ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம், என்று மிகவும் படாடோபத்துடன் பிரதமர் மோடி அறிவித்தார்.   இதுவும் ஒரு ஏமாற்றுத் திட்டமேயாகும். இந்தத் திட்டத்தில் இரு பகுதிகள் உள்ளன.  முதலாவது, 1 லட்சத்து 50 ஆயிரம் “சுகாதாரம் மற்றும் நல மையங்கள்” உருவாக்குவது. முன்பு இருந்துவந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத்தான் புதிய பெயர் கொடுத்து மாற்றப்பட இருக்கிறது. 1 லட்சத்து 53 ஆயிரம் துணை மையங்கள் ஒவ்வொன்றுக்கும்  வெறும் 1200 ரூபாய்தான் 2018-19 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மற்றொரு பகுதி, பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா (PMJAY- Pradhan Mantri Jan Arogya Yojana) என்பதாகும். இதுவும் முன்பு இருந்து வருகிற ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY- Rashtriya Swasthya Bima Yojana)  என்னும் திட்டமேயொழிய  வேறல்ல. பழைய திட்டம் புதிய ஆடை உடுத்தி வருகிறது, அவ்வளவுதான்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் 10 கோடி குடும்பங்கள் (50 கோடி மக்கள்) சேர்க்கப்படுவார்கள் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் அளிக்கக்கூடிய விதத்தில் இது  அமைந்திடும் என்றும், அல்லது, தலைக்கு ஒரு லட்சம் துருபாய் அளிக்கப்படும் விதத்தில் இது  அமைந்திடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடும் மிகவும் அற்பமாகும். வெறுமனே 2 ஆயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஓராண்டுக்கு ஒரு நபருக்கு வெறும் 40 ரூபாய்தான் அளிக்கப்படும். இதில் மாநில அரசாங்கமும் மேற்கொள்ளக்கூடிய செலவினங்களையும் சேர்த்தோமானால் (இத்திட்டத்திற்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநிலங்கள் 40 சதவீதமும் ஒதுக்கிட வேண்டும்), பின், நபர் ஒருவருக்கு ஓராண்டிற்கு வெறுமனே 67 ரூபாய்  அளவிற்குத்தான் வரும்.

இத்திட்டத்திற்கு இவ்வாறு மிகவும் குறைந்த அளவிற்கே நிதி ஒதுக்கீடுகள் செய்திருப்பதிலிருந்து அரசாங்கம் இதன்மூலம் இரு குறிக்கோள்களை எய்திடத் திட்டமிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. முதலாவது இதனைத் தனியாரிடம் தாரை வார்ப்பது. பாஜக ஆளும் பல மாநிலங்களில் ஏற்கனவே பி-பி-பி எனப்படும் (பொது-தனியார்-பங்களிப்பு) (Public-Private-Partership) மாடலின்கீழ் இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இன்சூரன்ஸ் கம்பெனிகள் சேவை அளிப்பவர்களாகச் செயல்படுவார்கள். பொது சுகாதாரத் திட்டத்தை தனியாரிடம் தாரை வார்ப்பதற்கும், அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அளிப்பதிலிருந்து மத்திய – மாநில அரசுகள் தங்களைக் கழட்டிக் கொள்வதற்கும் –இவ்வாறு இரு குறிக்கோள்களையும் எய்துவதற்கே இத்திட்டம் கொண்டுவரப் பட்டிருக்கிறது.

(புதுதில்லியில் 2018 அக்டோபர் 6 – 8 தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆவணத்திலிருந்து.)

(தமிழில்: ச.வீரமணி)

Leave a Reply

You must be logged in to post a comment.