எனக்குத் தெரிந்து கேரளாவில் அறிவார்ந்த, தெளிவாய்ப் பேசுகின்ற, தகவல்கள் அறிந்த பெண்கள் பலரும் இருக்கின்றனர். எனவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைவதை எதிர்த்து பல பெண்களும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து வருவது எனக்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றது. பாரம்பரியத்தையும், சடங்கு நடைமுறைகளையும், பெண்ணின் நிறைவேறாத கர்ப்பத்தில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றலையும் கோவிலுக்குள் நுழைவதற்கான தடைக்கு ஆதரவாக அவர்கள் மேற்கோள் காட்டும் போது எனக்கு குழப்பமாகவும் அதே நேரத்தில் கோபமாகவும் இருக்கிறது.

பாரம்பரியம் என்பது ஒன்றும் ஒரு உயர் பாதுகாப்புச் சிறை இல்லை. அது ஒரு வகையில் கூட்டு நினைவாகவும், சில சமயங்களில் ஆவணப்படுத்தப்பட்டதாகவும் இருந்தாலும், பெரும்பாலும், இந்தியாவில் இருப்பதைப்போல நிச்சயம் இருப்பதில்லை. நினைவுகள் பெரும்பாலும் நம்பத்தகுந்தவையாக இருப்பதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அது நிச்சயமாக காலத்திற்கேற்றவாறு மாறிக் கொள்ளும் தன்மை கொண்டது. பாரம்பரியம் என்பது மதிக்கப்பட வேண்டியது என்றாலும், நெறிமுறைகள் என்பவை மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு யுகத்திற்கென்றும் தனியாக ஆன்மீக பழக்கவழக்கங்கள் இருப்பதாகவும், ஒரு காலத்தில் பின்பற்றக்கூடிய பழக்கவழக்கங்கள் மற்றொரு காலத்திற்குப் பொருந்தாது என்றும் பாகவதம் கூறுகிறது. அதனால் என்ன?

மாதவிடாய் ரத்தம் என்பதை தூய்மையற்றதாகக் கருதி, பருவமடைந்த காலத்தில் இருந்து மாதவிடாய் நின்று விடும் காலம் வரையிலும் கோயிலுக்குள் நுழைய பெண்களுக்குத் தடை விதிப்பது என்பது சரியென்றால், கழிவுப்பொருட்களை வெளியேற்றுகின்ற ஆற்றல் என்பது ஆண்களிடம் இல்லவேயில்லையா? மாசுபடுத்துபவர்களாக அவர்கள் இருப்பதேயில்லையா? ஒருவேளை ஆண்கள் கருப்பை சுமப்பவர்களாக இருந்திருந்தால், கோயிலுக்குள் நுழைவதற்கான விதிகள் வேறு மாதிரியாகவே இருந்திருக்கும்.

சபரிமலையின் மீது ஐயப்பன் அமர்ந்திருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. சபரி என்ற பெண் ஸ்ரீராமனின் சிறந்த பக்தையாக இருந்தவள். வயதான பெண்ணாகச் சித்தரிக்கப்படும் அவள், எப்போதுமே வயதானவளாக இருந்தவள்தானா? நிச்சயமாக இல்லை. அவளுடைய பக்தி சிறு வயதிலே தொடங்கி, மாதவிடாய் காலத்திலும் தொடர்ந்தது. அவளது குருவான மாதங்கா ரிஷி என்பவரால் அவளுடைய நம்பிக்கையானது வளர்த்தெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதனால் என்ன?

சபரிமலை மீதமர்ந்திருக்கும் தெய்வமான ஐயப்பன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவே கருதப்படுகிறது. சமவெளிகளில் கிடைத்த மகிழ்ச்சி, ஆசைகளைத் துறந்து விட்டு தன்னுடைய தவத்திற்காக தனிமையான ஓரிடத்தில் தன்னை இருத்திக் கொண்டதாலேயே அவருக்கு அசாதாரணமான ஆன்மீக சக்தி கிடைத்தது என்பது உண்மையென்றால் அவருக்குத் தேவைப்படுகின்ற தனிமையை ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஏன் மதிக்கக்கூடாது? மிகுந்த ஆழமான பக்தி கொண்டவர்கள், நாற்பது நாட்களுக்கு மட்டுமே தங்களுடைய கடுமையான எளிய பழக்கங்களையும், சுய ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காத, அவற்றை நீண்ட நெடிய காலத்திற்கு கடைப்பிடித்து வருபவர்கள் மட்டுமே ஐயப்பனை அணுக முடிவதாக இருக்க வேண்டும். இது ஆண், பெண் என்று அனைத்து வயதினருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். மிகக் கடினமான, ஆன்மீகப் பாதையில் நடந்து செல்வதற்கு  பெண்களுக்கான சுதந்திரம் தரப்பட வேண்டும். அதைத் தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பு முதிர்ச்சியடையாத சிறுவயது அல்லது வயதானவர்களுக்கு மட்டும் என்பதாக இல்லாமல் அனைத்துப் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

நான் அறிந்த கேரளா திறந்த மனதுடன் இருப்பதற்கான வாய்ப்பை எனக்கு அளித்தது. மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பை அளித்தது மட்டுமல்லாது எல்லா மதங்களையும் போற்றிடவும், இந்த உலகின் அனைத்து அம்சங்களையும் மதித்திடவும் என்னைக் கேட்டுக்கொண்டது.

கேரளப் பெண்களே, உங்களை அடிமைப்படுத்துவதற்கோ அல்லது சிறைக்கம்பிகளை உங்கள் முன்பாக கொண்டு வந்து வைப்பதற்கோ நீங்கள் அனுமதித்தால், உங்கள் மகள்களோ அல்லது பேத்திகளோ உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

அவர்கள் மட்டுமல்ல . . .அந்த சபரிமலையும் உங்களை மன்னிக்கப் போவதில்லை.

                                                                                                – பொய்லே சென்குப்தா –

( நாவலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் குறுநாவல் எழுத்தாளர் )

தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு – விருதுநகர்

Leave A Reply

%d bloggers like this: