வேலை வாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடியும், அவருடைய அரசாங்கமும் கூறி வந்தமைக்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு நாளும்  உயர்ந்துகொண்டிருக்கும் கசப்பான எதார்த்த நிலையை நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் ரயில்வே துறையில் 62,907 நான்காம் பிரிவு ஊழியர் பணியிடங்களுக்காக செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற ரயில்வே வேலைவாய்ப்பு வாரியம் (Railway Recruitment Board) நடத்திய தேர்விற்காக, 1 கோடியே 90 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. ரயில்வேயில் எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிகல் போன்ற துறைகளில்  கேங்மேன், கேட்மேன், ஹெல்ப்பர்கள்  போன்ற பணியிடங்களுக்கே இந்த விண்ணப்பங்கள். விண்ணப்பித்தவர்களில் முதுநிலைப் பட்டதாரிகள் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருந்தார்கள்.

முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் சுமார் 400  நான்காம் பிரிவு ஊழியர் பணியிடங்களுக்கு,  23 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களில் 50 ஆயிரம் பேர் பட்டதாரிகள். இதேபோன்று மேற்கு வங்கத்தில், 2017இல், 6,000 நான்காம் பிரிவு ஊழியர் பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்விற்காக, 25 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள்.  இவர்களிலும் பலர் பட்டதாரிகள், அல்லது முதுநிலைப் பட்டதாரிகள். மும்பையில், 1,137 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்விற்கு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பது +2 தான். ஆனால் வந்திருந்தவர்களில் 543 பேர் முதுநிலைப் பட்டதாரிகள், 425 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள்.

மேற்கண்ட விவரங்களிலிருந்து, வேலைவாய்ப்புக்காகப் போட்டியிடு பவர்களில் பெரும்பாலானவர்கள் அவ் வேலைக்குத் தேவையான கல்வித்தகுதியைவிட அதிக அளவில் படித்தவர்கள் என்பதாகும். இவற்றிலிருந்து படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை எந்த அளவிற்கு மிகவும் கொடுமையானதாக இருக்கிறது  என்பதைக் காணமுடிகிறது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், ‘இந்தியாவில் வேலையிலிருப்போர்’ குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையானது, இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேற்படி அறிக்கையில், பட்டதாரிகளின் மத்தியில் உள்ள  வேலையின்மை என்பது ஒட்டுமொத்த வேலையில்லாதவர்களின் தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம் என்று கூறியிருக்கிறது. மேலும், இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் மிகவும் படித்த இந்தியர்கள் மத்தியில்  வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இப்போதுதான் உச்சத்தில் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது. மேலும் நாட்டில் மொத்தத்தில் வேலையில்லாதிருக்கும் 2 கோடியே 30  லட்சம் பேர்களில் 90 லட்சம் பேர் பட்டதாரிகள், அல்லது, அதிக அளவு படித்தவர்கள்  என்றும்  குறிப்பிட்டிருக்கிறது.

 வேலையிலிருப்பவர்களிலும் தங்களின் தகுதிக்குக் குறைவான வேலையிலிருப்பவர்களும், அல்லது தங்களுடைய தகுதிக்கேற்ற ஊதியம் பெறாமல் இருப்பவர்களின் (under-employed) எண்ணிக்கையும் பெரிய அளவில் வீங்கியிருக்கிறது.

வேலை தேடுவோரிடம் காணப்படும் மற்றுமோர் அம்சம், இவர்களில் அதிகமானவர்கள், அரசாங்க வேலைக்கே முன்னுரிமை அளிப்பதாகும். வளர்கின்ற சமூகங்களின் ஆய்வு மையம் (Centre for the Study of Developing Societies), நாட்டின் இளைஞர்கள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, 2007க்கும் 2016க்கும் இடையேயான ஆண்டுகளில் அரசாங்க வேலைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள், 62 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

இதற்குக் காரணம், முறைசாராத்  துறைகளில் காணப்படும் வேலைவாய்ப்புகள் என்பவை பாதுகாப்பற்றவைகளாக இருப்பதும், அவற்றின் மூலம் குறைந்த வருமானமே கிடைப்பதும் மற்றும் அவற்றின் பணிநிலைமைகளும் மோசமாக இருப்பதுமேயாகும்.    அதனால்தான் முதுநிலைப் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள்கூட ரயில்வே, அல்லது, இதர அரசாங்கத் துறைகளில், நான்காம் பிரிவு ஊழியமாக இருந்தாலும் பரவாயில்லை என்று விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.  குறைந்தபட்சம் தங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் மற்றும் பல்வேறு சமூகப் பாதுகாப்புப் பயன்கள் கிடைத்திடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

