்டும் என்று அவர்கள் பேசுகிறார்களோ அந்த பட்டேல் தான் இப்படிச் சொன்னார்.
காந்தியின் படுகொலைகளுக்கு பிறகு இந்த வெறியாட்டம் நின்று விடும் என்று நாம் நினைத்தோம். ஆனால் அந்த வெறியாட்டம், மோதல் முடியவில்லை. இன்றும் நீடிக்கிறது. எனவே தான் இன்றைக்கு நமது முன்னால் இருக்கக்கூடிய சவால்களில் பிரதானமாக எதைப்  பார்க்க வேண்டும் என்றால் நவீன இந்தியா, இன்னும் தொடர்ச்சியாக மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக நீடிக்கவேண்டும், பாசிச தன்மையுடைய இந்து தேசமாக ஆர்எஸ்எஸ் வழிகாட்டக்கூடிய வகையிலான தேசமாக ஆகிவிடக்கூடாது என்பதற்கான போராட்டம் நமது முன்னுள்ள மிக முக்கியமான போராட்டமாகும். அந்தப் போராட்டத்தின் முதல் அடியாகத்தான் இன்று கருத்து சுதந்திரத்தைப் பார்க்கிறோம். காரண காரியங்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு இருந்தால் பாசிச தன்மை கொண்ட இந்து தேசத்தை அவர்களால் உருவாக்கமுடியாது. எனவே தான் அவர்கள் என்னதான் நிர்பந்தங்களைக் கொண்டு வந்தாலும் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் கொண்டு வந்தாலும் அதை நாம் எதிர்த்து நிற்கவேண்டும். கருத்துச் சுதந்திரம் காரண காரியங்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு, கருத்து சுதந்திரத்தையும், மாற்றுக் கருத்துக்களையும் விமர்சனங்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு அதை உயர்த்திப் பிடித்து அவர்கள் கொண்டு வருகிற ஒடுக்குமுறைகளை வரலாற்றினுடைய கடந்தகால குப்பைக்கூடத்தின் ஒருபகுதியாக மாற்றவேண்டிய கடமை உங்களுக்கும் எங்களுக்கும் உள்ளது. இது நீங்களும் நாங்களும் இணைந்து நடத்துகிற போராட்டத்தால் மட்டுமே சாத்தியமாகும்.
இவ்வாறு யெச்சூரி பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.