===என்.ராஜேந்திரன்===
மொபைல் போன்களை சார்ஜ் போடுவதற்கும், டேட்டாக்களை பரிமாறுவதற்கும், கணினிகளுடன் பிற சாதனங்களை இணைப்பதற்கும் உதவியாக இருப்பது யுஎஸ்பி தொழில்நுட்பம். Universal Serial Bus Connector என்பதன் சுருக்கமே USB.கணினி, பிரிண்டர், ஸ்கேனர் எனப் பல்வேறு சாதனங்களை இணைக்க கணினி நிறுவனங்கள் அவரவர் வசதிக்கேற்ப இணைப்பு வசதிகளை வழங்கிவந்ததை மாற்றி உலகளவில் ஒரே தரத்தை உருவாக்க வந்ததுதான் யுஎஸ்பி தொழில்நுட்பம். ஒரே மாதிரியான கட்டமைப்பும், பயன்படுத்த எளிதானதாகவும், விரைவான செயல்திறன் மிக்கதாக இருப்பதால் உலக அளவில் வரவேற்பையும், பயன்பாட்டையும் பெற்றது.

யுஎஸ்பி வகைகள்
1996ல் யுஎஸ்பி 1.0 வெளியானது. அதற்கடுத்து யுஎஸ்பி 2.0 வந்த பிறகு இதன் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது. இன்று வரை 2.0 தரத்தில் அமைந்த யுஎஸ்பி இணைப்பு சாதனங்களே மக்களிடையே பிரபலமாக உள்ளன. யுஎஸ்பி தரத்தை ஒழுங்கமைத்து வெளியிட ஒரு பன்னாட்டு ஒருங்கிணைப்பு குழு உள்ளது. அதன் பெயர் யுஎஸ்பி-ஐஎப் (USB-IF).இக்குழுமம் 2008ல் வெளியிட்ட மேம்படுத்தப்பட்ட யுஎஸ்பி 3.0 நுட்பம் டேட்டா பரிமாற்றத்தில் புதிய வேகத்தை வழங்கியது. யுஎஸ்பி 2.0வை விட 3.0வானது பத்து மடங்கு வேகமாக தகவல்களை கடத்தும் திறன்பெற்றது. முன்பு வெளிவந்த யுஎஸ்பி 1.1, 25 ஜிபி அளவுள்ள டேட்டாவை கடத்த 9.3 மணிநேரத்தையும், யுஎஸ்பி 2.0வானது 13.9 நிமிடத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் யுஎஸ்பி 3.0வானது எடுத்துக்கொள்ளும் நேரம் 70 வினாடிகள் மட்டுமே.

யுஎஸ்பி போர்ட்டில் உள்ள நான்கு முனைகளில் முதல் முனை மின்னழுத்தத்தையும் (Voltage), 2வது முனை நேர் மறை தகவல் பரிமாற்றம் (Data +), 3வது முனை எதிர்மறை தகவல் பரிமாற்றம் (Data -), 4வது முனை தரை இணைப்பையும் (Ground (GRD) குறிக்கிறது.

மொபைல்போன்களில் யுஎஸ்பி பயன்பாடு
டேட்டாவிற்கு ஒரு பின், சார்ஜ் செய்வதற்கு ஒரு பின், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்ப ஒரு பின் என பல விதமான பின்களிலிருந்து நம்மை விடுதலை செய்தது இதே யுஎஸ்பி தொழில்நுட்பம்தான். இன்று மைக்ரோ யுஎஸ்பி போர்ட்களே மொபைல் போன்களுக்கும் பொதுவான தொழில்நுட்பமாக கடைபிடிக்கப்படுகிறது.

மொபைல்களுக்கான மைக்ரோ யுஎஸ்பி போர்ட்களில் இருந்த ஒரு சிக்கல் அதனை சரியாக பொருத்தாமல் தவறுதலாக மாற்றிப் பொருத்திவிடுவதுதான். இதனை களையும் விதத்தில் எந்தப் புறமாக மாற்றிப் பொருத்தினாலும் (reversible connector) செயல்படக்கூடிய புதிய யுஎஸ்பி டைப் சி (Type – C) கனெக்டர் 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.தற்போது பயன்பாட்டில் உள்ள USB 2.0 கனெக்டருக்கு இணையான மொபைல் மைக்ரோ யுஎஸ்பி கனெக்டர் மூலமாக அதிகபட்சமாக 480 Mbps வேகத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்யலாம். ஆனால், புதிய USB Type – C போர்ட்டில் நொடிக்கு 5 ஜிபி என்ற அளவில் தகவல் பரிமாற்றம் செய்யலாம். இது யுஎஸ்பி 3.0 கனெக்டர்களுக்கு இணையான செயல்திறனைக் கொண்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.