பல்வேறு துறைகளிலும் வேலைகளை உருவாக்குவோம் என்று மோடி அரசாங்கம் கூறிவந்ததற்கு நேர்முரணாக, அதன் கொள்கைகள் என்பவை வேலைகளை ஒழித்துக்கட்டும் விதத்திலேயே அமைந்திருக்கின்றன. இவற்றில் பிரதானமாது, 2016 நவம்பரில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது (demonetisation) என்று அறிவித்ததாகும். சிஎம்ஐஇ எனப்படும் இந்தியப் பொருளாதாரத்தினைக் கண்காணிப்பதற்கான மையம் (CMIE-Centre for Monitoring Indian Economy) மேற்கொண்ட ஆய்வறிக்கையின்படி, இதன் தாக்கத்தால் 35 இலட்சம் வேலைகள் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டன.

சிஎம்ஐஇ அறிக்கையானது மேலும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலமாக பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு என்பது எந்த அளவிற்குக் கூர்மையாக வீழ்ந்துவிட்டது என்பதையும் காட்டியிருக்கிறது. உலகில் பெண்கள் வேலைபார்க்கும் சதவீதம் மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

இவ்வாறு, மோடி அரசாங்கத்தின் கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் வேலைவாய்ப்பு சம்பந்தமாக வெளியாகி இருக்கும் தரவுகளிலிருந்து ஓர் அடிப்படை உண்மை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, நவீன தாராளமயக் கொள்கைகளின் மூலமாக வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது என்பதேயாகும். அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது 2018 ஏப்ரலிலிருந்து ஜூன் இறுதிவரையிலான காலத்தில், 8.2 சதவீதம் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. ஆனால், வேலைவாய்ப்பு என்பதோ ஒரு சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் செம்மையாக இருப்பதுபோல் தோன்றும் அதே சமயத்தில், வேலையின்மை விகிதமோ இந்த ஆண்டின் ஆகஸ்டில் 6.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது ஜூலையில் 5.6 சதவீதமாக இருந்த விகிதத்தைவிட அதிகமாகும்.  மேலும் 2017 ஆகஸ்டில் பதிவு செய்யப்பட்டிருந்த வேலையின்மை விகிதமான 4.1 சதவீதத்தைவிட மிகவும் அதிகமாகும்.

ஒவ்வோராண்டும் 1 கோடியே 20 லட்சம் இளைஞர்கள் வேலை தேடி தங்களைப் பதிவு செய்துகொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் மோடி அரசாங்கமோ போதுமான அளவிற்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதையே மேலே உள்ள புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

விவசாய நெருக்கடி என்றென்றும் நீடித்திருக்கக்கூடிய விதத்திலேயே மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்திருப்பதால், கிராமப்புற வேலையின்மையும் மிகவும்  அதிகரித்திருக்கிறது.  இந்தியாவில் தொழிலாளர் படையில் 50 சதவீதம் விவசாயத்தைச் சார்ந்திருக்கிறது. தனியார்மயக் கொள்கைகளும், சந்தை சம்பந்தமான அனைத்து அடிப்படைச் சேவைகளும் தனியாருக்கேத் திறந்து விடப்பட்டிருப்பதாலும், வேலைவாய்ப்பு அதிக அளவு முறைசாராத் துறையிலேயே இருந்துவருகின்றன.  இவ்வாறு முறைசாராத் துறைகளில் வேலை பார்ப்பவர்கள் குறைந்தபட்ச ஊதியமின்மை, வேலை பாதுகாப்பின்மை மற்றும் சமூகநலத் திட்டங்களின் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் மாற்று என்று சொன்னால் அது “சுய வேலைவாய்ப்புதான்”.  வாழ்வதற்கான வழிமுறைகள் அற்றவர்கள் பயன்படுத்தும் இடக்கரடக்கடல் சொல்லாக “சுயவேலைவாய்ப்பு’’ என்பது இருந்து வருகிறது. இவ்வாறு வேறு வழியின்றி பெட்டிக்கடை வைத்திருப்பவர்களைப் பார்த்துத்தான், மோடி, “பக்கோடா விற்பதும்” நாகரிகமான வாழ்வாதாரம் என்று கேலி செய்திருக்கிறார்.

இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களுக்கு உருப்படியான வேலைகள் வழங்கப்பட வேண்டுமானால், நாளும் அதிகரித்துவரும் வேலையில்லா இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் சமூக உற்பத்திச் சார்ந்த வேலைகளை அளித்திட வேண்டுமானால், தற்போது ஆட்சியாளர்களால் பின்பற்றப்படும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் நிராகரிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகள் அதனிடத்தில் வைக்கப்பட வேண்டும்.

(அக்டோபர் 17, 2018)

(தமிழில்: ச. வீரமணி)

Leave a Reply

You must be logged in to post a comment.